Published:Updated:

பயணிகளின் கனிவான கவனத்துக்கு...! தொடரி விமர்சனம்

பயணிகளின் கனிவான கவனத்துக்கு...! தொடரி விமர்சனம்
பயணிகளின் கனிவான கவனத்துக்கு...! தொடரி விமர்சனம்

முதல் ட்ரெய்ன் மூவி என்று சப் டைட்டிலோடு பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்க வெளிவந்துள்ள படம் தொடரி.

டெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் பயணிக்கிற ரயிலில், உணவகத்தில் பணிபுரியும் தனுஷ், அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் ‘டச்-அப் கேர்ளா’ன கீர்த்தி சுரேஷிடம் காதல் வயப்படுகிறார். அதே ரயிலில் மந்திரி ராதாரவி, அவரது பி.ஏ ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் பயணிக்கிறார். 

படம் எப்படா ஆரம்பிக்கும் என்று நமக்குத் தோன்றுகிற நேரத்தில், ராதாரவியில் பாதுகாப்பு அதிகாரியான ஹரீஷ் உத்தமனுக்கும் தனுஷுக்கும் சின்ன மோதல் ஏற்படுகிறது. கனன்று கொண்டிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்த தகுந்த நேரம் பார்த்துக் காத்திருக்கிறார் ஹரீஷ் உத்தமன்.

வழியில் ஒரு மாடு ரயிலில் மோதி இறந்துவிட ‘லோகோ பைலட்’ ஆர்.வி. உதயகுமாருக்கும், அசிஸ்டெண்ட் லோகோ பைலட் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் இல்லாமல் ரயிலை எடுத்துவிடுகிறார் ஆர்.வி.உ. அதன்பிறகு நடக்கிற சிலபல சம்பவங்களால் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிற ‘தொடரி’யின் நிலை என்னவானது, என்பதை இடைவேளைக்குப் பிறகு சொல்லி ரயில் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததா.. பயணிக்கும் எழுநூற்றுச் சொச்ச பயணிகளும் நாமும் என்ன ஆனோம் என்பதை க்ளைமாக்ஸில் காட்டியிருக்கிறார்கள்.

ரயில் உணவகத்தின் பணியாளராக தனுஷுக்கு வித்தியாசமான கதாபாத்திரம்தான். தனுஷ் சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று சொல்லும் நிலையையெல்லாம் தாண்டிவிட்டார். ஆனால், ஒரே ஒரு பயணிக்குப் பிறகு ஒன்லி நடிகை கம்பார்ட்மெண்ட்டுக்கு மட்டுமே விற்பனை செய்கிறார். அங்கங்கே முக பாவனைகளில் கைதட்டல் பெறுகிற கீர்த்தி சுரேஷ், ‘கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த லைலாவாக உருமாறும் கீர்த்தி சுரேஷைப் பார்’ மோடுக்குச் சென்று கொண்டிருக்கிறார். 

ஒரு படத்தை ஓடும் ரயிலிலேயே எடுக்கலாம் என்ற சிந்தனைக்கும், தமிழில் பெயர் வைத்ததற்கும் சபாஷ். இரண்டரை மணிநேரமும் படத்தில்  ரயில் ஓடுகிறது.. படம் ஓடுமா என்றால்.. கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஓடும் ரயிலில் என்னென்ன நடக்குமோ எல்லாவற்றையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ரயில் கொள்ளை இந்தப் படத்தில் ஏன் என்று எத்தனை யோசித்தாலும் தெரிவதில்லை. அதே போல, ஃபோனில் வீட்டு டார்ச்சர் குறித்து இயக்குநருக்கு கடும் கோபம் இருக்கிறது போல. இதில் மத்திய பாதுகாப்பு அதிகாரி ஹரீஷ் உத்தமனுக்கு அம்மாவிடமிருந்து ஃபோன் வரும்போதெல்லாம் அவர் கடுப்பாகிறார். போஸ் வெங்கட்டுக்கு அதுபோல  மனைவி டார்ச்சர். ஹாரி பார்ட்டர் ஆல்சோ டீல்ஸ் த சேம் ப்ராப்ளமாய்.. மைனாவில் போலீசாக நடித்தவருக்கு வந்த அதே ப்ராப்ளம்! 

டிவி சேனல்கள் மீது இருக்கும் கடுப்பையெல்லாம் ஒரே படத்தில் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். டிவி விவாதம், அவர்களின் லைவ் கவரேஜ் என்று பாதி படத்தை டிவி சம்பந்தப்பட்ட காட்சிகளே ஆக்ரமித்திருக்கின்றன. வசனங்களில் அவர்களைக் கிழித்து, கேள்வி கேட்டிருப்பது சபாஷ். 

தம்பி ராமையா, கருணாகரன், தர்புகா சிவா, இமான் அண்ணாச்சி என்று நல்ல நகைச்சுவைப் பட்டாளம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.  அதில் தம்பி ராமையாவின் காமெடிக்காட்சிகள் சிரிப்பு வெடி. இடைவேளைக்குப் பின், அவரை தீவிரவாதி என்று நினைத்துக் கொண்டு விசாரிக்கும் ப்ரேமிடம் மைண்ட் வாய்ஸிலும், உடல்மொழியிலும் காமெடி அதகளம் பண்ணுகிறார். மந்திரியாக வரும் ராதாரவியும் அசால்டான நடிப்பை வெளிப்படுத்தியிருகிறார்.

அடுத்த அரசியல் மாநாடு எதற்காவது தேவையானால், ஒட்டுமொத்த மேடையையும் அலங்கரிக்கத் தேவையான அத்தனை பூக்களையும் தியேட்டரிலிருந்து வெளிவருபவர்களின் காதுகளில் இருந்து எடுத்துவிடலாம். 120 கிமீ வேகத்தில் ஓடுகிற ரயிலின் மேல், தனுஷ் அடுப்பு மூட்டி சமைக்காதது ஒன்றுதான் பாக்கி. பதைபதைப்பாக வேண்டிய காட்சிகளிலெல்லாம் கூட ‘நம்ப முடியலயே நாராயணா’ என்று கத்தவைத்துவிடுகிறார்கள். அதுவும்போக, ’அதாகப்பட்டது சார்.. கடல்ல கப்பல் போகுது வானத்துல ஏரோப்ளேன் போகுது’ பாணியில் ட்ரெய்ன் ஓடிக்கொண்டிருக்க மேலே ஹெலிகாப்டர், சைடில் தீயணைப்பு வாகனம், தூரத்தில் மத்திய பாதுகாப்பு படை ஜீப்கள், கூடவே டிவி சேனலின் லைவ் ரிலே வாகனம் என்று பூவை மூட்டை மூட்டையாக இறக்குகிறார்கள்.   

அதற்குப் பிறகு சீரியஸா, காமெடியா, சீரியஸான காமெடியா, காமெடியான சீரியஸா என்று குழம்ப வைக்கிற நேரங்களில் பாடல்கள் எடுபடவில்லை. இருப்பினும் இமானின் பின்னணி இசையும், வெற்றிவேலின் ஒளிப்பதிவுமே தண்டவாளம் போல உறுதியாக படத்தை ஓடவைக்கிறது.

‘இந்தப் படம் க்ரீன் மேட்டுக்கு சமர்ப்பணம்’ என்று எழுதாத குறையாக அத்தனை சிஜி.  எல்லா ஜானரையும் கலந்து கட்டி, ட்ராக் மாறி மாறி பயணித்து, பயணிகளை ஏமாற்றுகிறது இந்தத் தொடரி.