Published:Updated:

"மொபைல் நாகேஷ்" யார் தெரியுமா? #NageshBdaySpecial

"மொபைல் நாகேஷ்" யார் தெரியுமா?  #NageshBdaySpecial
"மொபைல் நாகேஷ்" யார் தெரியுமா? #NageshBdaySpecial

இன்று நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்தநாள். சில வேடங்களை யாராலும் செய்ய முடியாது அப்படியான வேடங்களில் வெளுத்து வாங்கியவர் நாகேஷ். கதை சொல்லும் முறையிலேயே இம்ப்ரஸ் செய்ய முயலும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் புது இயக்குநராக வருவார். தில்லான மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி, என அவரின் கேரக்டர்கள் ரிப்ளிக்கா செய்யவே முடியாதவை.  பல்வேறு காலகட்டங்களில் விகடனில் நாகேஷ் எழுதிய, அவர் பகிர்ந்த விஷயங்கள் அவரின் பிறந்தநாள் எக்ஸ்க்ளூசிவாய் இங்கு. 

"டேய் நீ பெரியவனாகி அப்பா மாதிரி ஆபிஸுக்கு போனா என்னாடா பண்ணுவ...?"

"முதல்ல லீவு போடுவேன்.." 

"அன்புள்ள சந்துருக்கு, வணக்கம். 
நீ வேகமாக படிக்கமுடியாது என்ற காரணத்தால் இந்த 
கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன்....!

ஆனந்த விகடன் நிருபரிடம் சொல்லி தன் பெயரில் நாகேஷ் எழுதச்சொன்ன ஜோக்குகள் இவை. 

"நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நடிப்பு பிடிக்கவில்லை என்றால் "உள்ளே போ, நாடகம் போர்.. போர்...உள்ளே போ" என்று கத்தினால் நடிகன் மிரண்டு போய் உள்ளே வந்துவிடவேண்டியதுதான். ஆனால் சினிமாவில் படம் போரடித்தால் பார்ப்பவன் வெளியே எழுந்து போக வேண்டியதுதான்"  நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்னங்க வித்தியாசம் என்ற சீரியஸ் கேள்விக்கு நாகேஷின் பதில் மேலுள்ளது. ஸ்பான்டேனியஸ் ரிப்ளை மற்றும் ரியாக்‌ஷன் மாற்றுவதில் நாகேஷை இன்றுவரை அடித்துக்கொள்ளவே முடியாது.   

"நான் நகைச்சுவை நடிகனாக வேண்டும் என ஒரு நாள் கூட நினைக்கவில்லை. ஆபிஸ் நாடகங்களிலும் , அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்த போது சிரித்து கை தட்டி 'நாகேஷ் வந்தால் சிரிக்கவைப்பான்' என அவர்களே முடிவு செய்து கைதட்டி நகைச்சுவை நடிகனாக்கிவிட்டார்கள். நான் அதற்கு முயற்சி செய்யவில்லை என்பதால்   அதன் பலாபலன்கள் அனைத்துக்கும் ரசிகர்களே பொறுப்பு" என கூறுவார். 

"1951-ம் வருடம் மார்ச் மாதம் 17-ம் தேதியை மறக்கவே மாட்டேன். அன்றுதான் எனக்கு வைசூரி( அம்மை) ஏற்பட்டது. அதனால்தான்  முகத்தில் நிரந்தர தழும்புகள் ஏற்பட்டது. கல்வியை பாதியில் கைவிடும் அளவிற்கு நோயின் தாக்கம் இருந்தது. தழும்புகளை பார்த்து குலுங்கி குலுங்கி அழுதேன் . அம்மாவின் ஆறுதலால் மட்டுமே மனம் தேறினேன். " தன் நிரந்தர வடுகள் பற்றி இப்படி குறிப்பிடுவார். 

"எனக்கு ரயில்வேயில் கொடுத்த சம்பளமே வேஸ்ட். வேலை செய்யாம ஓபி அடிச்சுகிட்டு இருப்பேன்.  நாடக வசனம் மனப்பாடம் பன்றதுதான் முக்கியமான வேலையா இருக்கும். நாலு மணி அடிச்சா எதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு வீட்டுக்கு போயிடுவேன். ஒரு நாள் ஒரு நாடக ஒத்திக்கையை வேடிக்கை பார்க்க போனேன், அதில் பேசிய ஒரு கேரக்டரின் டயலாக் இப்படி சொல்ல வேண்டும் என பேசிக்காட்டினேன். அந்த நாடக இயக்குநர் என்னை உதாசீனப்படுத்தி வெளியே அனுப்பிட்டார். அப்பத்தான் நாடகத்தில் நடிக்கனும்ன்னு வெறி ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து வீரபாகுன்னு ஒரு தயாரிப்பாளர் "தாமரைக் குளம்" என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டேன். ஆனால் அந்த படமும் சரியா ஓடலை எதிர்பார்த்த பணமும் வரலை. அதுக்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டேன். தங்குறதுக்கு இடமில்லாமல் அங்கும் இங்கும் அல்லாடிகிட்டு இருந்ததால் "மொபைல் நாகேஷ்"ங்கிற பட்டபெயர் வச்சு கூப்பிட அரம்பிச்சுட்டாங்க. நடிகர் பாலாஜிதான் தன் வீட்டின் அவுதவுஸில் எனக்கு இடம் கொடுத்து வாய்ப்பும் பிடித்துதர தொடங்கினார். பாலாஜியின் உதவியை நான் சாகும் வரை மறக்கமுடியாது" என தன் ஆரம்பக்கால  நினைவுகளை விகடனுடன் பகிர்ந்துள்ளார். 

ஜெயகாந்தன் இயக்கிய 'யாருக்காக அழுதான்' படத்தில் 'திருட்டு முழி ஜோசப்' என்கிற பாத்திரத்தில் நாகேஷ் நடித்தார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஜெயகாந்தன் காட்சிய விளக்குகிறார். சுற்றி கதாபாத்திரங்கள் பரிவுடன் பார்த்திருக்க நாகேஷ் அழ வேண்டும் "ஸ்டார்ட் ஆக்‌ஷன்" சொல்கிறார். நாகேஷ் அழ ஆரம்பிக்கிறார். மெதுவாக ஆரம்பித்த அழுகை அப்படியே உயர்ந்து கேவிக்கேவி அழுதபடி இருக்க இயக்குநர் ஜெயகாந்தன் போதும் போதும் என சொல்லியும் கிழே விழுந்து அழுதபடியே இருந்திருக்கிறார். உடனே லைட்கள் அணைக்கப்பட்டு வெளியே தூக்கி செல்லப்பட்டிருக்கிறார். அங்கும் அழுகை நின்றபாடில்லை. தன் நீண்டநாள் மனபாரத்தை ஜோசப்பின் வடிவில் இறக்கிவைத்துவிட்டார் நாகேஷ் அன்று. 

புகழின் உச்சத்தில் இருந்த போது ஆனந்த விகடனில் நாகேஷ் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். இரண்டு நண்பர்கள் நாடகக்கலைஞர்கள் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு வாய்ப்பு வருகிறது. ஒருவன் ஏற்றுக்கொள்ள தயங்கும் போது மற்றொருவன் துணிச்சலாக ஏற்றுக்கொள்ள வைக்கிறான். நாட்கள் ஓடுகிறது சினிமாவுக்கு போன நண்பன் பெரியாளாகி விடுகிறான். நீண்ட நாளைக்கு பிறகு நண்பனை பார்க்க வந்த ஏழை நண்பன் உரிமையுடன் அவன் சட்டையை எடுத்துப்போடுகிறான். அதை வீட்டு வேலைக்காரன் தடுக்கிறான். நண்பனிடம் வேலைக்காரனின் செயலை கண்டிக்க சொல்லி கேட்கிறான் ஏழை நண்பன். ஆனால் வேலைக்காரனின் செயலை சரி என்கிறான் நடிக நண்பன். கோபித்துக்கொண்டு புறப்படுகிறான் ஏழை. பின்னால் ஓடிவரும் நண்பன் தனக்கிருக்கும் தோல் நோய் பற்றி விளக்குகிறான்.  நண்பனைக்கட்டிக்கொண்டு ஏழை நண்பன் அழுவதோடு கதை முடிகிறது.

நாகேஷ் புகழின் உச்சத்தில் இருந்த போது எழுதப்பட்ட இந்த கதை அன்று சிறப்பாக பேசப்பட்டது. நாம் நடிக நண்பனாக நாகேஷைத்தான் நினைத்துக்கொள்வோம். உண்மையில் அந்த ஏழை நண்பன்தான் அவர். நடிப்பு வாழ்க்கையில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்து நாடகத்தில் நடிக்கிறார். அதுவும் வெறும் ஒன்னரை நிமிடங்கள் மட்டுமே. அதற்கே அன்று சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்ஜிஆரிடம் வெள்ளிக்கோப்பை பரிசு வாங்கியவர் நாகேஷ். 

அதன் பின்னால் நடிப்பு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த வெள்ளிக்கோப்பையை தன் அங்கீகாரமாய் நினைத்துகொண்டிருந்தார். ஒருநாள் அதை காணவில்லை. உடன் தங்கியிருந்த நண்பன் பசி தாங்க முடியாமல் அதை விற்றுவிட்டார். இரவு முழுவதும் தனியாக அழுதாராம். அதன் பின் சாகும்வரை எந்தவிருதையும் அவர் தன் வீட்டில் பார்வைக்கு வைக்கவில்லை. 

-வரவனை செந்தில்