Published:Updated:

இன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்? #2016TamilMovies

இன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்? #2016TamilMovies
இன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்? #2016TamilMovies

இன்னும் மூன்று மாதத்தில் 2016 பை பை சொல்லிவிடும். அதற்குள் குறைந்தது ஒரு ஐம்பது படங்களாவது வெளியாகிவிடும். அதிலிருந்து ஃபில்டர் போட்டு மிஸ் பண்ணக்கூடாத படங்களை பற்றிய சின்ன நோட் கீழே. 

செப்டம்பர் 22

தொடரி:

தனுஷுக்கு தங்கமகன், பிரபுசாலமனுக்கு கயல் என இருவரின் சறுக்கலுக்கு பிறகான முக்கியமான படம். டீ விற்கும் பூச்சியப்பன் ரோலில் தனுஷ், நடிகைக்கு மேக்-அப் அசிஸ்டெண்ட் மலையாலப் பெண் சரோஜாவாக கீர்த்தி சுரேஷ். ஓடும் ரயிலுக்குள் இவர்களுக்குள் இடையே காதல். நடுவே நடக்கும் ரயில் ஹைஜாக். என்ன நடக்கப் போகிறது என்ற த்ரில்லர் தான் 'தொடரி'. 

செப்டம்பர் 23

ஆண்டவன் கட்டளை:

காக்கா முட்டை, குற்றமே தண்டனைக்குப் பிறகு மணிகண்டன் இயக்கியிருக்கும் படம். ஹீரோ ஆவதற்கு முன்பே மணிகண்டனின் விண்ட் குறும்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இப்போது  விஜய் சேதுபதி, நாசர், 'இறுதிச்சுற்று', ரித்திகா சிங், பூஜா தேவ்ரியா  நடிப்பில், அருள்செழியன் கதையில் உருவாகியிருக்கிறது 'ஆண்டவன் கட்டளை'. ஒரு பாஸ்போர்ட் எடுக்க சென்று டாக்குமென்ட்டைத் தப்பாக எழுதி, அதனால் நடக்கும் பிரச்னைகள்தான் கதை. முழுக்க காமெடியாக தயாராகியிருக்கிறது படம். 

சைத்தான்:

புதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் சைக்கோ த்ரில்லர்  சைத்தான். இந்தப் படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். ஹீரோயினாக அருந்ததிநாயர் நடித்திருக்கிறார்.’ நான்’ படத்தில் நீங்கள் உணந்த த்ரில்லை விட அதிகமாகவே சைத்தானில் உணர்வீர்கள் என்கிறார் இயக்குநர் பிரதீப்.

செப்டம்பர் 30

அச்சம் என்பது மடமையடா:

'விதவா'க்குப் பிறகு சிம்பு + கௌதம் வாசுதேவ் மேனன் காம்போ இணைந்திருக்கும் படம். இந்தப் படம் மூலம் மஞ்சிமா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். நிறைய பிரச்சனைகள், இழுத்தடிப்புகள் என மிகவும் தாமதமாகியிருக்கிறது படம். சில நாட்களுக்கு முன் படத்தில் மீதமிருந்த பாடலின் ஷூட்டிங்கை கம்ப்ளீட் செய்து முடித்திருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையில் இருக்கிற ஒருத்தன், எதிர்பாரா சூழ்நிலை வரும்போது, அதை எப்படிச் சமாளிக்கிறான்; அதனால அவன் வாழ்க்கை எப்படி மாறுது என்பதே படம். ரஹ்மான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட், படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அக்டோபர் 7

ரெமோ:

முதல் முறையாக கெட்டப் சேஞ்சுடன் களம் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ரசூல்பூக்குட்டி ஒலிக்கலவை என பெரிய டீம் இணைந்திருக்கிறது. ரெமோ நீ காதலன் பாடலில் வரும் 'அவளுக்காக அவனா மாறிட்டானே' தான் படத்தின் ஒன்லைன். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ரொமாண்டிக் காமெடியாக படம் ரெடியாகியிருக்கிறது. லேடி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் என்கிற விஷயமே படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

தேவி:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும்  சினிமா. பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி கெஸ்ட் ரோலில் எமி ஜாக்சன் நடித்திருக்கும் படம். கிராமத்தில் தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு வருகிறார் பிரபுதேவா. அவர் தங்கியிருந்த வீட்டில் இருக்கும் ரூபி என்ற பெண்ணின் ஆவி தமன்னாவுக்குள் புகுந்து கொள்கிறது. அதற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு சில கண்டிஷன்களுடன் ஒத்துக் கொள்கிறார் பிரபுதேவா. ஆவி  தமன்னாவை விட்டு வெளியேறியதா? என்ன ஆனது என்பது தான் கதை. 

அக்டோபர் 28

காஷ்மோரா:

ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் படம். கார்த்தியின் வித்யாசமான கெட்டப், சரித்திரப்படம் போன்ற போஸ்டர் டிசைன்கள் என அதிக ஆச்சர்யங்களை கொடுத்திருக்கிறது. ப்ளாக் மேஜிக் பற்றிய வரலாற்று பின்னணியில் உருவாகியிருக்கும் படம் எனக் கூறியிருக்கிறார் இயக்குநர். சந்தோஷ் நாராயணன் இசை, நயன்தாரா ஹீரோயின் என சூப்பர் காம்போ இணைந்திருக்கிறது.

கடவுள் இருக்கான் குமாரு:

'வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க' படத்துக்குப் பின் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ராஜேஷ் படம் என்றாலே கதை இருக்குமோ இல்லையோ காமெடி இருக்கும் என்பதோடு, இந்த முறை சந்தானம் இல்லாமல் படம் எடுத்திருப்பது, ஜி.வி.பிரகாஷ் ஆர்.ஜே.பாலாஜி என புதுக் கூட்டணியில் இணைந்திருப்பது  ஃப்ரெஷ். 

கொடி:

காக்கிசட்டைக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கும் படம். முதல் முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின்களாக த்ரிஷா, பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கிறது படம். 

கத்தி சண்டை: 

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பிற்கு ஒரே ஒரு காரணம் தான். வடிவேலு கம்பேக். தலைநகரம், மருதமலை என இன்னும் சேனல்களில் ரிப்பீட் அடித்துக் கொண்டிருக்கும் காமெடிகளின் காம்போ சுராஜ் + வடிவேலு.  விஷால், தமன்னா, சூரி, ஜெகபதிபாபு, தருண் அரோரா நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. 

நவம்பர் 10

2007ல் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற சென்னை 28ன் சீக்குவல். மகத், அபிநய் வாடி மற்றும் எக்ஸ்ட்ரா அடிஷன். மற்ற படி முதல் பாகத்தில் நடித்த அதே டீம் மீண்டும் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தை சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இந்த பாகத்தை ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து  படம் தொடங்கும் என்கிறார் வெங்கட்பிரபு. 

நவம்பர் 11

நெஞ்சம் மறப்பதில்லை:

செல்வராகவன் இயக்கம், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு, கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு என மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கும் படம். செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பேய்ப்படம் என்பது தான் ஸ்பெஷலே. இறைவியில் ரகளை செய்திருந்த எஸ்.ஜே.சூர்யா நடிப்பு டீசரிலேயே ஆவலை உண்டாக்கியிருக்கிறது. தமிழில் புதுப்பேட்டைக்குப் பிறகு பிரிந்த செல்வராகவன் + யுவன் ஷங்கர் ராஜா  இந்தப் படம் மூலம் பத்துவருடத்துக்குப் பிறகு இணைந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையில் எந்தப் படம் எப்போது வெளியாகும் என சொல்லவே முடிவதில்லை. இந்தப் பட்டியலில் சில படங்கள் வெளியேறலாம். சில படங்கள் இணையலாம். 

-பா.ஜான்சன்