Published:Updated:

"மருத்துவமனையில் நான்!" - வலியுடன் கமல்

Vikatan Correspondent
"மருத்துவமனையில் நான்!" - வலியுடன் கமல்
"மருத்துவமனையில் நான்!" - வலியுடன் கமல்

சில நாட்களுக்கு முன்னர், கமல்ஹாசன் தன் வீட்டிலிருந்து விழுந்து,அவரது கால் முறிந்து போனது நாம் அனைவரும் அறிந்ததே.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என்று கூறினர். இதனால் தனது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க,கமல் பிளாக் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். கடந்த செப்டெம்பர் 1-ம் தேதி, அன்று என்ன நடந்தது என்பதை அந்த பிளாக்கில், ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்.அதன் தொடர்ச்சியை நேற்று எழுதி இருக்கிறார். 

"என்னுடைய பிளாக்கை படித்தவர்களுக்கு நன்றி.சிலர் பரிவாகவும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்து இருந்தனர்.சிலர், அதிலிருக்கும் பிழைகளைக் குறிப்பிட்டு இருந்தார்கள்.மொபைலில் டைப் செய்வது, பிழைகளை அதிகரிக்க வைக்கிறது.

இந்த முறை,நான் அதிகம் வசனங்களை எழுதி நிரப்ப மாட்டேன்.கண்டிப்பாக அப்படி குறிப்பிட்டவர்களிடம், நான் மல்லுக்கட்டப்போவதில்லை.ஒரு பெர்பெக்சனிஸ்ட்டான கமல், எப்படி இப்படி இருக்கலாம் என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பெர்பெக்சனிஸ்ட் அல்ல. செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஒழுங்கானதொரு முடிவை எதிர்பார்ப்பவன்.

இன்னும், அதை நோக்கி முயற்சி செய்து கொண்டு இருக்கிறேனே தவிர, என்றும் அந்த நிலையை நான் அடைந்ததே இல்லை.எந்த மதத்தையும் சாராது, சாரவும் விரும்பாது,சார்ந்து இருப்பவர்களை இகழாமல் மட்டுமே இருக்கிறேன்.அவற்றைப் பார்த்து பெறும்பாலும் பரிதாப்படுவேன், சமயங்களில் அஞ்சுவேன்.இந்த மதங்கள்  வைத்திருக்கும் குழிகள், வலைகளை பற்றியெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் சிக்கிக்கொண்ட சில வலைகளில் ஒன்று திருமணம்.ஒருமுறை அல்ல, பலமுறை சிக்கிக்கொண்டு இருக்கிறேன். மறுபடியும் , வசனங்கள் என்னை மீறி என் பக்கத்தை நிரப்புகிறது. ஒரு நடிகனுக்கு வேறென்ன தெரியும் சொல்லுங்கள். நான் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது, என்னிடம் பேச முற்படுபவர்களுக்கு, இது தான் நிகழ்கிறது.

சரி, கதைக்கு வருவோம்.

கண்டிப்பாக ரத்தமும், வன்முறையும் இருக்காதென எல்லாம் வல்ல சென்சாரிடம் உறுதி அளிக்கிறேன் U/A 

ஆம்புலன்ஸ் ஒன்றும் அதிவேகமாக செல்லும் வாகனமில்லை என்றாலும், அதில் எனது வாழ்க்கையை துரத்திக்கொண்டு இருந்தேன். ஆம்புலன்ஸ் எனது அலுவலகத்தை அடைந்த போது, நான் அந்த இடத்தில், ஒரு மணி நேரமாக கிடத்தப்பட்டு இருக்கிறேன்  என எனது வலி உணர்த்தியது. கவுதமிக்கு எல்லாம் தெரியும் என்றாலும், நான் சில மருத்துவ ஆலோசனைகளை கூறலாமா என யோசித்துக்கொண்டு இருந்தேன். பிறகு தான் அப்பல்லோவின் வாகனம் 15 நிமிடத்தில் வந்தது என்றும், அது நானிருக்கும் இடத்திற்கு வந்து சேர 20 நிமிடம் ஆனது என்றும் சொன்னார்கள். இத்தனைக்கும் அது 100 அடி தூரம் தான். 

நான் மயங்காமல், விழித்திருந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இப்படி செய்யுங்கள் என கூறி இருக்கிறேன் போலும். அவர்களுக்கு நன்றி சொல்லாமல், தண்டுவட முறிவு போல் தெரிகிறது, எனது காலை , ஸ்ட்ரெச்சரில் சரியான இடத்தில் வைத்து, எந்த எலும்பையும் மிஸ் செய்யாமல், எடுத்துச் செல்லுங்கள் என பேசி இருக்கிறேன். "இவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது, சரியான டார்ச்சர் பேர்வழியா இந்த ஆள் " என நினைத்து இருப்பார்கள்.

ஆனால், எனக்கும் அது டார்ச்சராகத்தான் இருந்தது. முதுகு வலி அதை மேலும் அதிகரித்தது, இந்த பேச்சுக்கள் எதுவும் எனக்கு நினைவில் இல்லை. எனது தயாரிப்பு மேலாளர் திரு.மூர்த்தி, ஓட்டுநர் திரு.பாரதிதாசன், அலுவல் ஊழியர் திரு.சண்முகம் ஆகியோர் நான் இவ்வாறு அவர்களோடு பேசியதாக பின்னர் என்னிடம் சொன்னார்கள்.

மருத்துவமனைக்கு வந்துவிட்டேன் என்ற நிவாரணம், எனது வலியை மேலும் ரணமாக்கியது.மருத்துவரைக்கூட நான் பார்க்கவில்லை. நான் நிம்மதியாக , மயக்கத்தில் மூழ்க ஆரம்பித்து இருந்தேன்.

எழுந்தபோது வார்டினுள் வரும் ஒருவரது புலம்பலைக் கேட்டேன். எனது வலி, ஒரு இரவை விழுங்கி இருக்கிறது என்பதை, யாரோ ஒருவர் காலை வணக்கம் சொன்னபோது தான் உணர்ந்தேன். 

எனது அறைக்கு வெளியே, அண்ணன் சந்திரஹாசன் இருப்பதைப் பார்த்தேன். நான் பிறந்த போது, என்னை அவர் பார்க்க இப்படித்தான் வந்து இருப்பார்.ஆனால் அப்போது, அவரோடு 24 வயதான , எனது மூத்த அண்ணனும் வந்து இருந்தார்.   

18 வயதான சந்திரஹாசன், தன்னுடைய பிறந்த தம்பியை பார்க்க ஆர்வமாக இருந்தார்.எங்கள் தாயின் கட்டிலுக்கு அருகில் வந்தபோது தான், அந்த அறை முழுவதுமே தொட்டிலில் குழந்தைகள் கிடத்தப்பட்டு இருப்பதைப் பார்த்தனர் இருவரும். பின்னர் ஒரு நாள் அந்தக் குழந்தையோடு பேச ஆர்வமாக இருந்ததாக , சந்திரஹாசன் என்னிடம் சொன்னார். அவருடைய மனதிற்கு விருப்பமான ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்து,அதுதான் நானாக இருக்கும் என நினைத்தாராம்.அவர் நினைத்தது போலவே, நான் அந்தக் குழந்தையாக இருந்தேனாம். அன்று கண்டிப்பாக அவர் என்னைப்பார்த்து புன்னகைத்து இருப்பார். அதை, நான் தவறுவிட்டு இருப்பேன். அதே போன்றதொரு புன்னைகையை, இன்று அவரிடம் கண்டேன். 

"உங்களை அவசர சிகிச்சை பிரிவிற்குக் கொண்டு செல்கிறோம்" என்றது ஒரு குரல். மிகவும் மோசமான நிலையில், எனது உடல் இருந்திருக்கும் போலும்.

அண்ணனிடம், நான் நன்றாக இருப்பதாக கை காட்டினேன்.அவர் எனது கையை, மெதுவாகப் பற்றினார்.ஸ்ருதி பிறந்த போது; ஒரு புதுக்கதையை அவரிடம் சொன்ன போது; மருதநாயகம் படத்தின் ஆரம்பவிழாவிற்கு ராணி எலிசபெத் வர சம்மதம் தெரிவித்த போது; என பல தருணங்களில், அவர் என்னைப்பார்த்து புன்னகைத்து இருக்கிறார்.ஆனால், இந்தமுறை அது வேறு மாதிரியாக இருந்தது. அதற்குப்பின்னால், வலியும், மன அழுத்தமும், இருப்பதை என்னால் உணர முடிந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவில், என்னை விட்டுவிட்டு, அனைவரும் சென்றனர்.தான் தனியாக கிடத்தப்பட்டு இருந்த போதிலும், எனது வலி குறைந்து இருந்தது.அந்த நாளைக் கடக்க  போதுமான வலி நிவாரணிகள் தந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.நரம்பில் ஏற்பட்ட சில குளறுபடிகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட எனது காலின் வலி என்னை சேராது பார்த்துக்கொண்டதாகச் சொன்னார்கள். 

அறுவை சிகிச்சை எப்போது செய்தார்கள் என நான் அதிர்ச்சி அடைந்தேன்..  கால் இருக்கிறது என்ற உணர்வையே  நான் இழந்து இருந்தேன்.பெரும் முயற்சிக்குப் பின்னர்தான் எனது காலை  பார்க்க முடிந்தது.எனது கால் இருந்த நிலை மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

எனது காலில் இரும்பைத் துளைத்து இருந்தார்கள்.ஆறு ராடுகள் , கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையே வலியின் மூலம் என்னுள் சொருகப்பட்டு இருந்தது     புரிந்தது. எனது கால் பார்ப்பதற்கு இசைக் கருவிகளான ட்ரம்பெட்டிற்கும், க்ளாரினெட்டிற்கும் இடையே இருக்கும் ஒரு கருவியை போல் இருந்தது. ராடுகள் பற்றியும், என்னைப் பார்த்துக்கொள்ளப்போகும் மருத்துவர்களையும்  எனக்கு அறிமுகம் செய்தார்கள்.

எனது காலில் துளைக்கப்பட்ட இரும்புகளைப் பார்த்த போது, நிச்சயமாக ரோமானிய மன்னர் வ்லாட் பெருமைப்பட்டு இருப்பார்.(தனது ஆட்சிக்காலத்தில் எதிரிகளுக்கு உடலில் இரும்பு ராடுகளை துளைத்து தண்டனை கொடுத்தவர் வ்லாட் என்பது குறிப்பிடத்தக்கது). தொடையில் இருக்கும் நரம்பில் ஏற்பட்ட கோளாறால், எனது உடலுக்கு மயக்க மருந்து கொடுத்ததாக சொன்னார்கள். 

பிரசவ வலியை விரும்பாத பெண்களுக்கு, தரப்படும் மயக்க மருந்தைப் போலவா  என்றேன். ஆம், தற்போது ஓய்வெடுங்கள் என்றார்கள் புன்னகைத்தபடி,.

அறிவியல் மிகவும் ஆச்சர்யமானது,.

புன்னகைத்தபடி, மருத்துவர்கள் அந்த அறையைவிட்டு வெளியேறினார்கள்.அவர்கள் விலகுவதற்கு முன்பாகவே , என் முன்னர்  அவர்கள் மறைய ஆரம்பித்து இருந்தனர். சிரித்துக்கொண்டு இருக்கும் ஒரு தெலுங்கு செவிலியர் ஒருவருடன் நான் கிடத்தப்பட்டு இருந்தேன். ஆம், அவர் தெலுங்கு என எப்படி கண்டுபிடித்தேன். ஆச்சர்யம் தான். 

பெயின் கில்லர்களுக்கு நன்றி. மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன் , என்னுள் இருந்து மறைந்த வலி எதிரொலித்தது.