Published:Updated:

தமிழ் சினிமாவுக்கு ராமராஜனின் 10 கொடை! #Ramarajanism

தமிழ் சினிமாவுக்கு ராமராஜனின் 10 கொடை! #Ramarajanism
தமிழ் சினிமாவுக்கு ராமராஜனின் 10 கொடை! #Ramarajanism

தமிழ் சினிமாவுக்கு ராமராஜனின் 10 கொடை! #Ramarajanism

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார், உலக நாயகனுக்கே டஃப் கொடுத்து அதிர்ச்சியளித்தவர் நம்ம வசூல் சக்ரவர்த்தி ராமராஜன். 'கரகாட்டக்காரன்' படம் போல கலர்ஃபுல்லாய் இருந்த அவரின் சினிமா வாழ்க்கை இப்போது ஆடி முடித்த மேடை போல் வெறிச்சோடிவிட்டது. அதனால் என்ன? அவர்கிட்ட இருந்து கத்துக்க நிறைய மேட்டர் இருக்கு ஜி. வாங்க

கருணை:

ஜல்லிக்கட்டில் மாடுகளை வதைக்கலை, அனுமதி கொடுங்கனு நாம சொல்றது எல்லாம் இப்போதானே. ஆனா, அந்தக் காலத்திலயே துளி வன்முறை இல்லாம பாட்டுப் பாடியே மாட்டை அடக்கி 'இதுவும் ஜல்லிக்கட்டுதான் டியூட்'னு உலகுக்கு உணர்த்தியிருக்கார் நம்ம ராமராஜன். மாட்டை நினைச்சுப் பாட்டு பாடுறது, ஆட்டுக்குட்டியைத் துண்டு மாதிரி தோள்ல போட்டுகிட்டு சுத்துறதுனு விலங்கு நேசராவே வாழ்ந்த மனுஷன். அவர்கிட்ட இருந்து இந்தக் கருணையைக் கண்டிப்பா கத்துக்கணும்.

லவ் ஆஃப் ஆர்ட்ஸ்:

கரகாட்டம், வில்லுப்பாட்டு, தாலாட்டுனு அழிஞ்சுட்டு வர்ற கிராமியக் கலைகள் பற்றி கவலைப்பட யாருக்கும் நேரமில்லை. ஆனா, அந்தக் கலைகளைப் பற்றியே பேசி, பாடி, ஆடி வாழ்ந்த மனுஷன் ஜி அவர். கலைக்காக தன்னோட வாழ்க்கையையே அர்ப்பணிச்ச அவர் முயற்சிக்கு தலையில் இருக்கிற தொப்பியைக் கழட்டி வணக்கம் வெச்சுக்கிறோம். இந்தக் கலைதாகத்தைக் கண்டிப்பா கத்துக்கணும்.

ஆத்தா பாசம்:

தமிழ் சினிமாவிலேயே ரெண்டு ஆத்தா மாடுலேஷன்தான் ஃபேமஸ். ஒண்ணு லைட்டா நடுங்குற வாய்ஸ்ல கேப்டன் சொல்ற 'ஆத்த்த்த்தா'. இன்னொன்னு ஹைக்கூ கவிதை மாதிரி பட்னு ராமராஜன் சொல்ற 'ஆத்தா'. மூச்சுக்கு மூவாயிரம் தடவை ஆத்தா ஆத்தானு வாய் நிறையக் கூப்பிட்டு தாய்ப்பாசத்துல தனுஷையே மிஞ்சுன தங்கக்கம்பி இந்தத் தம்பி. கத்துக்கிடணும் இதைக் கத்துக்கிடணும்.

சிம்பிளிசிட்டி:

அட, இவரை வெச்சு படம் எடுத்துக் கோடிகளைக் கோணிப்பையில் அள்ளிக்கிட்டு போனவங்க எக்கச்சக்கம். ஆனா, அதை எல்லாம் தலையில் ஏத்திக்காம கடைசிவரை காக்கி ஷார்ட்ஸ், தலையில் குற்றாலத் துண்டு, திறந்த மார்புனு செமி நியூடா வாழ்ந்து எளிமையைக் கடைப்பிடிச்ச ஸ்டார் இவர். மிஞ்சிப்போனா பஞ்சு மிட்டாய் கலர் சட்டை, அதுக்கு பக்காவா பொருந்துற மாதிரி ஆரஞ்சு கலர் பேன்ட். இந்த எளிமை நம்மில் எத்தனைப் பேர்கிட்ட இருக்கு?

ஊர்ப்பாசம்:

நம்மளை மாதிரிப் பொங்கல், தீபாவளிக்கு ஊருக்கு போற ஆள் இல்லீங்க அவர். 'நம்ம ஊரு நம்ம ஆளு', 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவக்காரன்', 'நம்ம ஊரு நாயகன்', 'எங்க ஊரு மாப்பிள்ளை', 'ஊரு விட்டு ஊரு வந்து', 'நம்ம ஊரு ராசா'னு படத்துக்குப் படம் ஊர்ப்பாசத்தைப் பிழிஞ்சு பொழிஞ்சு படம் நடிச்ச ஹீரோ அவர். கேட்கிறப்பவே சிலிர்க்குதுல. இந்தப் பாசத்தைக் கண்டிப்பா கத்துக்கணும்.

சொந்தமும் பந்தமும்:

கொடுத்த கடனைக் கேட்டாலே கண்ணுல கங்கு தெறிக்க முறைக்கிற சமூகம்யா இது. ஆனா, குத்துனது முறைமாமாவா இருந்தா வலிச்சாக்கூட வெளியே சொல்லக் கூடாதுனு சசிக்குமாருக்கு முன்னாலேயே சொந்தக்காரங்க அருமையைப் பற்றிச் சொன்னவர். சைட் அடிக்கிறப்போகூட அத்தைப்பொண்ணா பார்த்துதான் சைட் அடிப்பார். வயசான பாட்டிக்கு ஏதாவது ஒண்ணுனா எடிட்டிங் எல்லாம் இல்லாம ஒரே குத்துல ஒன்பது பேரை அடிப்பார். வாட் எ மேன்! இதையும்...!

மொழிப்பற்று:

ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்கூட 'ஹாய்'னு சொல்லி இன்ட்ரோ ஆகிற சினிமாவில் கடைசி வரை நாடி, நரம்பு, எலும்பு, குதிகால்னு எல்லா இடத்துலயும் மொழிப்பற்று உருவி ஓட நடிச்சவர். சிட்டி ஸ்லாங் பேசுனா இங்கிலீஷ் கலப்பு ஆகிடுமோனு முக்கால்வாசி படங்களில் கிராமத்து ஸ்லாங்லயே பேசி நடிச்சவர். இதுக்காகவே பறக்கும் குதிரை பக்கத்துல சிலிர்க்கும் சிலை ஒண்ணு வைக்கலாம். 

மேன் ஆஃப் மேக்கப்:

கருப்பா இருக்கீங்களா? கவலைப்படாதீங்க. உதடு சிவப்பா இல்லையா? இதைத் தடவுங்கனு இப்போ வர்ற கிரீம் விளம்பரங்களுக்கு எல்லாம் முன்னாலேயே, 'பசங்களும் மேக்கப் போடலாம். அது உங்க தன்னம்பிக்கையை வளர்க்கும். ஸோ, தப்பில்லை'னு காட்டிய மகராசன் அவர். மூச்சு விடுற ஓட்டையைத் தவிர மற்ற இடத்தில் எல்லாம் ரோஸ் பவுடர். கண்ணைக் கிறுகிறுக்க வைக்கிற லிப்ஸ்டிக்னு அந்தக் கால ட்ரெண்ட் செட்டர்கிட்ட இருந்து இந்தத் தன்னம்பிக்கையைக் கத்துக்கணும்.

இசைவெறி:

முக்கல், முனகல் இல்லாம வாழ இசை முக்கியம்னு நமக்குத் தெரியும். ஆனா, எந்த அளவுக்கு முக்கியம்? 'எங்க ஊரு பாட்டுக்காரன்', செண்பகமே செண்பகமே', 'பாட்டுக்கு நான் அடிமை', 'புதுப்பாட்டு', 'ஊரெல்லாம் உன் பாட்டுதான்', 'வில்லுப்பாட்டுக்காரன்' 'தெம்மாங்குப் பாட்டுக்காரன்'னு படத்துக்கு படம் பாட்டு கட்டி ஆடுற அளவுக்கு முக்கியம். ஸ்க்ரீன்ல யாராவது டயலாக் பேச மறந்துட்டாலோ, டைரக்டர் கட் சொல்ல மறந்துட்டாலோ உடனே பாட ஸ்டார்ட் பண்றது ராமராஜன் ஸ்டைல்.

ஓல்டு இஸ் கோல்டு:

ஆப்பிள் போனையே ஆறு மாசத்துக்கு ஒருதடவை மாத்துற கூட்டத்துக்கு மத்தியில் பல வருஷங்கள் ஆன சிவப்பு கலர் காரையும் சரி, துருப்பிடிச்சு துரும்பாப் போன சைக்கிளையும் சரி, மறக்காம, மாத்தாம வெச்சுருந்தவர். பழசு மேல இருக்கிற இவரோட பாசத்தைக் கீழே விழுந்து கும்புட்டு மரியாதை செய்யணும். அப்புறம் என்ன? இதையும் இவர்கிட்ட இருந்து நாம கத்துக்கணும்.

-நித்திஷ்

அடுத்த கட்டுரைக்கு