Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாடலாசிரியர் அண்ணாமலை - துள்ளல் இசைப் பாடலின் துடிப்பு நின்றது!

 

இன்னுமொரு பாடலாசிரியரை இழந்து நிற்கிறது தமிழ் சினிமா. காமாலை நோயில் நா.முத்துக்குமார் மறைந்த நாற்பது நாள் இடைவெளிக்குள், மாரடைப்பில் மறைந்து விட்டார் அண்ணாமலை (50). 

‘பாடலாசிரியர் அண்ணாமலை மரணம்’ என வாட்ஸ் அப்பில் வெளியான தகவலைப் படித்து முடித்ததுமே, ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டு எழுதுனவரா என்றாள் மனைவி. கூடவே ‘சில்லாக்ஸ், சில்லாக்ஸ்...’ பாடலையும் முணுமுணுக்கத் தவறவில்லை.

என் பேரு முல்லா, பண்ணாரஸ் பட்டு கட்டி என துள்ளல் இசைப் பாடல்களில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து மெட்டு கட்டிய அண்ணாமலை, அடிப்படையில் நல்ல கவிஞர்.

‘‘இனி என் பிணத்தை
ஈக்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து 
அம்மணமாகும்’’ 


இது ஒரு பதம். அவ்வளவே. 

விழுப்புரம் மாவட்டத்தில், கீழப்பட்டு கிராமத்தில் பிறந்து, கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை நேசித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற அண்ணாமலை, ‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றவர். 

பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது ‘சுரேசன்’ என்ற புனைப்பெயரில் எழுதிய கதைகளும், கவிதைகளும், தமிழமுது இதழில் ‘வேங்கையின் சபதம்’ என்ற பெயரில் ஈழ மன்னன் எல்லாளச் சோழன் பற்றிய வரலாற்று குறு நாவலும் அவரது இலக்கிய அறிவைச் சொல்லும்.

வெள்ளித் திரைக்கு முன் சின்னத் திரையில் முத்திரை பதித்தவர். சித்திரப் பாவை, நீலா மாலா, கோகுலம், அஸ்திவாரம், செல்லப்பிள்ளை என 15 தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல் எழுதியவர், பக்தி ஏரியாவையும் விட்டு வைக்கவில்லை. 

நாஞ்சில் கென்னடி இயக்கத்தில் 1992ல் வெளிவந்த ‘புது வயல்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியர் அவதாரம் எடுத்தார். சேனா, ஸ்டூன்ட் நம்பர் ஒன், மச்சி, ஜங்சன் என பல படங்களில் பாடல் எழுதி இருந்தாலும், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற, ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் ‘யார்ரா இது’ என, அண்ணாமலையைத் திரும்பி பார்க்க வைத்தது. 
அதன்பின் ‘இதுதான் நம்ம ரூட்’ என துள்ளல் இசைப் பாடல்கள் பக்கம் திரும்பினார். 

பண்ணாரஸ் பட்டு கட்டி, சில்லாக்ஸ், என் பேரு முல்லா, மஞ்சனத்தி நாட்டுக் கட்ட, போட்டது பத்தல... என துள்ளிசை பாடல்களாக எழுதியவர்,  ‘ரத்தத்தின் ரத்தமே’ பாடலில் ‘செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா’ என உருக வைத்தார். ஹரிதாஸ் படத்தில் வரும் ‘அன்னையின் கருவில் கருவாக பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே’ என்ற வரிகள் பெயர் வாங்கித் தந்தவை. 

தேவா, இமான், மணி சர்மா, விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், சுந்தர் சி பாபு என பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, 50 படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதில் 30 செம ஹிட். 

பாடலாசிரியர் ஆவதற்கு முன் விகடன் குழுமத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அண்ணாமலை, ‘கவிஞர் காப்பிராயன்’ என்ற பெயரில் ஜூனியர் விகடனில் எழுதிய கவிதைகள் பிரபலம். அரும்பு, நவீன விருட்சம், தமிழோசை போன்ற இதழ்களில் 100க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். விரைவில் கவிதைத் தொகுப்பு வெளியிட வேண்டும் என்ற அவரது ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணமான 17 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அந்த குழந்தைதான் என் வாழ்வு என சொல்லி வந்த அண்ணாமலை இன்று நம்முடன் இல்லை.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?