Published:Updated:

தந்தை மகன் கதைகளில் தள்ளாடும் தெலுங்கு சினிமா! ஹைப்பர் -படம் எப்படி? #Hyper

Vikatan Correspondent

கந்திரேகா படத்துக்குப் பின் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் + ராம் காம்போவில் வந்திருக்கும் படம். டீசர், ட்ரெய்லர், பட டைட்டில் எல்லாவற்றிலும் இருந்த 'ஹைப்பர்' படத்தில் இருக்கிறதா? 

ஓ மை டாட் என தந்தை நாரயண மூர்த்தி (சத்யராஜ்) மேல் பைத்தியமாக இருக்கும் மகன் சூர்யா (ராம்). தந்தை மீது எவ்வளவு பாசம் என்றால், தந்தை யார் முன்னும் தலை குணியக்கூடாது என சாமி படத்தையே எடுத்து மறைத்து வைப்பவர், அப்பாவின் உயிரைக் காப்பாற்றியதால் லோக்கல் தாதா முரளி ஷர்மாவுக்கு ஃப்ரெண்ட் ஆகி அவர் குடும்பப் பிரச்சனைகள் வரை தீர்த்து வைப்பவர், இந்த பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கே என அப்பா சொன்னதால் அந்தப் பொண்ணையே காதலி ஆக்குபவர் என கடவுள் ரேஞ்சுக்கு பாவித்து வாழும் தங்கமகன் ராம். இந்த குருவி கூட்டுக்குள் குண்டு வைக்க வில்லங்கம் மினிஸ்டர் ராவ் ரமேஷ் வேடத்தில் வருகிறது. தான் கட்டும் ஷாப்பிங் மாலுக்கு, நேர்மை மாறாத சத்யராஜ் அனுமதி மறுக்க, அவரை வழிக்குக் கொண்டுவர முரளி ஷர்மாவை அணுகுகிறார் ராவ். முரளி ஷர்மாவோ ராமிடம் ஐடியா கேட்கிறார். தந்தையை மிரட்டுவதற்கு தான் ஐடியா தருகிறோம் என தெரியாமல் ராமும் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அது தெரிந்து விட, "எங்க அப்பா ரிட்டயர்மெண்ட் பேப்பர்ல கையெழுத்து போடப்போற 15 நாளைக்குள்ள உன்னோட பதவிய பறிச்சு, உன்னை ராஜினாமா லெட்டர்ல கையெழுத்து போட வெக்கிறேன்டா" என சவால் விட்டு, சேலன்ஞ் பண்ணி, பழிவாங்கி, ரிவென்ஞ் எடுத்து, பழிக்குப் பழிவாங்கி, ரிவென்ஜுக்கு ரிவென்ஞ் எடுத்து என மாறி மாறி பக்கம் பக்கமாக டயலாக் பேசி க்ளைமாக்ஸில் ஹீரோ எப்படி வில்லனை பழி தீர்த்தார் என்பதே கதை. 

ஹீரோ ராம் வழக்கம் போல செம எனர்ஜி, செம பெர்ஃபாமென்ஸ். அப்பா மேல் காட்டும் அன்பும், நண்பர்களோடு சேர்ந்து அப்பா சொன்ன மகலெட்சுமியைத் தேடி அலைவதும், ஃபைட்டர்களைப் பறக்கவிடும் சண்டையிலும் எல்லாவற்றிலும் வழக்கம் போல் ராம் சூப்பர். ஆனால் புதுசா வேற எதாவது ட்ரை பண்ணுங்க ப்ரோ. ஜாலியா இருக்கறதுனா என்னாங்க? என அப்பிரானியாக என்ட்ரி ஆகி ராமிடம் அட்வைஸ் கேட்பதும், பின் ராம் மீது காதலில் விழுந்ததும் ராமையே ஓடவிடுவதுமாக ராஷி கண்ணா க்யூட் & ஸ்வீட். 

எல்லாரையும் விட நம்மை ஈர்ப்பது சத்யராஜ் தான். என் மேல இம்புட்டு பாசம் உள்ள மகனா என சந்தோஷப்பட்டு, அதுவே தொல்லையான பின்பு 'இவன் அலும்பு தாங்கலையே கடவுளே' ரியாக்‌ஷன்களுமாக அசால்ட் செய்திருக்கிறார் சத்யராஜ். ராவ் ரமேஷ், துளசி, சயாஜி ஷிண்டே, முரளி ஷர்மா எல்லோரின் பெர்ஃபாமென்ஸும் பக்கா. டிபிகல் தெலுங்குப் பட வில்லன் கூடவே இருந்து காமெடி செய்யும் ஃபிஷ் வெங்கட், பிரபாஸ் ஸ்ரீனு என அடியாட்களும் மிஸ்ஸாகாமல் வந்து ப்ரசெண்ட் சொல்லி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

இண்டர்வெல் வரை ஒரு பதற்றத்தோடு கொண்டு சென்று பிறகு மிக ஸ்லோவாக செல்லும் திரைக்கதையும் யூகிக்கக் கூடிய காட்சிகளும் சோதிக்கிறது. சமீரா ரெட்டியின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்டுகிறது. மணிஷர்மாவின் பின்னணி இசை ஓகே. ஆனால் ஜிப்ரான் இசையமைத்திருக்கும் பாடல்கள் எல்லாம் சுமார் தான். ஜி தெலுங்கில், ஒரு தமன், ஒரு ராக்ஸ்டார் டி.எஸ்.பி போதும் ஜி. நீங்களும் அதே மாதிரியா போடுவீங்க?

தன் பேட்டர்னில் இருந்து சற்றும் விலகாமல் ஸ்கெட்ச் போட்டு படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ். மூன்று படங்களும், முந்நூறு ஒற்றுமைகளும் என இவர் இயக்கிய கந்திரேகா, ரபஷா மற்றும் ஹைப்பர் மூன்றையும் பற்றி ஆராய்ச்சி புத்தகமே எழுதலாம் போல. அவ்வளவு வழக்கமான திரைக்கதை. க்ளைமாக்ஸுக்கு முன் ஹாஸ்பிடல் சீனில் ஹீரோ செய்யும் ப்ளான் போல, ஹீரோ வில்லன் கேம் முழுக்க சுவாரஸ்யமாக இருந்திருந்தால், ஆடியன்ஸுன் ஆர்வமும் ஹைப்பராகி சீட் நுனிக்கு வந்திருப்பார்கள்.