Published:Updated:

'நானும் லவ்வர்தான்' விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

'நானும் லவ்வர்தான்' விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
'நானும் லவ்வர்தான்' விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
'நானும் லவ்வர்தான்' விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

விக்னேஷ் சிவன்... இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் பல இளைஞர்களின் பொறாமையை சம்பாதித்து வைத்திருக்கும் நபர் இவராகத்தான் இருப்பார். மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் சுற்றிக்கொண்டிருந்த இவர் இன்று கோலிவுட்டில் பல தயாரிப்பாளர்கள், நாயகர்களின் விஷ்லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார். இந்த இடத்தை அவர் ஒன்றும் சாதாரணமாகப் பிடித்துவிடவில்லை.

பெற்றோர் இருவரும் காவல்துறை அதிகாரிகள். சிறு வயதிலேயே தனது தந்தை இறந்துவிட, ஒற்றை ஆணாக இருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் விக்னேஷ் சிவன் மேல் விழுந்தது. சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது நடிகர் சிம்பு இவரது சீனியர். அங்கு தொடங்கிய நட்பு தனது முதல்படத்தை அவரை வைத்தே இயக்குவது வரை வளர்ந்து நின்றது. சினிமா ஆசையில் தரண் இசையில் ஒரு குறும்படத்தை முடித்துவிட்டு, ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்திடம் காண்பித்து படம் இயக்க ஓகே வாங்கினார். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் வெளிவர நான்கு ஆண்டுகளானது. வெளிவந்த பின்னும் கலவையான விமர்சனங்கள். தனது அடுத்த படமான நானும் ரவுடி தான் வெளிவருவதற்குள் பல திரைப்படங்களில் பாடலாசிரியர் ஆகவும் கலக்க ஆரம்பித்திருந்தார் நம்மவர்.

முதல் படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே பெரும் இடைவெளி. ஆனால் விக்னேஷ் சிவனுக்கு ஓய்வென்பதே பிடிக்காது போல. எப்போதும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார் மனுசன். படம் இயக்க லேட் ஆகும் என்றால் உடனே பாட்டெழுதுவது, ஆல்பம் இயக்குவது போன்ற சினிமா சார்ந்த அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிடுகிறார். இதற்கிடையில் நடிகராகவும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்தில் தலைகாட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! (பில்டிங்ல தனுஷ் கூடவே சுத்துவாரே ஒரு இஞ்சினியர் அவர்தாங்க!). இந்தக் காலகட்டத்தில் தான், தனது அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்கும் அளவிற்கு இவர்களுக்கிடையே நட்பு வலுவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் வராட்டி என்ன... உலக அமைதியை வலியுறுத்தி ஆல்பம் விட்றேன் என கொலைவெறியாய் 'லவ் ஆந்தம்' ஆல்பம் முயற்சியில் சிம்பு இறங்க... அதற்கு காட்சியமைக்கும் வேலையைச் செய்தது விக்னேஷ் சிவன் தான். அனிருத் உடன் ஏற்பட்ட நட்பிற்காக, சென்னையின் அருமை பெருமையை விளக்கும் 'சான்சே இல்ல' என்ற ஒற்றை ஆல்பம் பாடலுக்கு, தானே பாடல் வரிகளை எழுதி இயக்கிக் கொடுத்தார். அதன்பின் நானும் ரவுடி தான் ஹிட்டுக்குப் பிறகு காதலில் விழுந்திருந்த போதையில், காதலர் தின ஸ்பெஷலாக அனிருத்-விக்னேஷ் கூட்டணியில் உருவானது தான் 'அவளுக்கென்ன' ஆல்பம் பாடல்.

பாடலாசிரியராகப் பிற திரைப்படங்களில் பணியாற்றிய இவர், தனது திரைப்படங்களுக்கு மட்டும் வெளியேயா செல்வார்? இதுவரை தான் இயக்கிய மூன்று படங்களிலும், இயக்குநர் பேரரசு பாணியில் பாடல்கள் அனைத்தையும் தானே எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் பாடல் வரிகள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்து மனதில் பாடவைத்துக் கொண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

'நானும் லவ்வர்தான்' விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

தனது படங்கள் தவிர்த்து, 'வணக்கம் சென்னை' திரைப்படத்தில் வந்த 'எங்கடி பொறந்த' பாடல் மூலம் இளசுகளை முணுமுணுக்க வைத்தார். என்னை அறிந்தால் திரைப்படத்தில் 'அதாரு உதாரு' பாடல் மூலம் திரையில் அஜித்தையும், திரையரங்கில் அவரது ரசிகர்களையும் குத்தாட்டம் போட வைத்தார். 'ரெமோ' திரைப்படத்தில் இவர் எழுதிய நான்கு பாடல்கள், இளசுகளின் ஹார்ட் பீட்டை ஏத்திக்கொண்டிருக்கின்றன. வெளியாகவிருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த 'சோக்காளி' பாடல் தான் தற்போது ஜென்-Z சமூகத்தின் லேட்டஸ்ட் ரிங்டோனாக இருக்கிறதென்பது இவரது பாடலாசிரியர் பரிணாமத்திற்கு மணிமகுடம்.

தனுஷ் இவரது படத்தைத் தயாரிக்க முன்வந்தார். விஜய் சேதுபதியை கதாநாயகனாக கமிட் செய்தார். ஹீரோயினாக அழகுதேவதை நயன்தாரா. காமெடி, காதல் என அனைத்தையும் கலந்துகட்டி வெளிவந்த இத்திரைப்படம் பெரிய ஹிட். வெளியான படங்கள் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த நிலையில் ஒரு பெரிய ஹிட்க்குக் காத்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு பெரிய உத்வேகத்தைத் தந்தது இத்திரைப்படம்தான். முதல் படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், இரண்டாவது படத்தில் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்ததில் விக்னேஷ் சிவனுக்கும் இது முக்கியமான திரைப்படம். அடுத்ததாக லிஸ்ட்டில் உள்ளது நயன்தாரா. ஏனென்ற காரணம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கே தெரியும் என்பதால் அடுத்த பாய்ண்டிற்கு சைலண்ட்டாக ஸ்கிப் செய்வோம். அடுத்ததாக வில்லனாக ஒரு காலத்தில் மிரட்டிவந்த ஆனந்த் ராஜை மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததிற்காக விக்னேஷ் சிவனுக்கு ஸ்பெஷல் பாராட்டும் நன்றியும்! இவ்வாறு இத்திரைப்படம் பலரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கு முன்புவரை இரண்டுநாள் தாடியுடன் சுற்றிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன், அதன்பின் தாடியை ஷேவ் செய்யவே இல்லை. நயனுக்கும் தாடிக்கும் உள்ள சென்டிமென்ட் தான் இதற்குக் காரணமென கோலிவுட் வட்டாரத்தில் ஒரு 'டாக்' இருக்கிறது.

இவரது அடுத்த திரைப்படத்தில் கால்ஷீட் காரணமாக அஜித் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அதன்பின் சூர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கியதாகவும் செய்தி. அஜித் நடிக்க முடியாமல் போன திரைப்படங்களான 'நந்தா', 'காக்க காக்க', 'கஜினி' ஆகியவை சூர்யாவின் திரைவாழ்வில் பெரிய வெற்றியைத் தேடித்தந்த சென்டிமென்ட் இருப்பதால், இப்படமும் பெரும் வெற்றி பெறும் என கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர்.

அவரது பாடல் வரிகளிலேயே அவரை வாழ்த்துவதென்றால், காதலிக்க நேரமுள்ள இந்த ரவுடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

- கருப்பு