Published:Updated:

நயனுக்கும் விக்ரமுக்கும் ‘லவ்’தான் பிரச்னையா?! #‘இருமுகன்’ - விமர்சனம்

Vikatan Correspondent
நயனுக்கும் விக்ரமுக்கும் ‘லவ்’தான் பிரச்னையா?! #‘இருமுகன்’ - விமர்சனம்
நயனுக்கும் விக்ரமுக்கும் ‘லவ்’தான் பிரச்னையா?! #‘இருமுகன்’ - விமர்சனம்

அரிமா நம்பி மேக்கிங் அசரடித்தது. அதன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஏ.ஆர்.முருகதாஸின் டீம் மெம்பர். ஸ்டைலிஷ் மேக்கிங்கும் யோசிக்க விடாத பரபர திரைக்கதையும் முருகதாஸின் சிஷ்யர்களுக்கு சிக்னேச்சர். அந்த நம்பிக்கையில் இருமுகனுக்காக ஆனந்த் ஷங்கருடன் கைகுலுக்கியிருக்கிறார் விக்ரம். ரிசல்ட்?

70 வயது முதியவர் ஒருவர் கோலாலம்பூரில் இருக்கும் இந்தியத் தூதரகத்தை ஒற்றை ஆளாகப் பிய்த்தெறிகிறார். தாத்தாவின் டாட்டூ க்ளூவில் நூல் பிடித்து விசாரிக்கிறது இந்திய உளவுத்துறை. அந்த நூல் சென்று முடியுமிடம் “லவ்”.

கொஞ்சம் கூட கருணையே இல்லாத கொடூரனின் பெயர் தான் லவ். அந்த லவ்வை முறியடிக்க வயலன்ஸ் தான் தீர்வு என, விக்ரமை அழைக்கிறது ரா. அந்த அளவுக்கு வயலண்ட் நம்ம விக்ரம். இந்த இடத்தில் நயன்தாராவை ஒரு ட்விஸ்ட் மூலம் உள்ளே கொண்டுவருகிறார்கள். இடைவேளை வரையிலான ட்விஸ்ட்களால் நிமிர்ந்து அமர வைக்கிறார்கள்.

பின் விக்ரமும், அவருடன் நித்யா மேனனும் லவ்வை தேடி மலேஷியா செல்கிறார்கள். அங்கே வில்லன் லவ், ’ஸ்பீடு’ என ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறான். ஆஸ்துமா இன்ஹேலர் போல அதை இழுத்தால், 5 நிமிடத்திற்கு அவருக்குள் நூறு குருவி, 200 வேதாளம் இறங்கிவிடும். உலகமெங்கும் இருக்கும் தீவிரவாத குழுக்கள் லவ்விடம் ஆர்டர் தருகிறார்கள். அது டெலிவரி ஆனால் உலகம் முழுவதுமே பிரச்னைதான். அந்த லவ்வை தேடிச் செல்லும் வழியில், நூடுல்ஸ் போல இரண்டு இரண்டு நிமிடங்களில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டே போகிறார் விக்ரம். நிமிர்ந்து பார்ப்பதற்குள் ஓர் அதிரடி ட்விஸ்டுடன் இடைவேளை.

அதன் பின் விக்ரம் லவ்விடம் மாட்டிக்கொள்கிறார். பின் விக்ரம் எப்படி தப்பித்தார், லவ் எப்படி சிக்கினார், மீண்டும் லவ் எப்படி தப்பித்தார், விக்ரம் எப்படி சிக்கினார், மீண்டும் விக்ரம் எப்படி தப்பித்தார், லவ் எப்படி சிக்கினார் என்பது தெரிவதற்குள் நாமே நூடுல்ஸ் ஆகிவிடுகிறோம்.

முரட்டுத்தனமான ஹீரோவாகவும், பெண் சாயல் லவ் ஆகவும் கெத்து காட்டியிருக்கிறார் விக்ரம். நளின நடையும், கை விரல் அசைவுகளும் போதும், விக்ரமின் திறமையை சொல்ல! எத்தனை கெட்டப்கள் என்றாலும் அத்தனையும் வித்தியாசம். மனிதர் கொட்டியதெல்லாம் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே. அவர் உழைத்ததில் 10% உழைத்திருக்கிறார்கள் ஹாரீஸ் ஜெயராஜும், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும். தியேட்டர் விட்டு வெளியே வந்தும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்நியன்+ கஜினி தீம் ம்யூசிக்கை குழைத்து அடித்த அந்த பிஜிஎம். மலேஷியாவை ஃபோட்டோஷாப் செய்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மற்றவர்கள் எல்லாம் மரண ஓபி. இந்த இடத்தில் விக்ரம் கவனத்துக்கு ஒரு விஷயம்.... நீங்க கொஞ்சநாள் வித்தியாசமா நடிக்காம, சாதாரணமா நடிச்சாலே வித்தியாசமா இருக்கும் ப்ரோ.. கன்ஸிடர் பண்ணுங்களேன்!

நயந்தாரா ஸ்க்ரீனில் வந்தாலே பாட்டு வருகிறது. மூன்று வித்தியாச ஜானர் பாடல்கள். காஸ்ட்யூம் தொடங்கி ஹேர்ஸ்டைல் வரை அவ்வளவும் ஃப்ரெஷ். அப்ப, பாட்டுக்கு மட்டும்தானா, என்னடா நாராயணா என ரசிகன் புலம்பலை இரண்டாம் பாதியில் லேசாக தீர்க்கிறார்கள். உயிர் கொடுப்பான் தோழன் மட்டுமல்ல, கோடம்பாக்க தோழியும் தான். நித்யா மேனன் அந்த வகையறா. கொஞ்சம் குண்டான பெண்களை தமிழ் ரசிகன் என்றைக்குமே கைவிடமாட்டான். நித்யா மேனனும் விதிவிலக்கல்ல.

ஆக்‌ஷனை நம்பி மட்டுமே போகும் திரைக்கதையில் மிகப்பெரிய ரிலாக்ஸ் தம்பி ராமையா. சிவாஜியில் ஆஃபீஸ் ரூம் போல, இதில் ‘2 மினிட்ஸ் பேசணும்’. சில சமயம் டைமிங் வசனங்களாலும், பல சமயம் பாடி லேங்குவேஜிலும் ஸ்கோர் செய்கிறார். எப்படியாவது சிரிக்க வைத்துவிடுகிறார் என்பதுதான் ஸ்பெஷல்.

எப்படியும் 36 சண்டை போட்டிருப்பார் விக்ரம். அதில் ஒரு சண்டையையாவது இயக்குநரிடம் போட்டிருக்கலாம். ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதையைக் கொஞ்சம் சரி செய்திருந்தாலே, இந்த மேக்கிங்குக்கும் விக்ரமுக்கும் படம் பட்டையை கிளப்பியிருக்கலாம்.

சுஜாதா எழுதிய மீண்டும் ஜினோவில் கூட இப்படி ஓர் உலகம் கிடையாது. எல்லாமே டெக்னாலஜி. எல்லாத்துக்கும் ஒரு டிவைஸ். எது தேவையென்றாலும் சர்வரிலே தேடுகிறார்கள்.( கதையை தேடியிருக்கலாமே பாஸ்) World Population Database என ஒன்று சொல்கிறார்கள். உலகில் யாராக இருந்தாலும் அவர் புகைப்படம் வந்துவிடுகிறது. இந்தியாவில் எல்லோருடைய ஃபோட்டோவும் இந்திய அரசிடமே கிடையாது. ஆனால், வில்லனிடம் இருக்கிறது. ஹே. ஹேய்... whats happening என முதல்வன் அர்ஜூன் போல முழிக்கிறான் ரசிகன்.
நிற்க: படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் பிறந்த வருடம் 1972, நயன் 1977 என காட்டுகிறார்கள். நயனுக்கு 39 வயதா? ஏன் பாஸ் ஏன்?

நல்ல காமிக்ஸுக்கான கதை. படம் படமாகப் போட்டு காமிக்ஸ் ஆக்கலாம். ஆனால், சினிமா ஆக்க அது போதுமா..?!