Published:Updated:

SAW போல மிரட்டல் திகில் இருக்கிறதா? சதுரம் விமர்சனம்

SAW போல மிரட்டல் திகில் இருக்கிறதா?  சதுரம் விமர்சனம்
SAW போல மிரட்டல் திகில் இருக்கிறதா? சதுரம் விமர்சனம்

ஹாலிவுட்டில் வெளியான ஹாரர் பட வரிசையில், உச்சக்கட்ட மிரட்டலைத் தந்த 'கொடூரமான' படம் SAW. இதன் ஏழு பாகமுமே மரண ஹிட். இப்படத்தைத் தழுவி, தமிழுக்கேற்ப உருவாகியிருக்கும் “சதுரம் 2”.. கோலிவுட்டை  மிரட்டியிருக்கிறதா?

வாழ்க்கையை இழந்து ஒருவன், அதன் பாதிப்பில் சம்பந்தப்பட்டவர்களை கொடூரமான முறையில், யாரும் யோசிக்காத தண்டனை கொடுத்து கொல்லும் டெரர் கதை தான் ஹாலிவுட் SAW. அதன் ஜெராக்ஸ் அப்படியே சதுரம் 2 விலும், ஆனால் ஜெராக்ஸில் ஆங்காங்கே கருப்பு புள்ளிகள்.

ஆகஸ்ட் 14, 2014ல் சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானம் மாயமாகிவிடுவதில் தொடங்குகிறது  திரைக்கதை. கறுப்புத் திரை.. சதுர அறை... எதிரெதிர் திசையில் யோக் ஜெப்பியும் ரியாஸூம் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கிறார்கள். நடுவே ஒருவர் முகம் சிதைந்து இறந்துக்கிடக்கிறார். அந்த அறையில் ஒரு துப்பாக்கியும் இரண்டு தோட்டாக்களும், கூடவே டேப் ரெக்காடரும் மட்டுமே. யார் இவர்கள், எப்படி இங்கு வந்தார்கள், மரணப்பிடியிலிருந்து தப்பித்தார்களா, இறந்து கிடப்பவர் யார் என்பதற்கான ஜிக்ஜாக் திரைக்கதைக்கு நடுவே, மாயமான விமானத்தில் சென்றவருக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்ற ட்விஸ்ட்! 

மாஸ் ஹீரோ, க்யூட் ஹீரோயின், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று டெம்ளேட் கதையிலிருந்து முற்றிலும் விலகி, புதுப்புது கதைகளை தமிழ்த் திரையுகிற்கு இயக்குநர்கள் அறிமுகப்படுத்திவருகின்றனர். அந்த வரிசையில்  தமிழுக்கு அறிமுகமே ஆகாத ஒரு ஜானரில், அதிரடிக்கும் கதையை அறிமுக வாய்ப்பிலேயே தொட்டிருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் துணிகர முயற்சிக்கு ’நடுக்கத்துடன்’ கூடிய கைகுலுக்கல்கள்!

 SAW பட வரிசையின் வெற்றிக்குக் காரணம், விதவிதமாக கொலை செய்யும் முறையே. எப்படியும் கொல்லலாம் என்றில்லாமல், அதற்கென தனி இயந்திரத்தைக் கண்டுபிடித்து, கொலையாளியின் மனநிலையோடு விளையாடும் வித்தை தான், பார்ப்பவரை கதிகலங்க வைக்கும். அங்கு பயன்படுத்திய அத்தனையையும்,  தமிழிலும் பதிவிறக்கம் செய்திருக்கிறார் இயக்குநர். 
இப்படத்தில் கொலைகாரன் தான் பிரதான கதாபாத்திரம். சைக்கோ படங்கள் என்றாலே ஈவு இரக்கமின்றி கொலை செய்வது தான் வழக்கம். ஆனால், இதில் இரக்க குணம் கொண்ட சைக்கோவின் சைக்கலாஜிக்கல் எண்ணங்கள் எப்படியிருக்கும் என காட்டியிருக்கிறார்கள்..  உதாரணமாக ஒரு காட்சி.... 

இருட்டு அறை.. இயந்திர முகமூடி தலையில் மாட்டப்பட்டிருக்கிறது. மாட்டிக்கொண்டிருப்பவரின் கையில் இருக்கும் டேப்பில் வரும் குரல், 1 நிமிடத்திற்கும் இந்த இயந்திர முகமூடியை கழட்டவில்லை என்றால் முகம் சிதைந்து இறந்துவிடுவதாகச் சொல்கிறது. அதற்கான வாய்ப்பும் தரப்படுகிறது. எதிரே இருக்கும் 1000 ரூபாய்கள் நிறைந்த பணப்பெட்டியில் இருக்கும் ஒர் 20 ரூபாய் நோட்டைத் தேடி எடுத்து, அதில் இருக்கும் சீரியல் நம்பர் தான், இயந்திரமுக மூடியை கழட்டுவதற்கான பாஸ்வேர்டு. ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடித்து அழுத்துவதற்குள் முகம் சிதைந்து இறந்துவிட்டுவது காட்சி. SAW படத்தில் வந்த காட்சிதான் என்றாலும் , அதற்கான நேர்த்தியும் விறுவிறுப்பையும் கலந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். 

“வாழ்க்கையை நாம தேர்ந்தெடுக்கலாம். நம்மளையே தேர்ந்தெடுக்குற ஒரு விஷயம் மரணம் மட்டும்தான்”, “வாழத்தகுதியில்லாதவங்களுக்கு மரணம் தான் பரிசு” - பொளேர் பளீர் வசனங்களுடன் அதிரடிக்கும் அறிமுக காட்சிகள் அமைந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் பயமுறுத்தத் தவறுகிறது. 
    காட்சிக்கு காட்சி அச்ச உணர்வை ஏற்படுத்தும் கிரிஷின் இசையும்,  விஜய் மற்றும் சிவாவின் கலையும் படத்திற்கு கூடுதல் பலம். இருப்பினும் குழப்பமான திரைக்கதை பெரும் குறை. ஒவ்வொரு காட்சியுமே, புதிர் விளையாட்டுப்போல தொடங்கி, அடுத்தடுத்த காட்சிகளில் முடிச்சு அவிழ்வதில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.

சனம் ரெட்டியுடன் தவறான பழக்கத்தில் இருக்கும் டாக்டராக வரும் யோக் ஜப்பி, பணக்காரர்களின் ரகசிய வாழ்க்கையை படம் பிடித்துச் சம்பாதிக்கும் போட்டோகிராஃபர் ரியாஸ் இவர்களை சம்பந்தப்படுத்தும் காட்சிகள் தாறுமாறு. மூளையில் ஏற்படும் நோயினால் தவிக்கும், ரோஹித் குடும்பம் விமான மாயத்தில் என்னவானது என்பதை க்ளைமேக்ஸில் சொல்லும் காட்சியில் எடிட்டிங்கில் மிரட்டியிருக்கிறார் ராஜா சேதுபதி. 

அந்த போலீஸ் கதாபாத்திரம் எதற்கு... யோக் ஜப்பியின் குடும்பத்தை கடத்திவைத்திருப்பது ஏன்... சதுர அறையை எப்படி கண்டுபிடிக்கிறான்... இவற்றுக்கான இணைப்புகள் மிஸ்ஸிங். ’வாழணும்னு ஆசப்படுறவனால வாழமுடியல, ஆனா கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்கா வாழலைனா மரணம் உறுதி” என்று saw சொன்னதை இன்னும் அழுத்தமான காட்சிகளுடன்  சொல்லியிருக்கலாம். 

     நேர்கோட்டில் பயணிக்காமல் சதுரத்தில் பயணித்திருக்கும் திரைக்கதை, நிச்சயம் ஒரு வெல்கம் முயற்சி. பயம் ஒரு போதை. பார்வையாளர்களைச் சரியாக பயமுறுத்திவிட்டால் போதும். அதை முடிந்தளவுக்கு முயற்சித்திருக்கிறது சதுரம் குழு. ஆனால், பரப்பளவு பெரிதாக இருந்திருக்கலாம் என்பது மட்டுமே ஏக்கம்!