Published:Updated:

”ஒரு நாளைக்கு 200 ஹெலிகாப்டர் ஷாட்ஸ்..!'' - ரீல் ’தோனி’ சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி #Exclusive

”ஒரு நாளைக்கு 200 ஹெலிகாப்டர் ஷாட்ஸ்..!'' - ரீல் ’தோனி’ சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி #Exclusive
”ஒரு நாளைக்கு 200 ஹெலிகாப்டர் ஷாட்ஸ்..!'' - ரீல் ’தோனி’ சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி #Exclusive


" இரண்டு வருட காலம் தோனியாகவே நடந்து, தோனியாகவே பேசிப் பழகி, சிரித்து, அழுது வாழ்ந்து... திடீரென, நான் தோனியில்லை... சுஷாந்த் என்று உணர்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது" என்று பொறுமையாகப் பேச்சை ஆரம்பிக்கிறார்  "எம்.எஸ். தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி" படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட். 

கூல் கேப்டனாக நடித்ததாலோ என்னவோ, சுஷாந்தும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் ரொம்ப கூலாகவே இருக்கிறார். அவருடன் ஒரு "ஹாட் டீ" சிட் சாட்...


தோனியாக நடிப்பது எவ்வளவு கடினமாக அல்லது எளிதாக இருந்தது ?
" அவரைப் போல் கேமரா முன்பு நடிப்பது என்பது எளிது தான். ஆனால், அவரின் உணர்வு ஓட்டங்களைப் புரிந்துக் கொள்வது தான் மிக மிகக் கடினமான ஒன்று. வாழ்வின் பல தருணங்களில் அவர் எடுத்த முடிவுகளும், பல சூழல்களில் அவரின் செயல்பாடுகளும் சாதாரண மனிதர்களைப் போன்றதாக இல்லை. அதைப் புரிந்துக் கொள்ளத் தான் அதிக சிரமப்பட்டேன். ஏனென்றால், கேமரா முன்பு நான் தோனியாக நடிப்பதைவிட தோனியாக வாழ வேண்டிய அவசியம் இருந்தது. ஏனென்றால், தோனியின் வாழ்க்கைப்  பயணம் என்பது அத்தனை ஆழமான உணர்வுகளைக் கொண்டது. "

 தோனியை சந்தித்த அனுபவம்?
" படத்தில் கமிட் ஆனதுமே முதல் 4 மாதங்கள் தோனியின் வீடியோக்களைக் பார்ப்பது, ஆடியோக்களை கேட்பது என்றே இருந்தேன். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மணி நேரங்களை இதில் செலவிட்டேன்.படத்திற்காக தோனியை மூன்று முறை சந்தித்தேன். முதன்முறைப் பார்த்த போது, பொதுவாக அவரின் வாழ்க்கைக் குறித்து கேட்டறிந்தேன். இரண்டாவது தடவை சந்திக்கும் போது கிட்டத்தட்ட 250 கேள்விகளை அவரிடம் நான் கேட்டேன். அது அத்தனையும் அனுமானமான, கற்பனையான கேள்விகள். அந்த கேள்விகளுக்கு அவர் எப்படி ரியாக்ட் செய்தார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன். உதாரணத்திற்கு, கோபப்படும் போது அவர் முகம் எப்படி மாறுகிறது, பயப்படும் போது... என முக பாவனைகளைப் படித்தேன். ஏனென்றால், அவ்வளவு லேசில் ஒரு விஷயத்திற்கு அவர் ரியாக்ட் செய்திட மாட்டார். மூன்றாவது முறை ஸ்கிரிப்ட் சம்பந்தமான விஷயங்களுக்காக சந்தித்தேன். "


யாரும் அதிகம் நெருங்கிடாத தோனியிடம் நெருக்கமாக பழகியுள்ளீர்கள். அவரிடம் உங்களுக்குப் பிடித்த , பிடிக்காத விஷயம்?
" தன்னுடைய நம்பிக்கைகள் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை. அடுத்து அவரின் பயமின்மை. அவருக்கு எதிர்காலம் குறித்த பயமோ, கடந்த காலம் குறித்த கவலைகளோ கிடையாது. இந்த நொடிக்காக வாழ்பவர் அவர். நம்மில் எத்தனையோ பேர் அதற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறோம். "நொடிகளுக்குள் வாழ்வது" ...அது தோனிக்கு மிக எளிதாகக் கைக்கூடும் . அவரிடம் பிடிக்காத விஷயம்... என்று ஏதுமில்லை. ஆனால், அவர் எப்படி என்றால் தனக்கென சில "சரி"களையும், "தவறு"களையும் வடிவமைத்து வைத்துள்ளார். அதற்கிடையிலான யாருடைய விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்ள மாட்டார். தோனி ஒரு புரியாத புதிர்..." 


தோனியின் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஷாட்டை, அவரைப் போலவே அடித்துள்ளீர்கள்... அது எப்படி சாத்தியமானது?
"ஓஓ... அது ஒரு நீண்ட நெடிய போராட்டம். நான் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகனாக இருந்தாலும், வீரர்களின் விளையாட்டை அத்தனை உன்னிப்பாக கவனித்ததில்லை. ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் என் கிரிக்கெட் கோச்சிற்குத் தான் சமர்ப்பணம். ஒரு நாளைக்கு 7 மணிநேரம் என  4 மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டேன். ஒரு நாளைக்குக் குறைந்தது இருநூறு முறையாவது ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேன். இரவில் வீட்டிற்குப் போனால், எனக்கு முதுகு இருக்கிறதா என்ற சந்தேகமே வந்துவிடும்!!!" 

படம் குறித்து இதுவரை கிடைத்த பாராட்டுக்களிலேயே மறக்க முடியாதது?
"படம் பார்த்து பலர் பாராட்டினாலும்,  அதன் தயாரிப்பின் போதே கிடைத்த இரண்டு பாராட்டுக்கள் முக்கியமானவை. ஒன்று படத்திற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோவை தோனியிடம் என் மொபைலில் காட்டினேன். அவர் பொதுவாக எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதிகம் ரியாக்ட் செய்ய மாட்டார். என் வீடியோவைப் பார்த்த போது ஒரு நொடி அவர் புருவம் உயர்ந்தது, சிறிதாகப் புன்னகைத்தார். பின்பு, "மேஜிக் மாதிரி இருக்கு... நான் இங்கிருக்கேன்... அதில் விளையாடுவது யார்?" என்று கேட்டார்!!
"அடுத்தப் பாராட்டும் மறக்கவே முடியாத ஒன்று... நான் பயிற்சி செய்யும் இடத்திற்கு அருகில் அர்ஜுன் என்ற பையனும் பயிற்சியில் இருந்தான். அவரின் அப்பாவும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். நான் பல மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்வதைப் பார்த்து, அர்ஜுனின் அப்பா என் கோச்சிடம் இந்தப் பையன் எந்த டீமைச் சேர்ந்தவன், நன்றாக விளையாடுகிறானே என்று கேட்டுள்ளார். பின்பு, நான் நடிகன் என்பதை என் கோச் சொன்னதும், அவர் என்னை அழைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவர்... சச்சின் தெண்டுல்கர்..."


கேப்டனின் காதல் பக்கங்கள் குறித்து... எங்க தமிழ் சினிமா நடிகை ஒருத்தர் கூட...
சிரித்தபடியே கேள்வியை இடைமறித்து..." தோனி ரொம்ப ரொமாண்டிக்கான ஆள் தான். ஆனால், அது அவரிடம் அதிகம் நெருங்கிப் பழகுபவர்களுக்கு மட்டுமே தெரியும். படத்தில் அவரின் காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன... மற்றதைப் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்..." என்றபடியே கைகுலுக்கி நமக்கு விடைகொடுத்தார்.

பேட்டியின் தொடக்கத்தில் அவர் டேபிளில் "ஹாட்"ஆக இருந்த டீ, இப்பொழுது "கூல்" ஆகியிருந்தது. !!!!

சுஷாந்த் சீக்ரெட்ஸ்:

1. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் (1984 - 1993) கிரண் மோரே தான் சுஷாந்திற்கான கிரிக்கெட் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
2. பாலிவுட்டில் அறிமுகம் ஆவதற்கு முன்பே சுஷாந்தை, இயக்குநர் மணிரத்னம் சென்னைக்கு அழைத்து அவரின் படத்திற்கு ஆடிஷன் செய்துள்ளார். ஆனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை.
3. பிஹார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்து, எஞ்சினியரிங் படிப்பைப் பாதியில் நிறுத்தி... தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், சீரியல் என பல தடைகளைக் கடந்து இன்று தோனியாக அவர் நடித்துள்ளார். 
4. தோனிக்கு மிகவும் பிடித்தது பழைய யமஹா ஆர்.டி. பைக் தான் . டெல்லியில் தோனியும், சுஷாந்தும் ஆளுக்கொரு ஆர்.டியில் சுற்றிக் கொண்டிருந்தனராம். பின்பு, ரசிகர்கள் கண்டுபிடித்து கூட்டம் நெருக்கி அடிக்க... ரீல் தோனியும், ரியல் தோனியும் அங்கிருந்து தெறித்திருக்கிறார்கள். 
5. கதை உரிமைக்கு தோனிக்கு கொடுக்கப்பட்ட தொகையோடு சேர்த்து படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

-இரா.கலைச்செல்வன்
படங்கள்-தே.அசோக்குமார்