Published:Updated:

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா... அது படமல்ல...காவியம்! #1YearOfTrishaIllanaNayanthara

Vikatan Correspondent
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா... அது படமல்ல...காவியம்! #1YearOfTrishaIllanaNayanthara
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா... அது படமல்ல...காவியம்! #1YearOfTrishaIllanaNayanthara

படத்தின் ட்ரெய்லர் வெளிவரும்போதே பரபரப்பாகிப் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்கிற திரைக்காவியம் வெளிவந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. அப்போதே துவைத்துத் தொங்கவிடப்பட்ட படத்தின் நினைவுகளைக் கொஞ்சம் மீட்டெடுப்போம். (!!!) 
#OneYearOfTrishaIllanaNayanthara

* "மனுஷன் உருவாக்குன தண்ணியும், கடவுள் கொடுக்குற தண்ணியும் ஒண்ணா சேரும்போதுதான் உண்மையான போதை" என ஓப்பனிங்கிலேயே உலகத்தரமான தத்துவத்தோடு சரக்கில் மழைநீரை மிக்ஸிங் செய்து ஆரம்பிக்கும்போதே படம் அழுத்தமான ஒரு கருத்தைச் சொல்லவருகிறது என நாம் புரிந்து கொள்ளலாம். # அடங்கப்பா...

* ஒண்ணும் அறியாத சின்னப்பசங்க மனசுல நஞ்சை விதைச்சு அந்த ரெட்டை வார்த்தையைப் பிரபலப்படுத்தி, பெற்றோர்களை நெளியவைத்த அந்தப் பெருமைக்குரிய வசனம் 'டேவிட் புள்ள'. காலமெல்லாம் மறக்கமுடியாத காவிய வரி இதுவல்லவா?

*முருங்கைக்காய் கேசரி, முருங்கைக்காய் துவையல்னு பல புதுப் பதார்த்தங்களை அறிமுகப்படுத்தி பாக்யராஜுக்குப் பிறகு முருங்கைக்காயை அதிகமாகப் பயன்படுத்தின படம் என்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்ட தன்னிகரில்லாத் திரைப்படம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

* கெமிஸ்ட்ரி லேபில் பிப்பெட்டைக் குலுக்கும்போது, யார் உனக்கு நினைவுக்கு வர்றதுனு ஹீரோயினின் தோழி கேட்பதற்கு, ஹீரோயின் 'ஜீவா'ன்னு சொல்லும்போது அழகான அதிசயக் காதலில் ஏற்படும் ரொமான்ஸ் மாதிரி பி.ஜி.எம் போட்ட அந்தக் காட்சிக்கு எழுந்து நின்னு கை தட்டணும்னு எத்தனை பேருக்குத் தோணுச்சு? #என்ன கொடுமை சரவணா?

* "பிட்டுப்படம் டி..." பாடல், 'வெர்ஜின் பொண்ணுங்க டைனோசர் காலத்திலேயே அழிஞ்சு போய்ட்டாங்க' போன்ற சர்ச்சைகளுக்காகவே படம் முழுக்கப் பாப்புலராகி, மாதர் சங்கங்களுக்கு ராப்பகலா வேலை கொடுத்த பெருமை இந்தப் படத்தையே சாரும்.

* ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் பண்ணினதுக்குப் பேரு காதல்னு சொல்லி அப்பப்போ, ஃபீலிங்காகி அழுதுகிட்டே சோகமாகத் திரிவார். படம் முழுவதும் பண்ற வேலையெல்லாம் பண்ணிட்டு கடைசில சின்ன வயசுல கொடுத்த கிப்டைப் பார்த்து ஃபீலிங்கில் பொங்குறது... டேமிட்ட்...!

* சிக்கன் லெக்பீஸ், பால் பாக்கெட் என படம் முழுக்க டபுள், ட்ரிபிள் மீனிங்கெல்லாம் இல்லாமல்... சிங்கிள் குறியீடாகவே காட்சிகள் அமைத்து தமிழில் இப்படியும் படம் எடுக்கலாம் எனத் தன்னம்பிக்கை கொடுத்த காவியத்தை... இளைஞர்களால் அவ்வளவு எளிதில் மறந்திட முடியுமா?

* இந்தக் காலத்துப் பசங்களுக்கு ஏத்தமாதிரிப் படம்னு பில்டப் கொடுத்துக் கடைசியில இப்படி ஒரு படத்தை வெளியிட்டதுக்காகவே டைரக்டர் மேல கேஸ் போடலாம். நாங்க இப்படியாய்யா இருக்கோம்?

* இந்தப் படத்தை எல்லாம் எப்படி சென்சார் போர்டு வெளியிட அனுமதிச்சாங்கனு சென்சார் போர்டையே சந்தேகப்படவெச்ச ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. # அந்த தெய்வத்துக்கே ஒரு சோதனைன்னா மொமென்ட்.

* படம் முடியும்போது இந்தப் படத்தை ஏன் பார்த்துத் தொலைஞ்சோம்னு உங்களுக்குத் தோணின காரணத்துக்காகவாச்சும் இந்த   வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாளைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க ரசிகர்களே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி