Published:Updated:

”படம் வெளியானால் கொன்று விடுவார்கள்... அதட்டிய சென்சார்!” #பகிரி இயக்குநர்

”படம் வெளியானால்  கொன்று விடுவார்கள்... அதட்டிய சென்சார்!” #பகிரி இயக்குநர்
”படம் வெளியானால் கொன்று விடுவார்கள்... அதட்டிய சென்சார்!” #பகிரி இயக்குநர்

இந்த மாய உலகமே வாட்ஸ் ஆப் மயம் தான். இதற்கான தமிழ் அர்த்தம் தான் பகிரி. சமுதாயத்தின் மீது எனக்கு இருக்கும் கோவங்களையும், ஆசைகளையும், சிந்தனைகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கணுங்கிற காரணத்துல தான் பகிரினு பேர் வைத்தேன்”  என்று நேர்மையுடன் நம்மிடம் பகிரத்தொடங்கினார் இயக்குநர் இசக்கிகார்வண்ணன். பகிரி வரும் வெள்ளி (செப்டம்பர் 16)  ரிலீஸ். அப்படி இந்தப் படத்தில் என்ன தான் ஸ்பெஷல்?...  200 தியேட்டர்களில் ரிலீஸ் என்பதால் படுகுஷியில் இருந்த இயக்குநருடன் சின்ன மீட்டிங்.....  

பகிரி என்ன கதை? 

டாஸ்மாக் வைக்கணும்னு நினைக்கிற ஹீரோ, அதற்கு உதவும் நாயகியும்,  நாயகியின் அம்மாவும். ஆனால் மதுவை எதிர்க்கும் ஹீரோவின் தந்தை என்று சுழலும் கதையில் காதலும் நகைச்சுவையும் சமுக அக்கறையும் கலந்த படம்தான் இந்த “பகிரி”. 

உங்கப் படத்துல மதுவை எப்படி காட்சிப்படுத்தியிருக்கீங்க? 

மது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று தான். அதைத்தான் என்படத்துலயும் சொல்லியிருக்கேன்.  எதுலாம் தவறுனு நினைக்கிறோமோ அதுவெல்லாம் இன்றைய தினத்தில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்துல ஒதுக்குப்புறமா வேலி ஓரத்துல வித்துக்கிட்டு இருந்த சாராயம் இப்போ அரசே எடுத்து நடத்துது. அன்று சாராயம் வித்துட்டு இருந்தவங்களுக்கும் இப்போ உள்ள அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அரசு நினைச்சா மதுக்கடைகளை மூடிவிடலாம். அதைத்தான் இந்தப் படத்துல நானும் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.   

வாட்ஸ் அப்பை இந்தப் படத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கீங்க? 

“குண்டு வச்சா தீவிரவாதி! குடிக்கவைச்சா தேசியவாதியா?” ,“தென்ன மர மட்ட கூட தான் வாழ்ந்த தடத்த பதிச்சிட்டுப் போகுது, ஆனா இந்த கால இளைஞர்கள்  எதாவது செஞ்சி மண்ணையும் மக்களையும் காப்பாத்துங்கடா” என்பது போன்ற பல வசனங்கள் குடிக்கு எதிரா, வாட்ஸ் அப் மூலமா எல்லா இடமும் பரவுது. ஆனால் படம் வாட்ஸ் ஆப் சம்பந்தப்பட்ட கதையில்லை. வாட்ஸ் ஆப் காட்சிகள் படத்திற்கு திருப்புமுனையா இருக்கும். 

சினிமா அனுபவமே இல்லாமல் நேரடியாக இயக்கத்தில் இறங்கியிருப்பது சவாலா இருந்ததா?  

வறுமையில் பிறந்து பல கஷ்டங்களை சந்திச்சி தான் இந்த நிலைக்கு வந்திருக்கேன். இயக்குநராகனும்ங்குற கனவு ஒரு பக்கம், நான் பட்ட கஷ்டங்கள் ஒருபக்கம். இந்த ரெண்டு தான் என்னுடைய சினிமா அனுபவம். வேறு எந்த இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை.  தொழில் நுட்ப ரீதியா உதவி செய்தது என்னுடைய ஒளிப்பதிவாளர் தான். 

சின்ன பட்ஜெட் படமென்றால் வரவேற்பும், வெற்றியும் சவாலாக இருக்குமே? 

காக்காமுட்டை படம் வெற்றி பெற்றதென்றால், அதற்குப் பின்னால் தனுஷ், வெற்றிமாறன் போன்ற தெரிந்த முகங்கள் இருந்ததானால் தான். அதே நேரத்தில் வெளியாகி, தேசிய விருதுபெற்ற குற்றம் கடிதல், மக்கள் மத்தியில் பேசப்படவில்லையே. நல்ல படம் எடுத்தாக்கூட அதற்கான வெகுமானம் மக்கள் மத்தியில் குறைவாத்தான் இருக்கு!  அதுமட்டுமில்லாமல்,  புதிய இயக்குநர் என்பதால் நிச்சயம் எனக்கு பெரிய ஹீரோக்கள் யாரும் தேதி தரப்போவதில்லை. அதனால் நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை புதுமுக நடிகர்களை வைத்து இந்தப் படத்தில் சொல்லிவிட்டேன். என்னுடைய இரண்டாவது படம் தான் எனக்கு அங்கீகாரம் தரும். இந்தப் படத்தினால் எனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. 

சென்சார் முடிந்ததா? 

சென்சாரில் மொத்தமா 18 கட். படத்தை பார்த்த நேரத்தை விட, படத்திற்காக நாங்க விவாதம் பண்ண நேரம் தான் அதிகமா இருந்துச்சி என்று சென்சாரில் சொன்னது சந்தோஷமா இருந்தது. கலைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு தான் பராசக்தி படமா உருவானது. அதுமாதிரி, நான் பட்ட கஷ்டம், என்ன பாதிச்ச விஷயத்தை மக்களோட பகிரணும்னு தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கேன். யு/எ சான்றிதழ் கொடுத்துருக்காங்க. வரிவிலக்கு கிடைக்காவிட்டாலும், நல்ல விஷயத்த சொல்லுறோம் என்ற சந்தோஷமே  போதும்! 

அப்படின்னா... சென்சார் போர்டில் மிரட்டல் ஏதும் வந்ததா? 

படத்தில் ஒரு காட்சி, நாடக நடிகர்கள், இரு கட்சித் தலைவர்களோட வேஷத்தோட டாஸ்மார்க்கிற்கு குடிக்க வாராங்க, அப்போ கடை மூடிடுறாங்க, அந்த நேரம் வர டி.ஆர். “ மாதமோ சித்திரை, மணியோ பத்தரை முருகா உன் கோட்டர் இல்லைனா  எனக்கு ஏது நித்திரை?” சில காட்சிகள் இருக்கு! இந்த மாதிரியான காட்சிகள் இருந்தா படத்தை வெளியிடவே விடமாட்டாங்க, படம் ரிலீஸாச்சுன்னா உங்களை கொன்று விடுவார்கள் என்று நேரடியாகவே, சென்சார் உறுப்பினர்கள் மிரட்டினார்கள். நீங்க எந்த கட்சினு கேட்டாங்க, நான் எந்த கட்சியும் கிடையாதுனு சொல்லிட்டு, சிரிச்சிட்டே அங்கிருந்து வெளியேறிட்டேன்.

-பி.எஸ்.முத்து-