Published:Updated:

மலையாள பிரேமம் - தெலுங்கு பிரேமம்: ஆறு வித்தியாசங்கள்

மலையாள பிரேமம் - தெலுங்கு பிரேமம்: ஆறு வித்தியாசங்கள்
மலையாள பிரேமம் - தெலுங்கு பிரேமம்: ஆறு வித்தியாசங்கள்

டந்த ஆண்டு இதே நேரம் மலர் டீச்சரைக் கண்களிலும் ரெட் வெல்வெட் கேக்கை நாக்கிலும் சுமந்தவர்கள் இப்போது 'இது அது இல்ல' என மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் 'பிரேமம்' படத்தின் தெலுங்கு வெர்ஷன். ஜார்ஜாக நாகசைதன்யாவும் மலர் டீச்சராக ஸ்ருதியும் அவதரிக்க, 'எண்ட பகவானே' எனக் கண்களைப் பொத்தி தலைதெறிக்க ஓடுகிறார்கள் சேட்டன்கள். அப்படி என்னதான் இருக்கிறது தெலுங்கு வெர்ஷனில் என மூளையைக் குடைந்து குப்பை கொட்டியதில், ஒரிஜினல் வெர்ஷனுக்கும் தெலுங்கு வெர்ஷனுக்கும் இடையே இருக்கும் ஆறு வித்தியாசங்கள் தெரிய வந்தன. அவைதான் இவை. 

படமே ரிலீஸாகலை. அதுக்குள்ள எப்படிய்யா வித்தியாசம் கண்டுபிடிக்கிறீங்க? - இதுதானே உங்க மைண்ட்வாய்ஸ். நாங்க எல்லாம் ட்ரெய்லர் பார்த்தே கதை ஓட்டுவோம் ப்ரோ!

அழுக்குச் சேட்டன்கள்:

மேரி பின்னால் சுற்றும் குட்டிப்பையன், கல்லூரியில் சண்டியர்த்தனம் செய்யும் ரவுடி, பேக்கரியில் இருக்கும் பொறுப்பான குட்பாய் என மூன்று ரோல்களுக்கும் நிவின் டெய்லர் மேட். ஆனால் தெலுங்கு வெர்ஷனில் மேரி பின்னால் சுற்றும் ஹீரோவைப் பார்க்கும்போது இது நாகசைதன்யாவா, பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத்தா என டவுட்டு வருகிறது. ஜார்ஜ் லுக்கிற்கு அழகே அந்த அழுக்குதான். ஆனால் தெலுங்கில், பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தலை குளித்து சுத்தபத்தமாய் கோயிலுக்குச் செல்லும் குழந்தைப்பையன் லுக்கில் இருக்கிறார் நாகு. தாடி வளர்த்தா ரவுடி லுக் வந்துடும்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க டைரக்டர் சார்.

மலர் டீச்சர்:

ஸ்ருதி நடிக்க வேணாம்னு சொல்லலை. சாய் பல்லவியே நடிச்சிருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றோம். முகத்தில் சின்னச் சின்னதாய் பரு, பவுடர்கூட இல்லாத முகம் என ஹைஸ்கூலில் நமக்கு க்ரஷ் உண்டாக்கிய டீச்சர்கள் வேடத்தில் நச்சென பொருந்தினார் சாய் பல்லவி. ஸ்ருதியோ பாலீஷ் போட்ட சலவைக்கல் போல அநியாய பளீரில் இருக்கிறார். எங்க ஊர் ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல்லகூட இப்படி டீச்சர் இல்லையேய்யா!

பச்சைப் பசேல்:

கல்லுப்பாலம், பச்சைநிற தோட்டம், பனி நனைக்கும் புல்வெளி, கேக் ஷாப் என கேரள நேட்டிவிட்டி ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தெறிக்கும் ப்ரேமத்தில். அதுவே சேட்டன்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கவும் உதவியது. தெலுங்கு வெர்ஷனில் சிங்கமுத்து பாயசம் தேடுவது போல 'நேட்டிவிட்டி எங்கய்யா?' எனத் தேட வேண்டும். அந்த அளவிற்கு அநியாய பளிச். 'யெவடே' பாட்டு லொக்கேஷன்கள் எல்லாம் பாரீனில் எடுத்தது போல அளவுக்கதிகமாக அன்னியப்படுகின்றன. பட்ஜெட் இருக்குங்கிறதுக்காக இப்படியா பண்ணுறது?  

செலின்:

தட்டில் இருக்கும் கேக்கை மெல்ல கொத்தி எடுத்து உதட்டில் வைத்துச் சுழித்து, உள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் இழுக்கும் செலினைப் பார்த்து கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள். ஆனால் தெலுங்கு வெர்ஷனில்... இதை சொல்லித்தான் ஆக வேண்டும் ஆண்டவரே! க்ளோசப்பில் அவரைப் பார்க்க கொஞ்சம் பயந்துதான் வருது. ஒரிஜினல் வெர்ஷனில் நேச்சுரல் லைட்டிங்கில் ஜொலிக்கும் செலின் செல்லத்தை இரண்டு இன்ச்சுக்கு மேக்கப், பளீர் லிப்ஸ்டிக் என ராமராஜன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே டைரக்டர்! 

கலிப்பைக் காணோம்... கலிப்பைக் காணோம்:

கருப்பு சட்டை, வெள்ளை வேஷ்டியில் கெத்தாய் நிவின் அண்ட் கோ நடந்து வர, பின்னணியில் ஆக்ரோஷக் குரலில் கலிப்பு தீம் ஒலிக்க, பார்க்கும் இளவட்டங்களுக்கு சிலிர்க்கும். ஆனால் தெலுங்கு ட்ராக்லிஸ்ட்டில் கலிப்பு பாட்டையே காணோம். நண்பர்களோடு நாகசைதன்யா வெள்ளை வேஷ்டி சட்டையில் நடந்து வருவதைப் பார்க்கும்போது தீபாவளிக்கு மத்தாப்பு கொளுத்தப் போகும் பையன்கள் போலவே இருக்கிறது. ஐயகோ!

சம்பு - கோயா மிஸ்ஸிங்:

ஜார்ஜ் அளவுக்கு மலையாள பிரேமத்தில் கவனம் ஈர்த்தது அவரின் நண்பர்களான சம்புவும் கோயாவும். அப்பாவித்தனமாக மொக்கை வாங்குவதாகட்டும், ரகளையாய் மல்லுக்கட்டுவதாகட்டும் அப்படியே நம் ஏரியா பசங்கதான். நிவின், சாய் பல்லவி போலவே இந்தக் கேரக்டர்களின் முகங்களும் மாறுகின்றன. அந்த நடிகர்கள் சொதப்பினால் பெரிய ஏமாற்றம்தான்.

-நித்திஷ்

அடுத்த கட்டுரைக்கு