Published:Updated:

'பவர் பாண்டி' சூப்பர் டூப்பர் கதை... -- ராஜ்கிரணிடம் ரகசியம் உடைத்த ரஜினி #VikatanExclusive

'பவர் பாண்டி' சூப்பர் டூப்பர் கதை... -- ராஜ்கிரணிடம் ரகசியம் உடைத்த ரஜினி #VikatanExclusive
'பவர் பாண்டி' சூப்பர் டூப்பர் கதை... -- ராஜ்கிரணிடம் ரகசியம் உடைத்த ரஜினி #VikatanExclusive

தமிழ் சினிமாவில் ரஜினி 'பாட்ஷா'வில் நடித்துக் கொண்டு இருந்தபோது அவரின் சம்பளம் 75-லட்சம். அடுத்து  'இந்தியன்' படத்தில் நடித்த கமலுக்கு 60-லட்சம். அதன்பின் விஜய்காந்துக்கு 40- லட்சம். அதன்பிறகு சத்யராஜ், பிரபு, கார்த்தி ஆகியோர் தலா 15-லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலம்.  அப்போது 'மாணிக்கம்' படத்துக்காக முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரேநடிகர் ராஜ்கிரண்.

ராஜ்கிரண் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் படங்கள் ஹிட் அடிப்பது செண்டிமென்ட். இது  சத்யராஜுக்கும் பொருந்தும். இந்நிலையில் அவர்கள் இருவருமே சேர்ந்து நடிக்கும் படத்துக்கான வேலைகளும் நடைபெறுகிறது. இந்த சமயம்தான் ராஜ்கிரண் ஹீரோவாகாவே நடிக்கும் தனுஷ் படமும் எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது! 25 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரிராஜா இயக்கிய 'என் ராசாவின் மனசுல' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். இப்போது அவரது மகன் தனுஷ் இயக்கத்தில் 'பவர் பாண்டி' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து ,

'' கஸ்தூரி ராஜா டைரக்‌ஷனில் நடித்தபோது சின்னவயசு குழந்தையா  இருந்த தனுஷ் இப்போ என்னை வைத்து டைரக்‌ஷன் செய்றதை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. இந்த கொடுப்பினை என்னைவிட வேறு யாருக்கு கிடைக்கும். என்னோட சினிமா கேரியர்ல பி.வாசு, பாலா, சேரன், ஹரி, லிங்குசாமி, லாரன்ஸ், பொன்ராம், முத்தையா, ராகவன் என்று எத்தனையோ நல்ல திறமைசாலியான டைரக்டர்கிட்டே வேலை பார்த்து இருக்கேன். எனக்கு கிடைத்த எல்லா இயக்குனர்களுமே புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் அமைந்தார்கள். இளம்வயதான  தனுஷ் என்னிடம் எப்படி வேலை வாங்கப் போகிறார், நான் எப்படி நடிக்கப் போகிறேன் என்று முதல்நாள் ஷூட்டிங் சென்றபோது பயந்து கொண்டே போனேன். 

தனுஷ் என்னிடம் வேலை வாங்கும் திறமையை பார்த்து பிரமித்து நின்றேன். படப்பிடிப்புக்கு போன ரெண்டு நாள்லயே எனக்குள்ள இன்னொரு டைமன்ஷன் நடிப்பை வெளிக்கொண்டு வந்துவிட்டதைப் பார்த்து எனக்கு வியப்பாகவும்,  சந்தோஷமாகமாகவும் இருந்துச்சு. 'தம்பி நீங்க எப்படி நடிக்கச் சொல்றீங்களோ... அப்படியே நான் நடிக்கிறேன் போதுமா..'னு தனுஷிடம் சொல்லி விட்டேன்

கடவுள் புண்ணியத்தில் நமக்கு அமைகின்ற டைரக்டர் எல்லாருமே நன்றாக தான் அமைந்து கொண்டு வருகிறார்கள்.

'பவர் பாண்டி'பட விளம்பரத்தைப் பார்த்தால் காமெடிபட உணர்வு ஏற்படுகிறதே?

சென்னை ராமவரத்தில் இருக்கும் கஸ்தூரிராஜா வீட்டில் 'பவர் பாண்டி' படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. என்னோட கேரக்டர் அருமையானது. சமுதாயத்திற்கு ஒரு பாடத்தை சொல்லும் படமாக 'பவர் பாண்டி' படம் இருக்கும்.  என்னைச்சுற்றி பைக்கில் நான்குபேர் நிற்பதைப் பார்த்தால் ஏதோ காமெடி படம் போன்ற தோற்றம் தெரியும். உண்மையில் அப்படி ஒரு சங்கதியே இல்லை. 'பவர் பாண்டி' கதையை வெளியே சொல்ல கூடாது என்று டைரக்டர் உத்தரவு போட்டு இருப்பதாலே கதையை என்னால் சொல்ல முடியவில்லை.சமூகத்துக்குத் தேவையான, ரொம்ப சீரியஸான விஷயத்தை, மெசேஜை இந்தப் படத்தின் மூலமாக சொல்லப் போகிறார், தனுஷ்

நாங்க இரண்டு பேமிலியும் ரொம்ப அன்னியோனியமாக இருக்கிறோம். புதிதாக சொல்ல வேண்டியதில்லை.

உங்களுக்கு செகண்ட் ரவுண்ட் தொடங்கி விட்டதா?

மஞ்சபை படத்திற்கு பிறகு தமிழில் மூணுகோடி சம்பளம் என்று பனிரெண்டு படங்களின் வாய்ப்பு வந்தது. அந்தப்பட டைரக்டர்கள் சொன்ன எந்த கதையுமே எனக்கு பிடிக்கவில்லை. அதன்பின் 'கொம்பன்' வெற்றிக்கு பிறகு 5 கோடி சம்பளத்திற்காக ஏழு பட வாய்ப்புகள் வந்தது. அவர்கள் சொன்ன கதையும் எனக்கு பிடிக்கவில்லை. அடுத்து 'ரஜினி முருகன்' படத்துக்கு பிறகு நிறையபேர்  தேடிவந்தனர்.

இப்போது நான் எட்டுகோடி ரூபாய் கடனில் இருக்கிறேன். நான்கு படத்துக்கு 5 கோடிவீதம் சம்பளம் வாங்கி இருந்தால் என் கடன் முடிந்து இருக்கும் அதற்கு என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. என்னைத்தேடி வருபவர்கள் ராஜ்கிரணுக்கு கதை சொல்ல  வருவதில்லை. ராஜ்கிரணை போட்டால் லாபம் சம்பாதித்து விடலாம் என்கிற கணக்கோடு வருகிறார்கள்.இதுபோன்றவர்கள் சினிமா துறையையே மாற்றி விடுகிறார்கள்.  என்னால் சினிமா மாற வேண்டாம் என நினைக்கிறேன். 

ஒரு படத்தின் கதையை கேட்கும் போதே இந்த கதை தேறும், தேறாது என்கிற உண்மை தெரிந்துவிடும். நான் ஐந்துகோடி சம்பளம் வாங்கி படத்தை ஃப்ளாப் பண்ணி அதுக்கு அப்புறம் நம்மை  நாமே நேசிக்க முடியாமல் போய்விடும்நம்ம மேல நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.

 நீங்களும், இளையராஜாவும் சாமியார்களை பார்க்கச் சென்ற அனுபவம்?

நானும் இளையராஜாவும் விசிறி சாமியார்யோகி ராம்சுரத் குமாரை பார்க்க போனோம்,பிறகு புரவிப்பாளையம் சாமியாரை பார்க்கப் போனோம். இருவரும் இப்போது இல்லை. இரண்டு பேர் படமும் என் வீட்டில் இருக்கிறது. எனக்கு மகான்கள் பிடிக்கும். அவர்களை அப்சர்ப் பண்ணி கொள்வது பிடிக்கும். ஏனென்றால் மகான்கள் 24 மணி நேரமும் கடவுளை தியானித்துகொண்டு இருப்பார்கள். அந்த அதிர்வலைகள் அவர்களை சுற்றி இருக்கும். அந்த வைப்ரேசன் நம் மேல் படும். அதுபோதும். அவர்களிடம் எனக்கு வேண்டியது கேட்க பிடிக்காது. எனக்கு வேண்டியது நான் இறைவனிடத்தில்தான் கேட்பேன்.இப்போதுஇளையராஜாவை தொழில்ரீதியாக தொடர்பு இல்லாமல் பார்க்க முடிவதில்லை. எப்போவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்வதோடு சரி.

குடும்ப வாழ்க்கை எப்படி போகிறது?

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா சினிமாக்காரர்களைப்போல் வெளிநிகழ்ச்சி, பார்ட்டி என்று எல்லாவற்றிலும் கலந்து கொண்டேன். இப்போது சுத்தமாக தண்ணியை தொடுவதே இல்லை. வீடு, வீட்டை விட்டால் ஷூட்டிங். நண்பர்கள் பழக்க வழக்கம் என்று எதுவுமே வைத்துக் கொள்வது இல்லை. என் மனைவி, மகன், மகள் இதுதான் என் உலகம்.

 'பவர் பாண்டி' முதல்நாள் படப்பிடிப்பு எப்படி இருந்தது.

முதல்நாள் பூஜையோடு ஷூட்டிங் ஆரம்பித்தது  காலை 11 மணி இருக்கும் தனுஷூக்கு திடீரென ஒரு போன் வந்தது பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தவர் படாரென செல்போனை என்னிடம் கொடுத்தார். நான் காதில் வைத்தேன் எதிர்முனையில் சூப்பர் ஸ்டார் ரஜியின் குரல் 'என்ன ராஜ்கிரண் எப்படி இருக்கீங்க வாழ்த்துகள். நீங்க நடிக்கிற 'பவர் பாண்டி' படம் சூப்பர் டூப்பர் படம். வெற்றிபெறப் போகிற கதையில் நடிக்கிறீங்க மறுபடியும் வாழ்த்துகள்' சொல்லி பாராட்டினார், ரஜினிசார்.

- சத்யாபதி