Published:Updated:

ஹீரோ வேஷமே வேணாம் சாமீ..! வடிவேலு கறார்

Vikatan Correspondent
ஹீரோ வேஷமே வேணாம் சாமீ..! வடிவேலு கறார்
ஹீரோ வேஷமே வேணாம் சாமீ..! வடிவேலு கறார்

ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் நெகிழ்ச்சி என்று இரட்டை குதிரையில் இன்பச்சவாரி செய்து கொண்டு இருக்கிறார், வடிவேலு. ஒன்று 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' இரண்டாம் பாகத்தில் ஹீரோ வேடம். இன்னொன்று  விஷாலின் 'கத்திச்சண்டை', லாரன்ஸ் ராகவேந்திராவுடன் 'சிவலிங்கா' படங்களில் காமெடி வேடம்.  முன்பு வெளிவந்த 'தெனாலிராமன்' படத்தில் நடித்தபோது 'இனிமேல்  சிரிப்பு வேடத்தில் நடிக்க மாட்டேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன்'  வட்டச்செயலாளர் வண்டு முருகன் அடம்பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடம்கட்ட தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும்  வைகை புயலை வாஞ்சையோடு நாடினர்.  புயல் தொடர்ந்து  பிடிவாதம் பிடிக்கவே 'இதுக்கு மேல முடியாது குருநாதா ...'  என்று தேடிப்போனவர்கள் தெறித்து ஓடினர்.   

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'இம்சை அசரசன் 24-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்டர் ஷங்கரும், ரஜினியின் '2.0' படத்தை தயாரித்துவரும் லைக்கா நிறுவனமும் இணைந்து  தயாரிக்கிறது  இந்த படத்தோடு ஹீரோவாக நடிக்கும் எண்ணத்துக்கு  குட்பை சொல்லி ஷட்டரை இழுத்து மூடப்போவதாக போவதாக முடிவெடுத்து விட்டார், வடிவேலு.  இனிமேல் முழுக்க முழுக்க   காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் வேலை மட்டுமே என  தீவிரமாக இறங்கி இருக்கிறார் சரவெடிவேலு .'இப்போ டிவி சேனலை திருப்பினாகூட நாலு வருஷத்துக்கும முன்னாடி  நீங்க நடிச்ச  காமெடியத்தான் ஜனங்க ரசிக்குறாங்க. காமெடிய மட்டும் கை விட்டுடாதீங்க'  என்று   'கத்திச் சண்டை' இயக்குனர் சுராஜும்,   'சிவலிங்கா' இயக்குனர் பி.வாசுவும்  வடிவேலிடம் எடுத்துச் சொல்லி மனம்விட்டு பேசியுள்ளனர் அதன்பிறகே  காமெடி ரோலில் கான்சன்ட்ரேஷன் செய்ய 'கைப்புள்ள' கறாராக  முடிவு எடுத்ததாக  தெரிவிக்கின்றனர்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் சினிமா பிரபலங்கள்  படப்பிடிப்பு இல்லை என்றால்  தங்கள்,குடும்பத்தோடு லண்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து என்று அயல்நாடுகளுக்கு அலுமினிய புறாவில் பறந்து விடுவது வழக்கம். இந்த விஷயத்திலும் வடிவேலு விதிவிலக்கானவர். சினிமா  படப்பிடிப்பு இல்லையென்றால்  உடனே  குடும்பத்தோடு மதுரைக்கு  கிளம்பி விடுகிறார்.  அங்கே 'சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா...' என்கிற பாடலை பாடிக்காட்டி  சொந்த, பந்தங்கள் சுற்றம் சூழ அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துகிறார். 'வெளிநாட்டுல வெள்ளைக்காரன் மூஞ்சிய பார்க்கறதைவிட  சொந்த ஊர்ல சொந்தபந்த முகத்தை பார்க்கறதே தனி சொகம்ணே' என்று சொல்லி பழைய  டி.எம் செளந்தர்ராஜன்  பாடல்களை பாடி நெகிழ்கிறார், வைகைப்புயல்.  

- சத்யாபதி