Published:Updated:

வெற்றி மாறன் சீக்ரெட்ஸ் - 23 #HBDVetriMaaran

வெற்றி மாறன் சீக்ரெட்ஸ் - 23  #HBDVetriMaaran
வெற்றி மாறன் சீக்ரெட்ஸ் - 23 #HBDVetriMaaran

படம்: எஸ்.கே.ஜீவா

இன்று பிறந்த நாள் காணும் வெற்றி மாறனுக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழ் சினிமாவின் சமகால இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன்.பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என ஏறிக்கொண்டேயிருக்கிறது அவரது கரியர் கிராஃப். அவரைப் பற்றிய 23 சுவாரஸ்ய விஷயங்கள்.


1) வெற்றிமாறனின் பள்ளிக்காலம் வேலூரிலும், ராணிப்பேட்டையிலும் தான். நன்றாக கிரிக்கெட் ஆடுவார். அதற்காகவே +1, சென்னையில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேர வேண்டுமென அடம்பிடித்து சேர்ந்தார். ஆனால், அப்போது அந்தப் பள்ளியில் கிரிக்கெட் தவிர மற்ற எல்லா விளையாட்டுக்கும்தான் டீம் இருந்தது என்பது ட்விஸ்ட். அதன் பின் வாராவாரம் ராணிப்பேட்டைக்கு சென்று மேட்ச் விளையாடிவிட்டு வருவார்.

2) சிறு வயதில் இருந்தே வெற்றி மாறனின் நெருங்கிய நண்பன் சக்தியும் மணியும். சக்திதான் முதலில் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர நினைத்தவர். அது நடக்காமல்,பின் வெற்றி மாறன் சேர்ந்தது தனிக்கதை. இவர்களை பார்த்து மணியும் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். அந்த மணிதான் உதயம் என்.எச் 4 படம் இயக்கிய மணிமாறன்

3) ஒரு நாளில் 150க்கு மேற்பட்ட சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவர் வெற்றி மாறன். ஒரு நல்ல இயக்குநருக்கு ஆரோக்கியம் முக்கியம் என சத்யஜித் ரே சொன்னதை உணர்ந்து, மிகவும் சிரமப்பட்டு அந்தப் பழக்கத்தை விட்டார். இப்போதும் கூட என்றாவது சிகரெட் தன்னை மீண்டும் ஆக்ரமித்துவிடுமோ என கவனமாக தவிர்த்து வருகிறார். 

4) லயோலா கல்லூரியில் பேச்சிலர் டிகிரி முடித்துவிட்டு அங்கயே பி.ஜியும் சேர்ந்திருந்தார். ஆனால், சினிமா காரணமாக அதை முடிக்காமலே விட்டுவிட்டார்.

5) வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. கல்லூரி காலத்து காதல். இந்த ஜோடிக்கு பூந்தென்றல் என்ற அழகான மகள் உண்டு. 

6) செல்ஃப் டிரைவிங் வெற்றி மாறனுக்கு பிடித்த ஒன்று, எங்கு சென்றாலும் அவரேதான் ஓட்டுவார். தனது அலுவலக பால்கனியில்தான் பெரும்பாலான நேரத்தை கழிப்பார். அலுவலகத்திலே ஜிம் ஒன்றை செட் செய்திருக்கிறார்.


7) பெருங்கோபக்காரர். இப்போது நிறைய குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

8) “வெட்டி”. பாலு மகேந்திரா வெற்றி மாறனை அப்படித்தான் அழைப்பார். 

9) முதலில் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர், பின் காதல் வைரஸ் படத்தில் கதிரிடம் வேலை செய்தார்.காதல் வைரஸ் டிஸ்கஷன் வரை வேலை செய்துவிட்டு, கதிரிடம் இருந்து வெளியே சென்று தனியே படம் இயக்கும் முயற்சியில் இருந்தார் இன்னொரு முக்கியமான இயக்குநர். அவர் மிஷ்கின்.

10) யமஹா ஆர்.எக்ஸ் பைக் வைத்திருந்தார். ஆர்த்தி வாங்கித்தந்த காதல் பரிசு அது. பாலு மகேந்திராவுடன் ஒரு சின்ன மனஸ்தாபத்தில் இருந்தவர், அந்த பைக் வாங்கிய நாளன்று நேராக அவர் வீட்டுக்கு சென்று ஆசீர்வாதம் வாங்கினார்.அந்த வண்டியின் எண் TN 10 D 3551

11) ஆர்த்தி அவர்களின் அப்பாவிடம் வெற்றி மாறனுக்காக பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தவர் பாலு மகேந்திராதான். ’அப்படி என்ன சார் சொன்னீங்க’ அவரிடம் என வெற்றி மாறன் கேட்க, அவர் சொன்னது “‘வெட்டிய எனக்கு எட்டு வருஷமா தெரியும். ஸ்மோக் பண்ணுவான். மத்த எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருநாள்கூட அவன் மேல ஆல்கஹால் ஸ்மெல் வந்தது இல்லை. ஸ்பாட்ல எந்தப் பொண்ணுகூடவும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி நான் பார்த்தது இல்லை. எட்டு வருஷம்லாம் ஒருத்தன் நல்லவனா நடிக்க முடியாது. அவன் கரியர்லயும் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. நம்பி உங்க பொண்ணைக் கொடுக்கலாம். எங்கே தேடினாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான்”

12) தனுஷ் மீது பெரிய மரியாதையும், அன்பும் வெற்றி மாறனுக்கு உண்டு. உதவி இயக்குநராக இருந்த காலத்திலே இவர் மீது நம்பிக்கை வைத்து பல உதவிகளை செய்தவர் தனுஷ். இவர்கள் கூட்டணியில் படம் ஆரம்பித்து பல முறை நின்று போயிருக்கிறது. ஆனால், கடைசிவரை வெற்றி மாறனுடன் படம் செய்தே தீருவேன் என நின்றவர் தனுஷ். 

13) காதல் வைரஸ் படத்தில் ஒரு காட்சி. ரிச்சர்ட் கையில் இருக்கும் சிகரெட் எரிந்து தீர வேண்டும். ஆனால், சாம்பல் கீழே விழக்கூடாது. அப்போது வெற்றி மாறன் சொன்ன ஐடியா ”சிகரெட்டுக்குள் ஒரு கம்பியை சொருகிவிட்டு பிடித்தால், சாம்பால் விழாது. ஆங்கில நாவல் ஒன்றில் படித்த விஷயம்”. தனக்கு வாழ்க்கை அனுபவம் குறைவு. அதை வாசிப்பு மூலம் முடிந்தவரை சரிக்கட்ட முயற்சிக்கிறேன் என்பார் வெற்றி மாறன்.

14) ஆடுகளம் படம் முடிந்த பிறகு பார்த்திபனை வைத்து ஒரு படம் தொடங்கினார். சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், ஆடுகளம் பல உலக திரைப்பட விழாக்களுக்கு சென்றது. தேசிய விருதுகள் குவித்தது. அந்த வேலைகளில் பிசி ஆனதால், அந்தப் படத்தை தொடரவே இல்லை.

15) பின், தனுஷ்-பார்த்திபன் நடிப்பில் சூதாடி என்றொரு படத்தை தொடங்கினார். சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின் தனுஷ், ஷமிதாப்பில் நடிக்க இந்திக்கு செல்ல நேரிட்டது. அந்த இடைவெளியில் தொடங்கிய படம்தான் விசாரணை.

16) தீபாவளிக்கு பொல்லாதவன் ரிலீஸ் ஆனபோது தனுஷ் யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் இருந்தார். படம் வெளியாகி ஹிட் என முடிவாக சில நாட்கள் ஆனது. அன்று ஷூட்டிங் ஸ்பாட்டிலே பட்டாசு வெடித்து “எனக்கு இன்னைக்குதான் தீபாவளி. என் செலக்‌ஷன் தப்பாகாது” என சந்தோஷப்பட்டாரம் தனுஷ்.

17) பொல்லாதவன் படத்துக்காக பல்சர் பைக் தான் வேண்டுமென தீர்க்கமாக இருந்தார் வெற்றி மாறன். தயாரிப்பாளர் தரப்பில், வேறு ஒரு பைக்கை ஸ்பான்சரில் பிடித்து தர, மனைவி ஆர்த்தியிடம் லோன் போடச்சொல்லி, புது பல்சரை வாங்கி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு போனார். பொல்லாதவன் இளைஞர்களிடம் நன்றாக ரீச் ஆனதில் பல்சருக்கும் பங்கு இருக்கிறது என்பார் வெற்றி மாறன்.

18) ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் ரோலுக்கு வெற்றி மாறனின் முதல் சாய்ஸ் பார்த்திபன் தான். அப்போது அவர் ஆயிரத்தில் ஒருவனில் பிசியாக இருந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது.

19) அது போல, நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் திரிஷா. ஃபோட்டோஷூட் எல்லாம் முடிந்த பிறகு, படம் தாமதமானதால் அவர் விலகிவிட்டார்.

20) அவரவர் செய்யும் வேலைக்கான கிரெடிட் அவர்களுக்கே செல்ல வேண்டுமென்பதில் கவனமாக இருப்பார் வெற்றி மாறன். அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் “இது அவர் சொன்னது.. இவர் செய்தது” என குறிப்பிட தவறவே மாட்டார்.

21) நாய்கள் என்றால் வெற்றி மாறனுக்கு கொள்ளை பிரியம். ராட்வெய்லர் நாய்கள் என்றால் எக்ஸ்ட்ரா அன்பு. “அழகி” என்ற ராட்வெயிலர் நாய் ஒன்றை, அவருக்கு திருமணமான அன்று வாங்கி வந்தார். 

22) “இயக்குநர் பதவி என்பது ஓர் அதிகாரம். ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்தப் படத்திற்கு போகும்போது இந்த விஷயத்தில் நான் சரியாக இருந்திருக்கிறேனா என்பதைதான் நான் பார்க்கிறேன்” என்பார் வெற்றி மாறன். 

23) தற்போது வடசென்னை படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். தனுஷ், விஜய் சேதுபதி, அட்டக்கத்தி தினேஷ், கிஷோர் என வித்தியாச கேஸ்டிங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வட சென்னைக்கு இசை சந்தோஷ் நாராயணன்.

-கார்க்கிபவா
படங்கள்: ஸ்டில் ராபர்ட்