Published:Updated:

கமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா?

கமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா?
கமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா?

கமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா?

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றவுடன் அந்த நேரத்தில் வெளியாகவிருந்த பல படங்களின் பெயர்களை சடசடவென மாற்றினார்கள். மாஸ் ஆங்கில வார்த்தை, மனிதன் சமஸ்கிருத வார்த்தை என சமீபத்தில் வந்த படங்கள் வரை அந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பெயர் சிக்கல்கள் இன்றில்லை என்றோ தொடங்கிவிட்டது. பல்வேறு காரணங்களுக்காக பெயர் மாற்றமடைந்த சில படங்கள், அவற்றின் காரணங்கள் என பல சுவாரஸ்யங்களின் தொகுப்பு...

நான் காந்தி அல்ல - நான் மகான் அல்ல (1984)

'நான் காந்தி அல்ல' என்ற தலைப்புடன் படம் தயாரிப்பில் இருந்த போது காந்தியை அவமதிப்பது போன்ற தலைப்பு என சர்ச்சை ஆனது. சென்சாரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தலைப்பு பின்னர் 'நான் மகான் அல்ல' ஆனது.

டாப் டக்கர் -  ஒரு கைதியின் டைரி (1984)

பாக்யராஜ்  மும்பை சென்றிருந்த போது பாரதிராஜாவும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருப்பதை ஊழியர் ஒருவர் மூலம் அறிந்து கொள்கிறார் . அவரை சென்று சந்தித்த போது தான் எடுத்திருக்கும் 'டாப் டக்கர்' பற்றியும் அது சிவப்பு ரோஜாக்கள் போலவே வந்ததை பற்றி கூறியிருக்கிறார். குருநாதரின் வருத்தத்தைப் பார்த்தவர்  டாப் டக்கரில்  எதாவது மாற்றம் செய்ய முடிகிறதா என பார்க்கிறேன் என்றிருக்கிறார். பிறகு கதைக்கான அவுட் லைன் கிடைத்ததும் பாரதிராஜாவுக்கு போன் பண்ணி சொல்ல பாரதிராஜாவின் 'டாப் டக்கர்' பாக்யராஜ் கதைப்படி 'ஒரு கைதியின் டைரி' ஆனது. பின்னர் அது பாக்யராஜ் இயக்கத்திலேயே இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் 'ஆக்ரி ராஸ்தா'வாக ரீமேக்கும் ஆனது.

மீண்டும்  சூர்யோதயம் - நானும் ஒரு தொழிலாளி (1986)

'மீண்டும் சூர்யோதயம்' 1986 ஏப்ரலில் வெளியிடத் திட்டமிடப்பட்டு பின்னர் மே 1ல் வெளியிடலாம் என தள்ளிவைக்கப்பட்டது. அது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வென்றிருந்த நேரம். இந்த தலைப்பில் படம் வெளியானால் அவர்கள் வெற்றியை ஆதரிப்பது போல இருக்கும் என்ற கருத்து வர, ரிலீஸ் தேதியான மே 1ஐ மையமாக வைத்து 'நானும் ஒரு தொழிலாளி' எனப் பெயரிடப்பட்டது. 'நானும் ஒரு தொழிலாளி' என்ற தலைப்பு எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீதர் இயக்குவதற்காக பதிவு செய்து வைத்திருந்த தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தெருப்பாடகன் - புது பாடகன்: (1990)

தெருப்பாடகன் என்கிற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறதென நினைத்து புது பாடகன் என்று பெயர் மாற்றப்பட்டது.

மதிகெட்டான் சோலை - குணா (1991)

குணா படம் மதிகெட்டான் சோலை என்ற இடத்தில் எடுக்கப்பட்டதால் அந்த பெயரே தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் என கூறியிருக்கிறார் கமல். மதிகெட்டான் என்றால் மனம் பிறழ்ந்தவன் என்ற அர்த்தமும் இருப்பதால் கமலுக்கு விருப்பம்.  ஆனால், பலருக்கும் அதில் சம்மதம் இல்லாததாலும், அப்போது ஹீரோவின் பெயரை படமாக வைப்பது ட்ரெண்ட் என்பதாலும் 'குணா'வானது தலைப்பு.

நம்மவர் - தேவர் மகன்: (1992)

படத்தைப் பார்த்த இசையமைப்பளர் இளையராஜா இந்தப் படத்துக்கு நம்மவர் என்கிற தலைப்பைவிட தேவர் மகன் என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதன் பின் நம்மவர் தேவர்மகனாக வெளியானது. வாழ்க ராஜா.

இந்திரஜித் - கலைஞன்: (1993)

ஆக்ரோஷமான தெய்வத்தின் பெயரை படத்துக்கு வைத்தால் அந்தப் பட சம்மந்தப்பட்டவர்களுக்கு எதாவது விபத்து நேரும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. ரஜினியின் காளி படம் சம்மந்தப்பட்ட ஒரு பிரபலத்துக்கு விபத்து நேர்ந்தது எனவும் கூறப்பட்டது. இந்திரஜித் சமயத்தில் கமலுக்கு ஒரு விபத்து நேர்ந்து 2 மாதம் ஓய்வில் இருந்ததார். இந்தக் காரணங்களால் கலைஞன் ஆனான் இந்திரஜித். 

துரோகி - குருதிப் புனல்: (1995)

அந்த சமயத்தில் ரசிகர் மன்றங்கள் சினிமா பெயரை முன்னால் வைத்தே உருவாகும். உதாரணமாக, 'நாயகன்' கமல் ரசிகர் மன்றம், 'வெற்றிவிழா' கமல் ரசிகர் மன்றம், 'குணா' கமல் ரசிகர் மன்றம். ஒரு வேலை துரோகி என்ற பெயரில் படம் வெளியாகி இருந்தால் 'துரோகி' கமல் ரசிகர் மன்றம் என்றா பெயர் வைக்க முடியும்?. இந்தப் பிரச்சனையை கமலிடம் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூற குருதிப் புனல் ஆனான் துரோகி.. ஆனால் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் 'துரோகி' என்ற பெயரிலேயே வெளியானது. (அங்கு கமலுக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை போலும்)

ஏறுமுகம் - ஜெமினி: (2002)

1990களில் மெட்ராசை மெர்சல் செய்த இரண்டு ரவுடிகள் ஒரு காவல் துறை ஆணையரால் திருத்தப்பட்ட செய்தியைப் படித்து இயக்குநர் சரண் பிடித்த லைன் தான் ஜெமினி. ஆரம்பத்தில் அந்தப் படத்துக்கு வைத்த தலைப்பு ஏறுமுகம். அஜித் நடிப்பதாக இருந்த கதை. பின், அதுவே ஜெமினி ஆனது

கீதை - புதிய கீதை (2003)

கீதை என்ற பெயரை அறிவித்ததும் பகவத்கீதையை இழிவுபடுத்துவதாக சில சர்ச்சைகள் ஆரம்பமாக, புதிய கீதை என மாற்றமடைந்தது.

சண்டியர் - விருமாண்டி: (2004)

சண்டியர் டைட்டில் பல சர்ச்சைகளை சந்தித்ததும், அதற்கு கமல் பேசும் எமோஷனல் வீடியோவும் எல்லோருக்கும் தெரிந்ததே. சண்டியர் என்பது ஒரு சாதியை அடையாளப்படுத்துவதாக  விஷயம் விவகாரம் ஆக கடைசியில் கமலின் கதாப்பாத்திரப் பெயரான 'விருமாண்டி' தலைப்பாக வைக்கப்பட்டது. ஆனால், பின்நாளில் (2014) 'சண்டியர்' என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மிரட்டல் - கஜினி (2005) 

தீனா படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படம் என துவங்கியபோது மிரட்டல் எனப் பெயரிடப்பட்டிருந்தது. சில கரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டு பின் மீண்டும் சூர்யா நடிப்பில் கஜினியாக துவங்கப்பட்டது. ஒளிப்பதிவு ஜீவாவிலிருந்து ஆர்.டி.ராஜசேகர், இசை யுவன் ஷங்கர் ராஜாவிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் என நிறைய மாற்றங்கள். ஆனால் ஹீரோயின் அசின் மட்டும் மாறவில்லை. 

காட் ஃபாதர் - வரலாறு: (2006)

படம் ஆரம்பித்ததிலிருந்து  பல எதிர்பார்ப்புகள். காரணம் படத்தில் அஜித்திற்கு ட்ரிபிள் ரோல். அதில் பரதகலைஞராக அஜித் நடித்த ரோல் அதிகம் விமர்சனத்துள்ளானது. அதே அளவு வரவேற்பையும் பெற்றது. வெளியாகும் சமயத்தில் தமிழ் பெயர் வைக்கவில்லை என்றால் வரிவிலக்கு அளிக்கப்படாது என அரசு அறிவிக்க வரலாறு  (ஹிஸ்டரி ஆஃப் காட்ஃபாதர் ) எனப் பெயர் மாற்றமடைந்தது.

தெய்வத்திருமகன் - தெய்வத்திருமகள்: (2011)

முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு 'தெய்வமகன்'. ஆனால், அதே பெயரில் முன்னரே சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருந்ததாலும் சில காரணங்களாலும் அந்த தலைப்பு கிடைக்கவில்லை. பின்னர் 'பிதா' என பெயர் வைக்கப்பட்ட போதும் அதே பிரச்னை. பின்னர் 'தெய்வத்திருமகன்' என்ற தலைப்பு வைக்கப்பட்ட போது தேவர் இன அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க இறுதியில் 'தெய்வத்திருமகள்' என்ற தலைப்பில் வெளியானது படம்.

ஹைக்கூ - பசங்க 2: (2015)

ஹைக்கூ எனப் பெயரிடப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்ட போதும், அரசு உத்தரவின் படி தமிழ் பெயர் வைக்க வேண்டியிருந்ததாலும் பசங்க படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் மனதில் வைத்து பசங்க 2 ஆனது ஹைக்கூ.

சட்டென்று மாறுது வானிலை - அச்சம் என்பது மடமையடா (2016)

கௌதம் இயக்கத்தில் மீண்டும் சிம்பு என அறிவிப்பு வந்த போது படத்தின் பெயர் 'சட்டென்று மாறுது வானிலை'. ஹீரோயினாக பல்லவி சுபாஷ் என படப்பிடிப்பும் தொடங்கியது. பிறகு அஜித் நடிப்பில் 'என்னை அறிந்தால்' இயக்க வாய்ப்பு வந்தது. சிம்புவும் அஜித் படத்தை முடிங்க என சொல்லி அனுப்பி வைத்தார். பிறகு அந்த தலைப்பில் ஏற்கெனவோ ஒரு படம் சென்சார் ஆகியிருப்பதை அறிந்ததும் 'அச்சம் என்பது மடமையடா'வானது. ஹீரோயினாக மஞ்சிமா மாற்றப்பட்டது, சிம்பு முத்தம் குடுப்பதற்கு  அவர் ‘நோ’ சொன்னது என  சில சிக்கல்கள் எல்லாம் முடித்து படம் இப்போது ரெடி.

-  பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு