Published:Updated:

பெண் ‘நோ’ என்றால் அதற்கு ‘நோ’ என்றுதான் அர்த்தம்! முகத்திலறையும் பிங்க்! #படம் எப்படி? #pink

பெண் ‘நோ’ என்றால் அதற்கு ‘நோ’ என்றுதான் அர்த்தம்!  முகத்திலறையும் பிங்க்! #படம் எப்படி? #pink
பெண் ‘நோ’ என்றால் அதற்கு ‘நோ’ என்றுதான் அர்த்தம்! முகத்திலறையும் பிங்க்! #படம் எப்படி? #pink

வெகு குறைவான படங்களே, திரையரங்கத்தில் பார்வையாளனாக இருக்கும் உங்களை திரைக்குள் இழுத்துப் போடும் வல்லமை கொண்டதாக இருக்கும். டாப்ஸி பன்னு, கிர்த்தி குல்ஹரி, ஆண்ட்ரியா டரியங், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிங்க் அப்படியான ஒரு படம்.  

நள்ளிரவில் இரண்டு கார்கள் விரைவதில் தொடங்குகிறது படம். ஒன்றில் மினல் அரோரா (டாப்ஸி), ஃபலக் அலி (கிர்த்தி குல்ஹரி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா டரியங்) ஒருவித பதற்றத்துடன் விரைந்து கொண்டிருக்கின்றனர். மற்றொன்றில் ராஜ்வீர் சிங் (அங்கத் பேடி) மற்றும் அவனது மூன்று நண்பர்கள்.

ராஜ்வீரின் மண்டையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறான். காயத்திலிருந்து கண்ணாடித்துகள்கள் எடுக்கப்படுகின்றன. ’போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம்’ என்கிறார்கள். 

பார்ட்டி ஒன்றில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட ராஜ்வீரை டாப்ஸி தாக்கியிருக்கிறார் என்பது வசனங்கள் மூலம் தெரியவருகிறது. அதற்குப் பிறகு அரசியல் பின்புலமிக்க ராஜ்வீர், தன் நண்பர்களோடு டாப்ஸியையும் அவரது தோழிகளையும் வீட்டைக் காலி செய்ய வைக்க முயற்சி எடுக்கிறான். ஃபலக் அலியின் செல்ஃபோன் எண்ணை வெளியிட்டு அவளை ஆபாசமாக சித்தரிப்பதால் அவள் வேலை போகிறது. ஆண்ட்ரியா போகுமிடத்திலெல்லாம் கண்காணிக்கப்படுகிறாள்.    

ஒரு பார்ட்டியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அமைதியற்றவராகவே காணப்படும் மினல் அரோராவை (டாப்ஸி) கவனிக்கிறார் அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் தீபக் ஷெகல் (அமிதாப் பச்சன்). ஒரு நாள், மினல் காரில் கடத்தப்படுகிறாள். பதற்றத்தோடு அமிதாப் காவல்துறைக்கு தொலைபேசுகிறார். அப்படி ஒரு கார் நீங்கள் குறிப்பிட்ட பகுதியிலோ, சுற்றுவட்டாரத்திலோ காணப்படவில்லை என்று பதில் வருகிறது. மினல், அந்தக் காரில் ராஜ்வீரின் நண்பர்களால் மிரட்டப்பட்டு, பலவந்தப்படுத்தப்பட்டு இறக்கிவிடப்படுகிறாள். அவள் சோர்ந்து திரும்பி வருவதையும் கவனிக்கிறார் தீபக் ஷெகல். 

இனிமேலும் பொறுக்கமுடியாது என்று போலீஸில் புகார் கொடுக்கிறார் மினல். போலீஸோ, சம்பந்தப்பட்டிருப்பது அரசியல்வாதியின் மகன் என்பதால் உயரதிகாரிகள் பலரது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

அடுத்தநாள், இந்தப் பெண்கள் வசிக்கும் ஃப்ளாட்டிற்கு வரும் போலீஸ், மினல் அரோராவை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறது. ராஜ்வீர், 'தன்னை மினல் அரோரா கொலை செய்ய முயற்சித்ததாக' வழக்கு கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘நான்தானே கேஸ் குடுத்தேன்’ என்று கேட்கும் மினலுக்கு பதில் கிடைப்பதில்லை. பார்க்கச் சென்ற அவரது தந்தை, மற்றும் இரண்டு தோழிகளையும் இரவு வரை காத்திருக்க வைத்து ஐந்து நிமிடம் பார்க்க வைத்து அனுப்புகிறது போலீஸ். இந்தப் பெண்கள் விலைமாதுக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை வந்துதான் ராஜ்வீரின் மண்டை உடைந்ததாக போலீஸ் தரப்பு கதை கட்டுகிறது. அதிர்ந்து போகிறார்கள் மூவரும்.    

தீபக் ஷெகல், இவர்களது ஃப்ளாட்டிற்கு வந்து, ‘வக்கீல் வைங்க. இந்த செக்‌ஷன்ல மனு போடுங்க. பெண்கள், மைனருக்கெல்லாம் இது நான் பெய்லபிள் அல்ல’ என்கிறார். அப்போதுதான் தீபக் ஷெகல் (அமிதாப்) பிரபல வழக்கறிஞர் என்பது தெரிகிறது.

பைபோலா டிஸ் ஆர்டரால் பாதிக்கப்பட்டிருக்கும் அமிதாப், ப்ராக்டிஸை விட்டுவிட்டு தன் நோயாளி மனைவியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் பெண்களின் நிலை அவரது அமைதியைக் குலைக்கிறது. வழக்கறிஞர்களோ ‘இது பெரிய இடத்து கேஸ்’ என்பதைப் புரிந்து கொண்டு நழுவுகிறார்கள். ‘நாங்கள் அலுவலகம் செல்லும் சாதாரண பெண்கள்தான்’ என்று அமிதாப்பிடம் சொல்கிறார்கள் டாப்ஸியின் தோழிகள். களத்தில் இறங்க முடிவு செய்கிறார் அமிதாப். 

இடைவேளைக்குப் பின் பெரும்பாலும் நீதிமன்றக் காட்சிகள்தான். பார்ட்டியில் என்ன நடந்தது என்பது திரையிலிருக்கும் கதாபாத்திரங்களுக்கு தெரியாதது போலவே, நமக்கும் காண்பிக்கப்படுவதில்லை. வாதப் பிரதிவாதங்கள் மூலமே நிகழ்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் பின்புலம், காவல்துறை ஆதரவு உட்பட பலவற்றிற்கு முன் டாப்ஸியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன ஆனது, வழக்கை எப்படி எடுத்துச் செல்கிறார் அமிதாப் என்பதையெல்லாம் வாதங்களில் அறைகிற வசனங்களால் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் அனிருத்த ராய் சௌத்ரி. 

படத்தின் டைட்டிலின் மூன்று பெண்களின் பெயர்களுக்குப் பிறகே பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பின் பெயரே காண்பிக்கப்படுகிறது என்பதில் சொல்லிவிடுகிறார் கதையின் மையக்கருத்தை. அமிதாப்பின் அலட்டலில்லாத நடிப்பு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். அவருக்கு அடுத்தபடியாக ஆச்சர்யப்படுத்தியிருப்பவர் டாப்ஸி. நிகழ்ந்தவைகளின் தாக்கம் மனதில் இருந்தாலும், தைரியமான பெண்ணாகவே படம் முழுவதும் வருகிறார். பதற்றமும், கோபமும் இருந்தாலும் இந்த ஆண் சமுதாயத்தில் நான் வாழ, இன்னும் செய்ய வேண்டியது என்ன என்று அவரது முகமும் கண்களும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

‘நீ வெர்ஜினா’ என்று அமிதாப் நீதிமன்றத்தில் கேட்க நீதிபதி அதிர்ந்து இந்தக் கேள்வி தேவையா என்கிறார்.

தேவைதான் என்று அமிதாப் தொடர்ந்து கேட்க, ‘தனி அறையில் வேண்டுமானால் வாதத்தை வைத்துக் கொள்ளலாம்’ என்கிறார் நீதிபதி. தேவையில்லை என்று சொல்லும் டாப்ஸி, ‘நான் வெர்ஜின் இல்லை’ என்கிறார். தொடர்ந்து நடக்கும் வாதத்தில் ‘என் 19 வயதில், நானும் என் பாய்ஃப்ரெண்டும் உறவு கொண்டோம். அதற்குப் பிறகும் சிலருடன் தொடர்பில் இருந்தேன். ஆனால் அன்றைக்கு ராஜ்வீர் அப்படி நடந்து கொள்வான் என்பது தெரியவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இருக்கவில்லை’ என்கிறார்.

‘நீங்கள் என்ன செய்தீர்கள்?” - அமிதாப்.

‘தடுத்தேன்’ - டாப்ஸி.

‘பிறகு?’

‘வேண்டாம் என்றேன்’

“எப்படி’

‘நோ என்று சொன்னேன்’

’கொஞ்சம் உரக்கச் சொல்ல முடியுமா?”

நோ என்று கத்தினேன்

இப்போது அமிதாப் நீதிபதியிடம் திரும்புகிறார். ‘தட்ஸ் ஆல் யுவர் ஆனர். இவர் நோ என்றிருக்கிறார். அதற்குப் பிறகும் பலவந்தப் படுத்தப்பட்டிருக்கிறார். பெண்கள் நோ என்றால் நோ-தான் யுவர் ஆனர். அவள் மாடர்னாக உடை அணிந்திருக்கிறாள், குடிப்பாள், ஆண்களோடு சிரித்துப் பேசுவாள், ஆண்களைத் தொட்டுப் பேசுவாள், தனியாக வசிக்கிறாள், நேரம் கழித்து அறைக்கு வருகிறாள் இது எதையும் நாம் பார்க்கத் தேவையில்லை. அவள் நமது தோழியாக இருக்கலாம், உடன் பணிபுரிபவளாக இருக்கலாம். மனைவியாக இருக்கலாம். அவள் நோ என்றால் ‘நோ’தான் யுவர் ஆனர். அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை” என்கிறார்.

அவ்வளவுதான். மொத்தப்படத்தின் சாராம்சமும் இதில் அடங்கும்.

மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் தவிர்த்து, எதிர்வாதம் புரியும் வழக்கறிஞர், நீதிபதி, பெண் போலீஸ், ராஜ்வீரின் நண்பர்கள் என்று கதாபாத்திரத் தேர்வு, சித்தரிப்பு எல்லாமே அற்புதம். பெங்காலியில் பேர் பெற்ற இயக்குநரான அனிருத்த ராய் சௌத்ரி அழுத்தமாக தான் சொல்ல வந்த கருத்தை நமக்குள் புகுத்துகிறார். ‘ஆண்கள், பெண்களுக்கென்று சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்’ என்பது, ’இதெல்லாம் பெண்களுக்கான சேஃப்டி மேனுவல்’ என்பது, பெண் போலீஸை, ‘சூப்பர் உமன்’’ என்று அமிதாப் அழைப்பது உட்பட பல இடங்களில் வெகு சீரியஸான விஷயங்களை சட்டயராகச் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் கடைசியில்தான் உண்மையில் அந்தப் பார்ட்டியின்போது நடந்தது என்ன என்று காண்பிக்கிறார்கள்.

கேமரா இப்படி, இசை அப்படி என்ற விமர்சனங்களைத் தாண்டி, கருப்பொருளுக்காகவே பார்க்க வேண்டிய படம் பிங்க். இதைப் போன்ற படங்கள் சொல்லும் சேதியைப் புரிந்து கொண்டாலே போதும்... பெண்கள் மீதான பார்வையின் கோணங்கள் மாறுபடும்.     

படத்தின் டிரெய்லரைக் காண