Published:Updated:

'ஆண்டவன் கட்டளையை ஏற்கலாமா?' #ஆண்டவன் கட்டளை விமர்சனம்

'ஆண்டவன் கட்டளையை ஏற்கலாமா?' #ஆண்டவன் கட்டளை விமர்சனம்
'ஆண்டவன் கட்டளையை ஏற்கலாமா?' #ஆண்டவன் கட்டளை விமர்சனம்

'ஆண்டவன் கட்டளையை ஏற்கலாமா?' #ஆண்டவன் கட்டளை விமர்சனம்

இந்த வெள்ளிக்கிழமை என்ன படம் ரிலீஸ் என்று கேட்கும் நிலை தாண்டி, இந்த வெள்ளிக்கிழமை என்ன விஜய் சேதுபதி படம் ரிலீஸ் என்று கேட்க வேண்டிய அளவுக்கு படம் ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கிற விஜய் சேதுபதி படங்களின் வரிசையில் இந்த வாரம் ஆண்டவன் கட்டளை. 

மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி ஊரில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வெளிநாடு சென்று வந்த நமோ நாராயணனின் ஆலோசனைப்படி விஜய் சேதுபதியும், யோகியும் சென்னையிலுள்ள ஏஜண்ட் ஒருவரை நாடுகிறார்கள். ‘டூரிஸ்ட் விசால போய் அங்க மாட்டிகிட்டாலும், மாசா மாசம் பணம் குடுத்து வெச்சுப்பாங்க. கல்யாணமாகிருந்தா ஈஸியா டூரிஸ்ட் விசா கிடைக்கும்’ என்று அவர் தரும் கோக்குமாக்  ஐடியாவை நம்பி கார்மேகக் குழலி என்றொரு பெயரை விசா அப்ளிகேஷனில் கொடுக்கிறார் விஜய் சேதுபதி.  

ஆனால், யோகிக்கு விசா கிடைத்துவிட, விஜய் சேதுபதி விசா கிடைக்காமல் சென்னையிலேயே தங்கிவிடுகிறார். ஆறு மாசத்துக்கு ஏதோ ஒரு வேலை பார்ப்போம் என்று நாசரின் நடிப்புக்கூடத்தில் கணக்காளராகப் பணிக்குச் சேர்கிறார். உண்மையாக உழைக்கும் விஜய் சேதுபதியை நாசருக்குப் பிடித்துப் போகிறது. இவர்களது நாடகக்குழுவுக்கு லண்டன் போகும் வாய்ப்பு கிடைக்க, ‘மேனேஜரா நீயும் வர்ற!’ எனும் நாசரை ஏமாற்ற மனம் வரவில்லை விஜய் சேதுபதிக்கு. எப்படியாவது பாஸ்போர்ட்டில் இருக்கும் கார்மேகக் குழலி பெயரை எடுத்துவிட முயற்சிக்கிறார். 

’அதுக்கு டைவர்ஸ் வாங்கணும். அந்தப் பேர்லயே இருக்கற யாரோடவாவது ஐடி வேணும்’ என்கிறார்கள். டிவியில் செய்தியாளராக பணிபுரியும் ரித்திகா சிங்தான் அந்தக் கார்மேகக்குழலி. அவர் ஒப்புக்கொண்டாரா, பாஸ்போர்ட் என்ன ஆகிறது, லண்டன் போன யோகிக்கு என்ன ஆகிறது, நாசர் குழுவினருடன் நாயகனும் லண்டன் செல்கிறாரா என்பதையெல்லாம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, தெளிவான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

‘மேட்ச் ஜெயிக்குதோ தோக்குதோ.. நான் எறங்கி நாலு சிக்ஸாவது விளாசுவேன்’ என்பதே விஜய் சேதுபதி பாணி. ‘காந்தி’யாக   இதில் செஞ்சுரியே அடித்திருக்கிறார். சென்னையில் வீடு தேடும் மதுரைக்காரனாக, மாமாவிடம் கெஞ்சும்போது, நாசரிடம் பணிவைக் காட்டும்போது, கோர்ட் கவுன்சிலிங் காட்சியின்போது, கடைசி காட்சியில் ரித்திகாவிடம் பேசும்போது என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உடல்மொழி.. தனித்தனி மாடுலேஷன். வாய் பேச முடியாதவராக நடிக்க நேரும்போது, கோர்ட்டில் வழக்கறிஞரிடம்   சைகை பாஷையில் குமுறுகையில் க்ளாப்ஸ் அள்ளுகிறார். 

முதல் பாதியில் யோகியின் பார்ட்னர்ஷிப் கலக்குகிறது. ‘அவ்ளோ நல்லவனுகளை ஏண்டா நாட்ட விட்டு தொரத்தினோம்?’, ‘நீ லண்டன் சிட்டிசன் மேல கை வைக்கறடா’ என்று அவர் வசனங்களுக்கெல்லாம் சிரிசிரி ரியாக்‌ஷன்ஸ் தியேட்டரில். இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் என்றாலும் நெகிழ வைக்கிறார்.  படம் முழுவதும் வந்து போகும் காட்சிகள் நாயகி ரித்திகாவுக்கு . கிடைக்குமிடத்திலெல்லாம் ஸ்கோர் செய்து... நிறைவாகச் செய்திருக்கிறார் ரித்திகா. வெட்கப்படுகிறாரா யோசிக்கிறாரா என்று நினைக்க வைக்கும் அந்த கடைசி பாஸ்போர்ட் ஆஃபீஸ் காட்சியில்... ஆவ்ஸம்..! 

நாசர், பூஜா தேவாரியா ஆகியோரின் நடிப்பு நிறைவு. அந்த இலங்கைத் தமிழராக நடித்தவரும், விசாரணை அதிகாரியாக வருபவரும் குறிப்பிட்டுப் பாராட்டும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். 

ரெட்ரோ பாணி டைட்டிலுடன் ஆரம்பிக்கிற படத்தின் திரைக்கதை நச்! யோகி மட்டும் லண்டன் போய்ட்டாரே என்பதற்கும் இடைவேளைக்குப் பின் காட்சிகள் வைத்திருப்பதற்குப் பாராட்டு. முதல் பாதியில் யோகி லண்டன் போனபிறகு டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட வண்டியாகி ஸ்லோ ஆகிவிடுகிறது படம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்கிற படம், யோகியின் அலைபேசி அழைப்புக்குப் பிறகு கொஞ்சம் வேகமெடுக்கிறது. 

’கே’-யின்  இசை கச்சிதம். அந்த விசாரணைக் காட்சிகளின் பதற்றம் நம்மைத் தொற்றிக்கொள்வதற்கு பின்னணி இசையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

’சம்பாதிக்கறது லண்டன்லயும்  சௌதிலயும். ஆனா முஸ்லிமுக்கும், கிறிஸ்டீனுக்கும் வாடகைக்கு விடமாட்டாங்களா?’, ‘வேலைக்கு விசுவாசமா இருக்கறதா.. வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா?’, ‘சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட்’ - என்றெல்லாம் வசனங்கள் வருகையில், ‘அட யார்டா...?’ என்று கேட்கத் தோன்றுகிறது. இயக்குநர் என்று மூன்று பெயர்கள் வருகிறது. மூவருக்கும் வாழ்த்துகள் சொல்லலாம் என்றால்.. அது மணிகண்டன் பாஸ்போர்ட்டில் இருக்கிற மாதிரி எழுதியிருக்கிறார்கள் என்கிறது தகவல். வாழ்த்துகள் மணிகண்டன்

தமிழ்நாடு கோபுர முத்திரையை ஜஸ்ட் லைக் தட் டேபிள் மேல் வைத்தபடி ஃபிராடு வேலை செய்யும் ஏஜண்டுக்கு, கார்மேகக்குழலி என்ற பெயரில் ஒரு ஐ.டி. தயாரிப்பதா கஷ்டம்? அதற்கு எதற்கு ஒரு கேரக்டரை தேடிப் போக வேண்டும்? புரோக்கர்கள் தவிர்ப்போம் என்று படத்தின் அடிநாதத்தை டைட்டில் ஆரம்பிக்கும்போதே ஏன் போடவேண்டும்? ஒரு ரீஜனல் பாஸ்போர்ட் ஆஃபீசரை கதவு தட்டிவிட்டு உள்ளே போய்ப் பார்ப்பது அத்தனை சுலபமா? அதெப்படி அத்தனை பெரிய அதிகாரி விஜய் சேதுபதி சொன்னதும் நம்பி பச்சை இங்கில் படபடவென எழுதிக் கொடுத்துவிடுகிறார் என்று கேள்விகள் பல எழாமல் இல்லை. 

இருந்தாலும் படம் முழுவதும் இழையோடி, க்ளைமாக்ஸ் வரை நிற்கிற அந்த ஃபீல்குட் உணர்வுக்காக ஆண்டவன் கட்டளையை இரண்டரை மணி நேரம் ஏற்றுக் கொள்ளலாம்!

அடுத்த கட்டுரைக்கு