Published:Updated:

" தமிழ்நாட்டுல மின்சாரமே ஒரு கனவுதானே!" - சர்வதேச விருதளித்த மின்வெட்டு #VikatanExclusive

" தமிழ்நாட்டுல மின்சாரமே ஒரு கனவுதானே!" - சர்வதேச விருதளித்த மின்வெட்டு #VikatanExclusive
" தமிழ்நாட்டுல மின்சாரமே ஒரு கனவுதானே!" - சர்வதேச விருதளித்த மின்வெட்டு #VikatanExclusive

படத்தின் டீஸர் கூட இன்னும் வெளியாகவில்லை, அதற்குள் சர்வதேச அளவில் ஏழு விருதுகளை வென்றுள்ளது 'கனவு வாரியம்' திரைப்படம். அமெரிக்காவில் சிறந்த திரைப்படத்திற்கான ‘பிளாட்டினம் ரெமி விருது', பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த படத்திற்கான 'Audience Favorite Movie' விருது, ரஷ்யாவில் 'இண்டர்நேஷனல் மோட்டிவேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 'Bridge of Arts' திரைப்பட விழாவில் 'சிறந்த தனித்துவமான திரைப்படம்' விருது, மத்திய அரசால் நடத்தப்படும் 'தேசிய அறிவியல் திரைப்பட விழாவில் படத்திற்கு சிறப்பு விருது... இன்னமும் சில விருதுகளையும், பாராட்டுகளையும் குவிக்கிறதுப் படம். இந்த உற்சாகம் படத்தின் இயக்குநர் அருண் சிதம்பரம் பேச்சில் தெறிக்கிறது. படத்தின் ஹீரோ, வசனம், பாடல்கள், கதை, திரைக்கதை எல்லாமே இவர்தான்.

"யார் சார் நீங்க?"

"நான் பக்கா சென்னை பையன். என் அப்பா சிதம்பரம் 80-ஸ்ல பல ஆண் அழகன் விருதுகளை வென்றவர். நம்பியார், எம்.ஜி.ஆர்க்கு எல்லாம் ஜிம் மாஸ்டராக இருந்து டிரெயின் பண்ணவர். எனக்கு சின்ன வயசுலேயே சினிமா ஆர்வம் இருந்தது. என் கவிதை தொகுப்பான 'முயற்சியை மூச்சாக்கு' புத்தகத்தை படித்த அப்துல் கலாம் சார், அப்ப அவர் தங்கி இருந்த, குடியரசு மாளிகைக்கு வரச்சொல்லி பாராட்டினார். ஸ்கூல் முடிஞ்சதும் எனக்கு விஸ்காம் படிக்கணும்னு ஆசை. ஆனா, அப்பா இன்ஜினியரிங் சேர்த்துவிட்டார். அடுத்து அமெரிக்கால எம்.எஸ். அங்க வேலை செஞ்சுட்டே, சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து பெரிய பட்ஜெட் படங்கள் வரை நிறைய படங்களை டிஸ்டிரிபியூட் பண்ணினேன். அமெரிக்காவுல முதன்முதலாக 'சிவாஜி' படத்தை  ஐ மேக்ஸ்ல ஸ்கிரீன்ல ரிலீஸ் செஞ்சேன். ஒவ்வொரு படத்துலயும் ஆடியன்ஸ் எந்த இடத்துல சிரிக்கறான், எந்த பாட்டுக்கு தியேட்டரை விட்டு வெளியே வரான், எந்த சீனுக்கு அழுகறான் அவங்களுடைய பல்ஸ் தெரிஞ்சுக்க முடிஞ்சது. என்னாலயும் ஒரு நல்ல படம் இயக்க முடியும்னு நம்பிக்கை வந்தது. அதுதான் யார்கிட்டயும் சொல்லாமல், ஐந்து இலக்கு சம்பளத்தை விட்டுட்டு பறந்து தமிழ்நாட்டுக்கு வந்து இயக்குநர் ஆகிட்டேன்." 

"எப்படி சினிமா இயக்கத்தை கத்துகிட்டீங்க?"

சிரிக்கிறார் "தியேட்டருக்கு போய் படம் பார்த்து பார்த்துதான் சினிமா இயக்கவும் கத்துகிட்டேன். நான் எந்த இயக்குநரிடமும் அசிஸ்டென்டாக வேலை செய்யலை. குறும்படம் கூட எடுத்ததில்லை.  படத்தின் ஸ்கிரிப்ட் எழுத மட்டும் 2 வருஷம் எடுத்துகிட்டேன். யாருன்னே தெரியாத அட்டோக்கார அண்ணா, சமையல் செய்ற அம்மா, காலேஜ் படிக்கற பையன், பாட்டி, தாத்தானு  சாதாரணமா சினிமா பார்க்கும் ஆடியன்ஸை கூப்பிட்டுவந்து என்னுடைய ஸ்கிரிப்டை அவங்ககிட்ட  சொன்னேன். அவங்க என்ன சொல்லுறாங்கனு எல்லாத்தையும் நோட்ஸ் எடுத்துகிட்டேன். கதையின் மெயின் ரோல் என்னை வைச்சுதான் எழுதினேன். அதுனால, நானே படத்துல ஹீரோவாகவும் நடிச்சுட்டேன். அவ்வளவுதாங்க. படத்தின் பாடல்களையும் நான்தான் எழுதினேன். நீங்கதான் கேட்டுட்டு நல்லா இருக்கா இல்லையானு சொல்லணும்."

 ​​​​​"சரி, சினிமா பத்தி எதுவுமே தெரியாம... படம் இயக்க வருவது பெரிய ரிஸ்க் ஆச்சே, எல்லாமே சரியா வருமா?..." குறுக்கிடுகிறார். 

"நீங்க சொல்லுறது சரிதான். நான் படம் இயக்கப்போறேன் சொன்னதும். ஒண்ணுமே தெரியாம என்ன படம் இயக்குவான்?னு என்னை கிறுக்கன், லூஸுனு சொன்னாங்க. ஆனா, என்னால முடியும்னு மத்தவங்களுக்கு எப்படி சொல்லுறதுனு தெரியல. 'படம் எடுக்கும்போதும், பெரிய ரிஸ்க் எடுக்கறான்னு சொன்னாங்க. இப்ப நிறைய சர்வதேச விருது வாங்குனதும் தான் 'பையன் ஏதோ பண்ணி இருக்கான்'னு ஆச்சர்யப்படுறாங்க. படத்துல ஒரு பாட்டு வரும், அந்த வரிகள் இப்படி தொடங்கும்...

'இவன் கிறுக்கன் தான்
நீயும் ஆகலாம் நானும் ஆகலாம்
யாரும் ஆகலாம்
ஒரு எடிசனா ஒரு எடிசனா
 உழைப்ப கொட்டு Tin Tin - ஆ
பணம் தானா கொட்டும் Ton Ton - ஆ...' - இதுதான் என் வாழ்க்கை வரிகளும் கூட." சிரிக்கிறார். 

"அது என்ன  படத்தின் தலைப்பு'கனவு வாரியம்' ?"

"'மின்சார வாரியம்' தான் இங்க 'கனவு வாரியமா' மாத்தி இருக்கோம். தமிழ்நாட்டுல மின்சாரமே ஒரு கனவுதானே. அதுதான் தலைப்பை உல்டா பண்ணி வைச்சு இருக்கோம். மின்வெட்டு பிரச்சனையை மையமாக வைச்சுதான் கதை. பள்ளிக் கூடத்திலயே பெயில் ஆன ஒருத்தன், அந்த கிராமத்துல மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்கணும்னு நினைக்கறான். அதுக்காக அவன் பல முயற்சிகள் பண்றான். கடைசியில இதுக்கு தீர்வா என்ன கண்டுபிடிக்கறான் என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதை காமெடி கலாட்டாவா கொஞ்சம் மோடிவேஷன் சேர்த்து சொல்லி இருக்கோம்.  நம்ம கிராமங்களில் மறந்துபோன, மறைந்துபோன 51 விளையாட்டுகளை மையமா வைச்சு 'கல்லா மண்ணா' என்ற பாடலுக்காக மட்டும் ஆறு மாசம் உழைச்சு இருக்கோம். 51 விளையாட்டை விஷுவலாகவும் காட்டி இருக்கோம். கண்டிப்பா இது கலர்புல் ட்ரீட்டா இருக்கும். படத்துல, இளவரசு, கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, புதுமுக ஹீரோயின் ஜெயானு நிறைய ஆர்டிஸ்ட்ஸ் இருக்காங்க."

"அப்ப விருது வாங்கணும் என்பதற்காகவே ஸ்கிரிப்ட் எழுதி, இயக்கி நடிச்சீங்களா?"

"ச்சேச்... சத்தியமா இல்லைங்க. நான் முதல்ல சினிமாகாரன் கிடையாது. மக்களில் இருந்து வந்த ஒருவன் படம் பண்ணினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்த படத்தை எடுத்தேன். இது பக்கா கமர்சியல் படம். லவ், காமெடி, சென்டிமென்ட்னு எல்லாமே கலந்த மசாலா மிக்ஸ்தான். படம் எடுத்து எடிட்டிங் எல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் தான் இதை ஏன் சினிமா பெஸ்டிவலுக்கு அனுப்ப கூடாதுனு தோணுச்சு. விருது கிடைச்சது எனக்கே சாக்கிங் சர்பரைஸ் தான். இதுவரை கலந்துகொண்ட அனைத்து விழாக்களிலும் விருதை வென்று இருக்கிறது படம்." 

"படம் பார்த்த வெளிநாட்டினர் என்ன சொன்னாங்க?"

"அய்யோ... ஒவ்வொரு நாட்டுலயும் அவ்வளவு பாராட்டுகள்... இத்தனைக்கும் கரன்ட் கட் பிரச்னை தான் கதை. அங்க எல்லாம் கரன்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனாலும், இந்த கதையை அவங்களால் கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. உள்ளுர் சினிமா தான் உலக சினிமானு புரிஞ்சுகிட்டேன். அமெரிக்காவுல படம் பார்த்த 12 வயசு பையன்... 'ஏதாவது சாதிக்கணும் போல இருக்கு'னு எனர்ஜியா சொன்னது. ரஷ்ய நாட்டை சேர்ந்த பொலிடிசியன் ஒருவர் படம் பார்த்துட்டு, மீண்டும் அவரது குழந்தைகளை கூட்டிவந்து இரண்டாவது முறையாக படம் பார்த்து 'மோட்டிவேஷன் மூவி'னு பாராட்டினதுனு பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கு. இரண்டு ரெமி விருதுகளை வென்ற முதல் படம் இதுதான். இதுக்கு முன் 'ரெமி' விருதை வென்றவர்கள் ‘ஜுராஸிக் பார்க்’ எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்,  ‘கிளேடியேட்டர்’ எடுத்த ரிட்லி ஸ்காட், 'காட்பாதர்' எடுத்த போர்ட் கப்பல்லோ, ‘ஸ்டார் வார்ஸ்’ எடுத்த ஜார்ஜ் லுகாஸ், ‘லைப் ஆப் பை’ எடுத்த ஆங் லீ. படம் இங்க ரிலீஸாக ரொம்ப நம்பிக்கையோட காத்திருக்கேன்."

கனவு நினைவாக வாழ்த்துகள். 

- நா.சிபிச்சக்கரவர்த்தி