Published:Updated:

ரத்தமும் ரத்த நிமித்தமுமாக....- கிடாரி விமர்சனம்

ரத்தமும் ரத்த நிமித்தமுமாக....- கிடாரி விமர்சனம்
ரத்தமும் ரத்த நிமித்தமுமாக....- கிடாரி விமர்சனம்

நந்தா, பீமா என தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதே காட்ஃபாதர்- காட்சன் கான்செப்ட் தான். சண்டித்தனம் செய்யும் ஊர் பெரியவர்; அவரின் காவலுக்கு கூடவே இருக்கும் சிஷ்யப்பிள்ளை. இந்த இருவருக்கும் தெருவுக்கு நான்கு எதிரிகள். அதற்கான காரணங்களும் விளைவுகளுமே கிடாரி.

சாத்தூரில் வேல.ராமமூர்த்தி பெரிய தலைக்கட்டு. ஆட்டுச்சந்தையில் ஆரம்பித்து இவர் ஆட்டுவிக்காத தொழிலே கிடையாது. கெளரவத்துக்கும், மரியாதைக்கும் ஆசைப்படும் இவரின் மகனுக்கு அந்த அளவுக்கு திறமை போதவில்லை. அந்த இடத்தில் இருக்கிறார் சசிகுமார். வேல.ராமமூர்த்தியை யாரோ கழுத்தில் சதக் சதக் செய்துவிட, யாராக இருக்கும் என்ற வாய்ஸ் ஓவரோடு கதை தொடங்குகிறது. வில்லன்கள் இரண்டு இரண்டு பேராக அறிமுகமாக, வேல.ராமமூர்த்தியின் வாழ்க்கைப்பக்கங்களை புரட்டுகிறது படம். பக்கத்துக்கு பக்கம் துரோகமும், ரத்தமும்தான். அவரின் கதைக்கு முற்றுப்புள்ளி யார் வைத்தார்கள் என்பதுதான் சஸ்பென்ஸ்.

திரை முழுக்க சிவப்பு நிறம். அதில்தான் டைட்டில் கார்டே. அது முடிந்ததும் ஃப்ரென்ச் படங்களில் வரும் முறுகலான ஆங்கிளில் ஒரு பழைய வீட்டின் அறை. திடீரென ஃப்ரேமுக்குள் ஓடுகிறது ரத்தம். கொழகொழவென அப்போதுதான் பீறிட்டு வருகிறது. அந்த ரத்தத்தின் மிச்சத்தைப் பூசிக்கொண்டு ஒரு கை. உதவி வேண்டி மேலெழுகிறது. வாசிக்கும்போதே துணுக்குறச் செய்யும் இவையாவும் திரையில் விரிவதுடனே படம் தொடங்குகிறது. வன்முறைதான் இவர்களின் வாழ்வியல் என சாக்கு சொன்னாலும், இது ரொம்பவே அதிகம்தான்.
அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் அட்டகாசமான வரவு. உலக சினிமாக்களின் இலக்கணங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். பிற ஹாலிவுட் ஆர்வலர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறார் தன் மேக்கிங்கில். மிரட்டியிருக்கிறார். இவரின் அடுத்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

கிடாரி சசிகுமாருக்கு, பழக்கப்பட்ட வேலைதான். ஆனால், அது திரையில் வேறு மாதிரியாக வந்திருப்பதுதான் புதுசு. செக்ஸ், வன்முறை, குரோதம். இவைதான் விற்கும் என்றாலும், அதில் ஒரு புது மாதிரியான படத்தை தயாரித்து நடித்ததற்கு பாராட்டியே ஆக வேண்டும். 
Casting.... படத்தை தூக்கி நிறுத்துவது இந்த விஷயம் தான். மெயின் கொம்பையா பாண்டியனில் தொடங்கி, அந்த புத்தி சுவாதீனமற்ற பெரியவர் வரை ஒவ்வொரு கேரக்டருக்கும் பக்கா ஃபிட். 

எஸ்.ஆர்.கதிரின் கேமராவுக்கு புது அரிதாரம். மூவ்மெண்ட்டிலே ஒரு கதாபாத்திரத்தை தாண்டியபின் இன்னொரு முகத்தை காட்டுவது, டூ ஷாட், த்ரீ ஷாட்களை சூழ்நிலைக்கு ஏற்ப கையாள்வது என உலகத்தர உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

இயக்குநரின் கற்பனைக்கும், கேமராமேனின் உழைப்புக்கும் தன்னால் எந்த பங்கமும் வந்துவிடாமல் பார்த்து பார்த்து இசையை கோர்த்திருக்கிறார் தர்புகா சிவா. “கிடாரியே உன் போல” எல்லா எஃப்.எம்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். அது மாதிரி 10 மடங்கு சிறந்த பின்னணியை கொடுத்திருக்கிறார். கிடாரி, உங்களுக்கு ஒரு ரெட் கார்பெட் பாஸ். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் தமிழ் சினிமா.

இப்படி டெக்னிக்கலாக மிரட்டும் கிடாரி அலுப்பு தட்டுவது திரைக்கதையில்தான். கோர்வையாக ஒரு விஷயத்தை சொல்லாமல், 20 நிமிடத்திற்கு ஒரு புது அத்தியாயம் திறப்பது அலுப்பு. பின்பாதி கதையிலும் வில்லன்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தால் எப்படி பாஸ்? ரசிகன் என்ன 64 ஜிபி மெமரி கார்டா வைத்திருக்கிறான்? 

காதல் காட்சிகள் அழகு. ஆனால், ஒரு பந்தில் நான்கு ரன் அடிக்க வேண்டியவனிடம் ஆட்டோகிராப் கேட்டு கிரவுண்டுக்குள் ரசிகன் ஓடி வரலாமா? கொஞ்சம் தைரியமாக காதல் காட்சிகளுக்கு நறுக் போட்டிருக்கலாம். அதே சமயம்... அதையெல்லாம் தாண்டி முகத்தை சுழித்து இதயத்தில் சுளுக்கு விழ வைக்கிறார் நிகிலா. 

கதாபாத்திரங்கள், மேக்கிங் போன்றவற்றின் நேர்த்தி ’கிடாரி’க்கு ‘வைல்ட் கார்டு’ எண்ட்ரி கொடுக்கச் சொல்கிறது!