Published:Updated:

வெற்றிமாறனும், விசாரணையும் ஏன் தமிழ் சினிமாவிற்குத் தேவை?

வெற்றிமாறனும், விசாரணையும் ஏன் தமிழ் சினிமாவிற்குத் தேவை?
வெற்றிமாறனும், விசாரணையும் ஏன் தமிழ் சினிமாவிற்குத் தேவை?

கடந்த வருடம் வெளியான தமிழ்படங்களில் இருந்து ‘விசாரணை’ ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி. ஒரு தமிழ் படம் ஆஸ்கருக்குப் போவதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?. உண்மையிலேயே சர்வதேச அளவில் பெரிய அங்கீகாரம்தானா?. நம்ம தேசிய விருதுகளை விடவும் இது பெரிதா?. இதைப் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பார்போம். சிறந்த தமிழ் படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகர் இந்த மூன்று பிரிவுகளில் விசாரணை படம் தேசிய விருதைப் பெற்றுள்ளது. இதுவரை மராத்திய, வங்க மொழிப்படங்களையே வியந்து பார்த்துக் கொண்டிருந்த நமக்கு உலக அங்கீகாரம் எட்டும் வகையில் கொண்டு வந்து சேர்த்த பெருமை வெற்றிமாறனுக்கு உண்டு. ஆனால், இதற்கான பாதை நீண்டது... நெடியது. 

” இதயெல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனா வெத நான் போட்டது” என்று ஆஸ்கார் கனவுப்பட்டியலில் முதலில் நிற்கிறார் சிவாஜி. பின் தொடர்கிறார் கமல். சிவாஜி கனேசனின் ‘தெய்வ மகன்’ தொடங்கி கமலின் ’ஹே ராம்’ வரையில் 9 தமிழ் படங்கள் விசாரணைக்கு முன் ஆஸ்கார் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.பிற இந்தியமொழிப் படங்களையும் சேர்த்து இதுவரை 59 படங்கள் போட்டிக்கு அனுப்பப் பட்டிருந்தாலும் ’மதர் இந்தியா’,’சலாம் பாம்பே’,’லகான்’ ஆகிய மூன்று படங்கள்தான் திரையிடப்படும் கட்டத்தை எட்டின.

விசாரணை படத்தை முதலில் பார்த்த அனைவரும் தணிக்கையில் அதிகம் வெட்டு இல்லாமல் U\A சான்றுடன் இந்தப் படம் வெளியானது எப்படி என்றுதான் ஆச்சரியப்பட்டு போனார்கள். இந்த படத்தை வெனிஸ், பிரான்ஸ் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் வெற்றி மாறன் முதலில் திரையிட்டுக் காட்டினார். வெனிஸின் ‘Amnesty International சார்பாக வழங்கப்படும் மிகச் சிறந்த மனித உரிமைத் திரைப்படம் என்ற விருதை முதலில் விசாரணை வென்றது. அதற்கு பிறகு வெற்றிமாறன், இந்தியத் திரைப்படத் தணிக்கைக்கு ஏற்ப படத்தில் சில காட்சிகளை மாற்றி எடுத்தார். பின்னர் அதனை இந்திய தணிக்கைக் குழுவுக்கு காட்டி U\A சான்றிதழ் வாங்கினார். அதனால், சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்படும் விசாரணைக்கும் நாம் திரையரங்கங்களில் காணும் விசாரணைக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். 

இதையெல்லாம் முன்னோடிகள் பெற்ற படிப்பினைகளிலிருந்து பாடம் கற்காமல் வெற்றிமாறனால் செய்திருக்க இயலாது. இந்திய அளவில் செல்வாக்குள்ள நடிகர் தனுஷ், இந்தப் படத்தை தயாரித்ததும், பன்னாட்டு நிறுவனமான LYCA இதனை விநியோகம் செய்ததும் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். இதனால், தமிழ்படங்களில் விசாரணைதான் முதன் முதலாக 120 நாடுகளில் திரையிடப்பட்டது என்ற பெருமையையும் பெற்றது. இப்படித் திட்டமிட்டே ஒரு படத்தை விருதுக்குரியதாக எடுப்பதால் எந்த பாதகமும் ஏற்படப்போவதில்லை. இந்தப் போக்கு இனி தமிழ் சினிமாவில் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிரக் குறையாது. திரைத்துறையில் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள், எப்படி அணுகினால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணம்தான் வெற்றிமாறனின் விசாரணை. 

சினிமாத்துறைக்குள் அடியெடுத்து வைக்கும் முன்பு நாம் எந்த மாதிரியான பார்வையாளனுக்காகப் படம் எடுக்கப் போகிறோம் என்ற தெளிவு ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டும். நமக்கான தனித்துவம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். தனது இளம் வயதில் நேர்ந்த துன்பியல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்டோ சந்திரன் ’லாக்கப்’ என்ற நாவலை கடந்த 2015ம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டார். இச்சம்பவம் நிகழ்ந்தது 1980ம் ஆண்டுவாக்கில். இடைப்பட்ட காலத்தில் சந்திரன் தொடர்ந்து மார்க்ஸியம், தூக்குத் தண்டனை, சிறையடைப்பு போன்ற தனிமனித உரிமை சார்ந்த பதிவுகளை வாசித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். உலக அமைதிக்கான சைக்கிள் பயணம், தொழிற்சங்கப் பணிகளில் பங்கேற்பது, சர்வதேச விழாக்களில் வெளியாகும் பன்மொழிப்படங்களை ஊன்றிப் பார்ப்பது என்று பல தளங்களில் ஓய்வில்லாமல் இயங்குகிறார் சந்திரன். 

தனது லாக்கப் அனுபவத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தனது மொழி ஆற்றலைப் புடம் போட்டு மேம்படுத்திக் கொண்டிருந்த ஆட்டோ சந்திரன் 1980ம் ஆண்டு நடந்த சம்பவத்தை 2015ம் ஆண்டுதான் நாவலாக வெளியிடுகிறார். 'லாக்கப்' நாவல் சாமானியனின் கதைத்தான். ஆனால், எழுத்துநடை சாமானியனுடையதல்ல. “அறிவிக்கப்பட்டிருந்த எல்லா மனித உரிமைப் பிரகடனங்களையும் கரைத்துக்கொண்டு வியர்வை ஆறாய் ஓடியது” போன்ற நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனங்கள் தேர்ந்த எழுத்தாளனாக சந்திரன் உருவாயிருப்பதற்கான அடையாளம். 

சந்திரன் இப்படி என்றால், மறுபுறத்தில் வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’, ’ஆடுகளம்’ போன்ற படங்களின் மூலம் தன்னைப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தார். விசாரணை போன்ற ஒரு கதையை உலக விழாக்களுக்காக எடுத்துச் செல்ல மற்ற படங்களின் மூலம் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் செய் நேர்த்தி, ஒரு நாவலிலுள்ள எழுத்தைக் காட்சிவடிவமாக்கும்போது அவர் கையாண்ட நுட்பமான திரைமொழியின் மூலம் வெளிப்படும். நாவலின்படி சந்திரனும் நண்பர்களும் நீதிபதியின் அறிவுரையின்படி குற்றத்தை ஒப்புக்கொண்டு லாக்கப்பிலிருந்து சிறைக்கு மாற்றப்பட்டபின் விடுதலையாகிறார்கள். 

நாவலில் சந்திரன் முன்வைத்த அரசியல் பார்வை வேறு. சமூகம் எனும் நதியில் உதிரிகளாக இருக்கும் மாவோயிஸ்ட், நக்ஸல் போன்ற தனியுரிமை மீறல் பற்றி சதா குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் இயக்கங்களை எப்படியெல்லாம் ஒரு குமிழியைப் போன்று காவல்துறை கையாள்கிறது காவல்துறையின் வட்டத்தில் சாமானியனிலிருந்து அதிகார வர்க்கத்தினர் வரை எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்பது சந்திரக்குமாரின் பார்வை. அந்தக் கதையை அப்படியே எடுத்திருந்தால் அது ஆவணப்படமாகிவிடும். 

இந்த சம்பவம் நமது வாழ்க்கையில் நடந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று ஒரு கதை மாந்தராக நமக்குள் கேட்க வைக்கும்விதத்தில் திரைக்கதை அமைத்ததில்தான் வெற்றி மாறனின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்கு பலம் சேர்ப்பது போல் நடிகர்களின் தேர்வு, ஒளிப்பதிவு, பின்னணி இசை(குறிப்பாக படம் முழுக்க பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருந்த அந்த வாக்கி-டாக்கி சத்தம்), நேர்த்தியான எடிட்டிங் என தொழில்நுட்பத்திலும் விசாரணை அசத்தியது. இத்தனைக்கு இந்த படத்தை எடுக்க வெற்றி மாறனுக்கு தேவைப்பட்டது 43 நாட்கள்தான். 

இதற்கு முன் ’Madras eyes’ போன்ற இந்திய ஆவணப்படங்கள் வெனிஸிலும், ’காணி நிலம்’ பெர்லினிலும் ஏற்கனவே சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன. இது போன்ற சர்வதேச விழாக்களில் வெகுஜன சினிமா, ஆவண சினிமா என்று பாகுபடுத்திப் பார்க்கப்படுவதும் கிடையாது. விதிமுறைகளுக்குட்பட்டு வரும் எல்லா நாட்டு மொழிப் படங்களும் அங்கே திரையிடப்படும். அவற்றில் இரு படங்கள் ஒரே அளவு மதிப்பெண்கள் பெறும்பொழுது எந்தப் படம் வசனங்களைத் தாண்டி மற்ற அம்சங்களின் வழியாக கதையை லாவகமாக நகர்த்திக் கொண்டு செல்லும் வகையில் உள்ளதோ அதுவே சிறந்த படமாகத் தேர்வு செய்யப்படும். அதனால், கதையம்சங்களைத் தாண்டி நாம் தொழில் நுட்பத்திலும் முன்னாடி ஆக வேண்டும். அதில் நமக்கென்று தனித்தன்மையை வகுக்க்க வேண்டும். அதானல் நிறைய வெற்றிமாறன்கள்தான் தமிழ் சினிமாவுக்கு உடனடித் தேவை.

-கார்த்திகேயன் புகழேந்தி