Published:Updated:

"ரஜினிக்கு போலீஸ் கதை ரெடி!"- பெரும் மகிழ்ச்சியில் ராஜேஷ்.எம் #VikatanExclusive

"ரஜினிக்கு போலீஸ் கதை ரெடி!"-  பெரும் மகிழ்ச்சியில் ராஜேஷ்.எம் #VikatanExclusive
"ரஜினிக்கு போலீஸ் கதை ரெடி!"- பெரும் மகிழ்ச்சியில் ராஜேஷ்.எம் #VikatanExclusive

“நல்லவங்க  டயலாக் ரீச்சாகும், ஆனா கொஞ்சம் லேட்டாகும்”, “ஒவ்வொரு பசங்களுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி ” , “லவ்கீக வாழ்க்கை” ”நண்பேன்டா” என்று சரமாரியான வசனங்களும், கலாய்ப்புகளும், காமெடிகளுமென வெற்றிக்குறி போட்ட இயக்குநர் ராஜேஷின் அடுத்த பஞ்ச்....“ கடவுள் இருக்கான் குமாரு”.  இணையத்தில் வெளியான இரண்டு டீஸர்களுமே வைரல் ஹிட்.  அவரிடம் சில ஜாலி கேலி கேள்விகள். 

டைட்டிலே வித்தியாசமா இருக்கே! இந்த உலகத்துக்கு என்ன சொல்லப்போறீங்க பாஸ்? 

சிரித்துக்கொண்டே பேசத்தொடங்குகிறார்...  ”சென்னையில பொதுவா எல்லோரும் யூஸ் பண்ற வார்த்தை தான்.  புதுப்பேட்டை படத்துல பாலகுமாரன் சார் எழுதுன வசனம், “கடவுள் இருக்கான் குமாரு”. ஜி.வி. தான் இந்த டைட்டில வைக்கலாம்னு சொன்னது. உடனே இந்த டைட்டிலையே ஓகே பண்ணிட்டோம்.  நமக்கு ஏதும் பிரச்னைன்னா, கடவுள் இருக்கான் பார்த்துப்பான்னு சொல்லுவோம்ல.  அதே... அதே... இந்தப் படத்துல  ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, இந்த மூணுபேருக்குமான காதல் கலாட்டா தான் படமே. லவ் படம் தான், ஆனா என் ஸ்டைலுல. ”

நைட்டு ஃபுல்லாம் நெட்லேயே குடியிருக்கும் நெட்டிசன்களை அதிகமா உங்க படத்துல டார்கெட் பண்றீங்களே? 

18 வயசுலருந்து 35 வயசுக்குள்ள இருக்குறவங்க தான் அதிகமா, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இருக்காங்க. அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை படமா பண்ணனுங்குறது தான் டார்கெட். அதே நேரம் ஹீரோ ஜி.வி.பிரகாஷுக்கும் நிறைய ஃபாலோயர்ஸ். குறிப்பா  டீன் ஏஜ் பசங்க. நெட்டிசன்களுக்குப் பிடிச்ச மாதிரி டீஸர் ரிலீஸ் பண்ணலாம்னு ப்ளான் பண்ணோம். டீஸர்ல வந்த காட்சிகள், படத்துல செம ரகளையா இருக்கும். அதுமட்டுமில்லாம,  சொல்வதெல்லாம் உண்மை மாதிரியான ஒரு நிகழ்ச்சி இந்தப் படத்துல இருக்கு. ஆனா  அந்த நிகழ்ச்சியை எங்கயுமே டீஸ் பண்ணலை. அதுமாதிரியான ஒரு காட்சி தானே தவிர, யாரையுமே காயப்படுத்தாம  ஜாலியான  விஷயங்களைச் சேர்த்திருக்கோம். 

மகிழ்ந்திரு டயலாக் சொன்னதே நீங்க தான்.. கபாலியில் மகிழ்ச்சி....அடுத்து உங்க படத்துல பெருமகிழ்ச்சியாகியிருக்கே? 

சியர்ஸ்க்கு  தமிழ்ல என்னனு யோசிச்சோம். கூகுள் ஆண்டவர் வரைக்கும் தேடுனதுல கிடைச்ச வார்த்தை தான் மகிழ்ந்திரு.. அதையே டயலாக்காவும் யூஸ் பண்ணேன். ரஜினி ரசிகன் நான். அவரே சொன்னது இன்னும் சிறப்பா, ஒரு பாசிட்டிவ் எனர்ஜியா தான் இருந்துச்சி. ரஜினிசார் சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. மகிழ்ச்சியோட தொடர்புபடுத்தி இந்தப் படத்துலயும் ஒரு டயலாக் வைக்கணுமேனு யோசிச்சித்தான் “பெரும் மகிழ்ச்சி”னு பண்ணிருக்கோம்.  

உங்க படத்துலயே ஆடியன் சாய்ஸ்னா “பாஸ் (எ) பாஸ்கரன்” தான். படம் வெளியாகி 6 வருடம் ஓடிடுச்சி. உங்களுக்கு அந்தப் படம் என்ன ஸ்பெஷல்? 

அரியர் எழுதி பாஸ்பண்ணாத ஒருத்தன், டுட்டோரியல் தொடங்கி எல்லோரையும் பாஸ் பண்ண வைக்கிறதே செம ஹைலைட்ஸ். ரியல் வாழ்க்கையோட ரொம்ப நெருக்கமான ஒரு ஸ்கிரிப்ட்.   இந்தக் கதைக்கான ஐடியாவே என் நண்பர்கள் தான். என் ப்ரெண்ட்ஸ்லாம்  டுட்டோரியல தான் படிச்சாங்க. அங்க நடக்குற விஷயங்களை கேட்டுருக்கேன். அதுவே கதையாகவும் மாறிடுச்சி. நான் பண்ண கதைகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சதும் பாஸ் தான்.

ஆனா.... கடைசி இரண்டுப் படமும் நினைச்சமாதிரியான ரிசல்ட்டை தரவில்லையே? 

“ஒரு கல் ஒரு கண்ணாடி” எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஹிட். அந்த ஹிட் ஒரு மைல்கல் மாதிரி அமைஞ்சிடுச்சி. அந்த ஹிட்ட  அடுத்தப் படமும் தாண்டனும்னு தான்  ஆடியன்ஸ் எதிர்பார்ப்பாங்க.  ஓகே ஓகே  ரிலீஸான நேரத்துல  டைம் வேற எந்தப் படமும் ரிலீஸாகவில்லை, லீவ் டைம்னு படம் ஹிட்டாக நிறைய வாய்ப்புகள் இருந்தது. ஆனா இப்பொல்லாம் ஒரே நாள்ல 4  புதுப்படம் ரிலீஸாகுது. பழைய ஹிட் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த படங்கள் எங்களுக்கு லாபகரமான படம் தான்.  ஆனா ஆடியன்ஸ் கேக்குற அந்த மெகா ஹிட் குடுக்க தான் முயற்சி பண்றேன். 

உங்களுடைய படங்களில் பெண்களை அதிகமா கலாய்க்கிறீங்கனு உங்க மேல ஒரு பிராது அடிக்கடி வருதே ? 

ஆண், பெண்ணு இரண்டு பேருக்குமான வாழ்க்கையில கண்டிப்பா சண்டை இல்லாம இருக்காது. சண்டை வந்தா அடிச்சிக்கிறது தான் என் படத்துல காட்சியா இருக்கும். பாஸ் எ பாஸ்கரன், ஓகே ஓகேனு எல்லா படத்துலயும் பெண்களை மதிப்புடன் தான் பேசுறோம். ஆனா கலாய்க்கிறது பெண்களை இழிவுபடுத்துறதுனு அர்த்தம் கிடையாது.  கலாய்க்கிறது அவங்களுக்கே பிடிக்கும். அதுமட்டுமில்லாம, பெண்களை தப்பா பேசுனா சென்சாரிலேயே தூக்கிட சொல்லிடுவாங்க. என் படம் எல்லாமே யு தான். நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் படங்களைத் தான் நான் இயக்குவேன். 

ரஜினிக்கு கதை சொல்லப்போனா, என்ன கதை சொல்லுவீங்க? 

பக்கா காமெடி கதை ஏற்கெனவே எழுதி வச்சிட்டேன்.  படத்துல ரஜினி போலீஸா நடிக்கிறாரு. ஒரு போலீஸோட வாழ்க்கை தான் கதையே. கதை ரெடி பாஸ்.

உங்க படங்கள் எல்லாமே ஜாலியா இருக்கு. நிஜ வாழ்க்கையில் நீங்க எப்படி? 

நாம சந்தோஷமா இருந்தா தான், நம்ம படமும் சந்தோஷமா இருக்கும். எந்த விஷயத்துக்காவும் எதையும் பெருசா எடுத்துட்டு டென்ஷன் ஆக மாட்டேன். சுத்தி இருக்குறவங்க எல்லோருமே இன்னைக்கு வரைக்கும் ரொம்ப நெருக்கமா இருக்காங்க. அவ்ளோதான். அது போதும்.

- பி.எஸ்.முத்து