Published:Updated:

மீண்டும் ஒரு ரீமேக்கா..?! - மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

மீண்டும் ஒரு ரீமேக்கா..?! - மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
மீண்டும் ஒரு ரீமேக்கா..?! - மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

மீண்டும் ஒரு ரீமேக்கா..?! - மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ரீமேக்குகளுக்குப் பிறகு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தட்டத்தின் மறயத்து' படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். ஆனால், மலையாளத்தில் படம் செய்த மேஜிக் தமிழில் நிகழ்த்தியிருக்கிறதா? 

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வினோத் (வால்டர் பிலிப்ஸ்) நண்பனின் திருமணத்தில் ஆயிஷாவைப் (இஷா தல்வார்) பார்த்ததும் காதலில் விழுகிறார். கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பம் இஷா தல்வாரினுடையது. இஷா, அவரது அக்கா மற்றும் அப்பா தலைவாசல் விஜய் எல்லோருக்கும் பெரியப்பா நாசர் சொல்வது தான் வேதவாக்கு. இந்தக் கட்டுப்பாடுகளை மீறி இவர்கள் காதல் சேர்ந்ததா என்ற மிக பழக்கப்பட்ட கிளைமாக்ஸ்.

இஷாவின் பார்வைக்காக ஏங்குவது, அவளிடம் பேசுவதற்காகத் துடிப்பது, அவளைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் காதலைக் காட்டுவது என நடிக்க பெரிய ஸ்கோப் இருந்தும் அவ்வளவு வலுவாக இல்லை வால்டரின் நடிப்பு. ஒரிஜினல் தட்டத்தின் மறயத்து படத்தில் நிவின் பாலியின் நடிப்பைப் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக வால்டரின் நடிப்பு அத்தனை ஈர்ப்பாக இருக்காது. ஆயிஷா ரோலில் தமிழிலும் இஷாவே நடித்திருப்பது நலம். ஆனால், தட்டத்தின் மறயத்து வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதென்பது இஷா தல்வாரின் முகத்திலேயே தெரிவது அநலம்! 

அர்ஜுனன் நந்தகுமார், வித்யுலேகா இடையிலான காட்சிகளில் காமெடி... வெரி ஸாரி! ”சிக்ஸ்-பேக்” வைக்கிறவன்லாம் ஜட்டி விளம்பரத்துல தான் நடிக்கணும்” என்பது போன்ற ஜெகஜீவனின்  வசனங்கள் அவ்வப்பொழுது சிரிக்கவைக்கிறது. நாகர்கோவில் தான் கதைக்களம், இருப்பினும் அந்த ஊர் பாஷை வசனத்தில் வரவில்லை என்பது வருத்தம்.  

போலீஸ் வாகனத்திலேயே சுற்றிவரும் மனோஜ் கே ஜெயனின் நடிப்பு கச்சிதம். இருப்பினும் உங்களுக்கு வேற கேஸே வராதா பாஸ் என்பது போல, ஹீரோவிற்காக ஹெல்மெட் விற்பனையில் இறங்குவது, க்ளைமேக்ஸில் எல்லோரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சுற்றுவது, திருச்செந்தூர் முருக பக்தி என... முடியல சாமி.   நாசர் வருவதும், போவதுமாக இருக்கிறாரே தவிர, பேசப்படும் அளவிற்கு வலுவான கதாபாத்திரமோ, வசனமோ இல்லை. 

இந்து பையன், முஸ்லீம் பெண்ணை காதலிப்பது, என்ற அழகிய முரணும், அதற்கான விடையும் தான் படத்திற்கான கவனஈர்ப்பு. அதை ரீமேக்கிலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். கருப்பு திரைக்குப் பின், ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மனசும், அதில் அழகான ஒரு கனவும் இருக்கிறது. நம்ம கெளரவத்திற்கும், பயன்பாட்டிற்கும் பொண்ணுங்க வாழ்க்கையை பகடியாக்க கூடாது என்ற அழகிய ஒன் லைன் மட்டும் படம் முடிந்தும், நினைவில் நிற்கிறது. 

முழுக்க முழுக்க காதல், இதயத்தை தொடும் இசை, கதை உருவாக்கம், கதை சொல்லும் விதம் என்று காதலை அழகியலை  தட்டத்தின் மறயத்து படம் கசிய விட்டிருக்கும். அதனாலேயே அப்படம் மலையாளத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால், தமிழில் அந்த ஃபீல்... ப்ச்! 

படம் முழுக்க நம்மை ஈர்ப்பது விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும், ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் மட்டும் தான். மை போட்டு பாடல் மட்டும் ஒகே மற்ற எல்லா பாடல்களும் அதே ஜீவி டெம்ப்ளேட். 

தமிழ் சினிமாவில் சில காலம் ’ரீமேக்’ டிரெண்டுக்கு லீவ் விடலாமா மக்களே...!

அடுத்த கட்டுரைக்கு