Published:Updated:

அம்மா - பொண்ணு ஹீரோயின்ஸ்... கலக்கல் ஹிஸ்டரி!

Vikatan Correspondent
அம்மா - பொண்ணு ஹீரோயின்ஸ்... கலக்கல் ஹிஸ்டரி!
அம்மா - பொண்ணு ஹீரோயின்ஸ்... கலக்கல் ஹிஸ்டரி!

சிவாஜி - பிரபு - விக்ரம்பிரபு, டி.ராஜேந்தர் - சிம்பு, பாக்கியராஜ் - சாந்தனு, சிவகுமார் - சூர்யா, கார்த்தி, ஏன், விஜயகாந்த் மகன் பிரபாகரன் என்று தலைமுறை தலைமுறையாக நடிகர்களின் மகன் பின்னாளில் நடிகராவது  நடந்துவருகிறது. இந்த ஃபார்முலா நடிகைகளுக்கு நடப்பது அரிதினும் அரிது. அவ்வாறு ஒரு காலத்தில் நடிப்பில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளின் மகள் யாரெல்லாம் பின்னாளில் நடிகையாக மாறியிருக்கிறார்கள் என்று சிந்தித்ததில் சிக்கியவை....

மேனகா - கீர்த்திசுரேஷ்

மலையாலத்திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகை மேனகா இதுவரை 116 படங்களில் நடித்திருக்கிறார்.  இவரின் நடிப்பை ரசித்திருப்பவர்கள் மலையாளக்கரையினர். மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் ஃபேவரைட் நடிகை. தவிர, தமிழிலும் ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண், விஜயகாந்த் ஜோடியாக ஓம் சக்தி, தூக்குமேடை, நிஜங்கள் என பல படங்களில் நடித்திருக்கிறார்.  இதுவரை 10 படங்களைத் தயாரித்தும் விட்டார். இவரின் செல்லப்பொண்ணு லட்டு கண்ணு தான் கீர்த்திசுரேஷ். கீர்த்திசுரேஷூக்கு எட்டு வயதிருக்குபோதே, திரைத்துறைக்கு வர வீட்டில் க்ரீன்சிக்னல் கிடைத்தது. இயக்குநர் ப்ரியதர்ஷனும், கீர்த்தியின் தந்தை சுரேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், தான் மலையாளத்தில் இயக்கிய, கீதாஞ்சலி (தமிழில் சாருலதா) படத்தின் லீட் ரோலில் நடிக்கும் படி உரிமையுடன் அழைத்தார் ப்ரியன். அங்கிருந்து ப்ரியதர்ஷனின் சிஷ்யர் ஏ.எல்.விஜய் தமிழில் விக்ரம்பிரபுவுடன் இது என்ன மாயம் படத்தில் நடிக்க அழைத்துவந்தார். அறிமுகப்படம் அமோகமாக இல்லை என்றாலும், ரஜினிமுருகன் மூலம் ஆராவாரமாக பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்தார். அந்த ஹிட் ராசியால் இப்போது விஜய் ஜோடியாக 'பைரவா' படத்தில் நடித்துவருகிறார். தவிர, சிவகார்த்தியேகனுடன் ரெமோ ரிலீஸாகவிருக்கிறது. சூப்பர்மா... 

ராதா - கார்த்திகா - துளசி

80களில் சினிமா பிரியர்களாக இருந்தவர்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் மேரி. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தையும் மேரியையும் நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை 1981ல் தொடங்கி 1991 இவர் நடித்த அனைத்துப் படங்களூமே ஹிட் லிஸ்ட்.  அப்பப்பா அப்படியொரு நடிப்பையும் கவர்ச்சியையும் அள்ளித்தெளித்தவர். அலைகள் ஓய்வதில்லை ஹிட்டைத் தொடர்ந்து கார்த்தி - ராதா கூட்டணியில் அடுத்தடுத்து ஏழு படங்கள் வெற்றி பெற்றது.  இந்தப்பக்கம் ரஜினி கமல் என்றால் தெலுங்கில் சிரஞ்ஜிவியுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பார். தெலுங்கில் இவர் நடித்த 27 படங்களில் 16 படங்களில் சிரஞ்ஜீவியுடன் இணைந்து நடித்தார். இப்போ இவரின் இரண்டு பெண்களும் நடிக்க திரைத்துறையில் கால் பதித்திருக்கிறார்கள்.  தமிழில் ஜீவாவுடன் கோ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா.  இப்படத்தின் ஹிட்டை அடுத்தடுத்தப் படங்களில் தக்கவைக்க தவறினாலும், வருடத்திற்கு ஒரு படமாவது கொடுத்துவிடுகிறார்.  கடந்தவருடம் 'புறம்போக்கு' ரிலீஸானது. இந்த வருடம் அருண்விஜய்யுடன் 'வா டீல்' ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது. 

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ராதாவும், கார்த்திக் அறிமுமான முதல் படத்திலேயே பெரிய ஹிட்.  அதே துளசிக்கும் மணிரத்னத்தின் 'கடல்' மூலம் வாய்ப்பு அமைந்தது. துளசியும், கெளதம் கார்த்திக்கும் அறிமுகமான படம் கடல். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து ஜீவாவுடன்  துளசியின் இரண்டாவது படம் யான். அத்துடன் திரையுலகிற்கு டாடா காட்டிவிட்டார் துளசி. டேக் கேர் துளசி! 

சரிகா - ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா. திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் கமல்ஹாசனின்  வாழ்வில் மிகமுக்கியமானவர். டெல்லிப்பொண்ணு, நான்கு வயதிலேயே நடிக்கத்தொடங்கியவர்.  இந்தியில் சரிகா என்றாலே தனி க்ரேஸ். ஹீரோயினாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் கெத்து காட்டியவர். லேட்டஸ்டாக இந்தியில் வெளியான 'பார் பார் தேக்கோ' படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். இன்று வரையிலும் அவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பும் பெற்று வருகிறார். கமலுடன் 20 வருட வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலின் பிறகு மும்பையில் செட்டிலானவர், தன் இரண்டு பெண்களையும் சுதந்திரமாக திரையுலகில் வலம்வர அனுமதித்தார். “ ஸ்ருதிக்கு பாடுவதிலும், அக்‌ஷராவிற்கு நடனத்திலும் ஆர்வம் அதிகம். அவர்களுக்கான பாதையை அவர்களே முடிவெடுக்கலாம்” என்று கூறிய சரிகாவின் இரண்டு செல்லங்களுமே தமிழ் திரையுலகின் செல்வங்களே. 

ஃபிலிம்பேரில் சிறந்த அறிமுக நடிகைகான விருதினை ஸ்ருதி '7ம் அறிவு' படத்திற்கான 2011ல் பெற்றார் ஸ்ருதி. திரையுலகே வரவேற்ற ஸ்ருதி, இப்போது தென்னிந்தியாவின் டாப் நடிகர்களுடன் நாயகியாக வலம்வருகிறார். புலி, வேதாளம் என்று அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்ந்துவிட்ட ஸ்ருதிக்கு அடுத்ததாக தெலுங்கில் பிரேமம், பவன் கல்யாண் நடிக்கும் படம்,  தமிழிலில் சிங்கம் 3 என்று பிஸியாக இருக்கிறார். 

ஒரே படம் “ஷமிதாப்”... பாலிவுட், கோலிவுட் ரசிகர்களை ஈர்த்தவர். நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கத்தில் அதீக ஆர்வம் கொண்டவர் அக்‌ஷரா. அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், தந்தை கமலின் சபாஷ் நாயுடு படத்தில் சின்சியர் உதவி இயக்குநர். ஆல் தி பெஸ்ட்! 

பூர்ணிமா - சரண்யா:

80களில் குடும்ப குத்துவிளக்காக, ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர் பூர்ணிமா. அழகு, அடக்கம், நடிப்பு என்று இவரின் சார்ட் எப்போதுமே எகிறியிருக்கும்.  மோகனுடன் 'பயணங்கள் முடிவதில்லை', பாக்கியராஜ் இயக்கி நடித்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படங்கள் இவரின் வெற்றியை பாதைக்கு சாட்சி. ரியல் லைஃபில் பாக்கியராஜூடன் ஜோடியான பின் நடிப்பதற்கு டாடா காட்டிவிட்டு, நல்ல குடும்பத்தலைவி, பொறுப்பான தாய் என இல்லற வாழ்வில் பிஸியானார். சித்து +2 படத்தின் மூலம் சாந்தனு அறிமுகமாகி, இன்று வரையிலும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. 

பூர்ணிமாவின் மகள் சரண்யாவை நினைவிருக்கிறதா பாஸ்?  2006ல் தந்தை பாக்கியராஜ் இயக்கத்தில் மகள் சரண்யா நடித்த படம் 'பாரிஜாதம்'. பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் “உன்னை  கண்டேனே முதல் முறை” பாடல் வைரல் ஹிட். அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லாலுடன் போட்டோகிராஃபர் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். அதன் பின் நடிப்பில் ஆர்வம் குறைந்து விலகிவிட்டார். ஆனால், பூர்ணிமா 2013ல் 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தவர், தொடர்ந்து 'ஜில்லா'வில் விஜய்க்கு அம்மாவாக அசத்தியவர், இந்த வருட ரிலீஸ் 'வாய்மை' வரையிலும் கில்லி மாதிரி நடிப்பை தொடர்கிறார். கலக்கல் பூர்ணிமா! 

லட்சுமி - ஐஸ்வர்யா

கலைக்குடும்பத்திலிருந்து, திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை லட்சுமி.  கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகையாக இருந்த குமாரி ருக்மினியின் மகள். இவரின் தந்தை Yaragudipati Varada  தெலுங்கில் மிகப்பெரிய இயக்குநர். லட்சுமி நடித்த எல்லாப் படங்களுமே சிக்ஸர் தான். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். நடிகையாக,  குணச்சித்திர நடிகையாக என்று எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்தவர்.  இவரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சினிமா என்ட்ரி கிடைத்தது.  பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த 'மீரா' படம் மட்டுமே பேசப்பட்டது.  ஹீரோயினாக நடிப்புலகில் கால்பதித்தவர் அடுத்தடுத்து கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடிப்பில் தன்னை நிரூபித்தவர். சூர்யாவின் ஆறு படத்தில் சவுண்ட் சரோஜாவாக ரகளை செய்தார். பிறகு சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி அதைத் தொடர்ந்தும் வருகிறார்.

மஞ்சுளா - ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா 

நடிகர் விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளா இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  விஜய்குமார், மஞ்சுளா, ஸ்ரீதேவி, அருண்விஜய், ப்ரித்தா என்று ஒட்டு மொத்த குடும்பமும் சினிமாவில் தான். 80களில் நடிகையாக வலம் வந்த மஞ்சுளாவின் மூன்று மகள்களுமே நடிப்பில் இறங்கினார்கள். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்று மூவருமே நடிகையாக தோன்றி ஐந்திலிருந்து பத்து படங்கள் வரை நடித்திருப்பார்கள். கொஞ்ச வருடம் நடிப்பு, அத்துடன் கல்யாணம், தனிப்பட்ட வாழ்க்கை என்று செட்டிலாகிவிட்டார்கள். மூவரில் ஸ்ரீதேவி மட்டுமே கொஞ்சம் பேசப்பட்டார். தனுஷுடன் தேவதையை கண்டேன், மாதவனுடன் பிரியமான தோழி என்று லைம் லைட்டில் வந்தவர் பிறகு குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார். 

கடைசியா.... 

இத்தனை பேரைச் செல்லிவிட்டு,  தெறி படத்தில் கலக்கிய தெறி பேபி, மீனா மகள் நைனிகாவை மறந்தா எப்படிப்பாஸ்ன்னு உங்க மைண்ட வாய்ஸ் கேக்குது.. எதிர்காலத்தில் நடிகையாக நைனிகாவும் ஒரு வலம் வர வாழ்த்துகிறோம். 

-பி.எஸ்.முத்து-