Published:Updated:

”என் நர்ஸ் கெட்டப்புக்கு சமந்தா என்ன சொன்னாங்க தெரியுமா?!” - சிவகார்த்திகேயன் Exclusive பேட்டி

 ”என் நர்ஸ் கெட்டப்புக்கு  சமந்தா என்ன சொன்னாங்க தெரியுமா?!” -  சிவகார்த்திகேயன்  Exclusive பேட்டி
”என் நர்ஸ் கெட்டப்புக்கு சமந்தா என்ன சொன்னாங்க தெரியுமா?!” - சிவகார்த்திகேயன் Exclusive பேட்டி

”என் நர்ஸ் கெட்டப்புக்கு சமந்தா என்ன சொன்னாங்க தெரியுமா?!” - சிவகார்த்திகேயன் Exclusive பேட்டி

“மச்சான்...சத்யம்ல ஓப்பன் பண்ன 5 நிமிஷத்துல ஃபுல்..”

“நீ வேற.. குரோம்பேட்டை ராக்கிலயும் தான். அதுவும் 6 மணி ஷோ.”

இன்று காலை நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களில் அதிகம் பேசப்பட்டது இதுவாகத்தான் இருக்கும். பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறான் ரெமோ. ரிலீஸ் டென்ஷன் ஏதுமில்லாமல், அதே சிரிப்புடனும், உற்சாகத்துடன் பேசுகிறார் சிவா.

‘‘அதுக்குள்ள பெண் கெட்டப். இதுல என்ன சவால்னு நினைக்கிறீங்க?’’
‘‘லுக் டெஸ்ட் முதல் கடைசி நாள் ஷூட்டிங் வரை சவால்தான். முதல் மூணு லுக் டெஸ்ட் வரை ஐடியா இல்லாமதான் இருந்துச்சு. பிறகுதான், ‘பொண்ணுங்க என்னமாதிரியான லைனர்ஸ் யூஸ் பண்றாங்க. என்ன காஜல் இருக்கு. லிப் லைனர்ல என்ன வெரைட்டி இருக்கு’னு எனக்கு தெரிய ஆரம்பிச்சுது. ‘ஏன் இதையெல்லாம் நாம ட்ரை பண்ணக்கூடாது’னு அவங்களோட சேர்ந்து நானும் எக்ஸ்பெரிமென்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதாவது சோதனை எலி மாதிரி. இதுக்கு மேஜர் கிரெடிட் போகவேண்டியது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நிக்கி. அனுஷ்கா மேடத்தின் பெர்சனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். ‘வானம்’ படத்தில் அவங்ககூட நடிச்சவங்க. நாங்க டவுட்டா ஃபிக்ஸ் பண்ணிட்டு இருந்த விஷயங்களை எல்லாம் அவங்க ஒரே நாள்ல ஃபிக்ஸ் பண்ணிக்கொடுத்தாங்க. இது ரொம்ப நல்லா நம்பும்படியா வந்திருக்கிறதுக்கு காரணம் நிக்கி. அடுத்து ஃப்ரீ ஹேர் விடலாமா, குட்டையா வெச்சுக்கலாமா, ப்ரவுன் ஹேர் வைக்கலாமானு ஹேர் ஸ்டைலுக்குமே நிறைய சந்தேகங்கள். ஹேர் ஸ்டைலிஸ்ட் ரேச்சல்தான் ‘எப்படி இருக்கணும்’னு ஃபிக்ஸ் பண்ணினாங்க. நர்ஸ் டிரஸ் எப்படி இருக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணினதில் அனு மேடத்தின் பங்கும் முக்கியம். இப்படி நான்கைந்து மணிநேர மேக்கப் முடிந்து வெளியில் வந்தால் பயங்கர வெட்கமா இருக்கும். இப்படி எல்லாத்தையும் வெட்கம் கலந்தே பண்ணிட்டேன். அதுவே படத்துக்கு பிளஸ்ஸா இருக்குனு சொல்றாங்க.’’

‘‘பெண்ணா நடிக்கப்போறீங்கனு தெரிஞ்சதும் ஃப்ரெண்ட்ஸோட ரியாக்ஷன்ஸ் எப்படி இருந்துச்சு?’’
‘‘ஸ்கிரிப்ட்டை நான் யார்ட்டயும் பெருசா டிஸ்கஷ் பண்ணினது இல்லை. ஆனா, இப்படி ஒரு லுக் இருக்கிறதால ஆலோசனை பண்ணவேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு. ‘குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் பிடிக்கிற ஒரு ஹீரோ பெண் வேடத்தில் வர்றது சூப்பரா இருக்கும்...’, ‘நார்மலாவே நிறைய ஹியூமர் பண்ணுவீங்க. இப்படி வரும்போது வேற ஸ்டைல் ஆஃப் ஹியூமர் பண்ணலாம். அது மிகப்பெரிய பிளஸ்...’ இப்படி என்னைத்தவிர வேற யாருக்கும் இதில் தயக்கம் இல்லை என்பதுதான் ஆச்சர்யம். கதையை கேட்ட அனிருத், ‘சூப்பர் சார். உங்களுக்கு பெர்ஃபெக்டான ஸ்கிரிப்ட்’னு சொன்னார். கேட்டவங்கள்ல யாராவது ஒருத்தவங்கலாவது, ‘ஐயய்ய வேண்டாம் சிவா’னு சொல்லியிருந்தாங்கன்னா நான் கொஞ்சம் பின்வாங்கியிருப்பேன். ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துட்டு சமந்தா, ‘கண்ணு ரொம்ப அழகா இருக்கு. செமையா இருக்கு’ன்னாங்க. ரெமோ ட்ரெயிலர் பார்த்துட்டு ஏகப்பட்ட பாராட்டுக்கள். பலரும், ‘அந்த கேர்ள் கெட்டப்பை ரொம்ப கேஷுவலா ஹேண்டில் பண்ணியிருக்கீங்க’ன்னாங்க. ஆனா இந்தப் பாராட்டு எதையும் மனசுக்கு எடுத்துட்டு போகலை. படமா பார்த்துட்டு என்ன ரியாக்ஷன்ஸ் வருதுனு தெரிஞ்சுக்க ஆர்வமா காத்திருக்கேன்.’’


‘‘ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எப்படி ‘ரெமோ’வுக்குள் வந்தார்?’’
‘‘ராஜா அண்ணன், என் நலம் விரும்பி. சினிமா வியாபாரம் தெரிஞ்சவர். அவர் தயாரிப்பாளரா ஆகணும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்தக் கதை வந்தப்ப, ‘இதுக்கு தயாராகுறதே பெரிய புராசஸ். இதைக்கொண்டுபோய் இன்னொருத்தர்ட்ட திணிக்கக்கூடாது. அதனால நீங்களே பண்ணுங்க’னு சொன்னேன். அவர்தான், ‘இதுக்கு பிசி சார் சரியா இருக்கும் சிவா’னு சொன்னார். ‘நாம வளர்ந்துட்டு வர்ற இந்த நேரத்துல அவர்லாம் நம்ம படம் பண்ணுவாரா’னு கேட்டேன். ‘முயற்சி பண்ணுவோம். ‘பண்ணலை’னு சொன்னாக்கூட ‘இதை எப்படி பிரசன்ட் பண்ணலாம்னு ஐடியாவாவது கொடுங்க சார்’னு கேட்போம்’னார். சாரின் அசிஸ்டென்ட் பாலமுருகன், அறிவுமதி சார், ஆர்டிஸ்ட் ஏபி.ஸ்ரீதர் இவங்க மூணு பேரும்தான் பி.சி சாரை சந்திக்க ஏற்பாடு பண்ணினாங்க. ‘ஸாரி. எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு. இந்தியில பால்கி படம் பண்றேன்’னு சார் சொன்னாங்க. ‘நீங்க படிச்சிட்டு சொல்லுங்க சார்’னு ஸ்கிரிப்டை கொடுத்தோம். ஸ்கிரிப்டை படிச்சவர், அடுத்தநாள் காலையில, ‘இந்தப் படம் நான் பண்றேன்’ன்னாங்க. எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. ‘ஆனா ஒரே ஒரு சிக்கல். நான் பால்கி படத்தை முடிச்சிட்டுதான் வர முடியும். நீங்க மூணு மாசம் காத்திருக்க முடியுமா’ன்னாங்க. ‘பிசி சார் பண்ணினா அது லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ், இந்தப்படத்துக்கு இதைவிட பெஸ்டான விஷயம் நடக்கவே முடியாது. சினிமா வாய்ப்புக்காக, எத்தனையோ நாள் காத்திருந்தோம். ஒரு நல்ல விஷயத்துக்ககாக ஏன் காத்திருக்கக்கூடாது’னு தோணுச்சு. சார் வந்தப்பிறகுதான் படம் பெருசாச்சு.’’  

‘‘அவரோட வொர்க் பண்ணின அனுபவம் எப்படி இருந்துச்சு?’’
‘‘‘ஷங்கர் சார், மணி சார், இந்தி படங்கள்னு அவர் வொர்க் பண்ணினது எல்லாமே புரொஃபஷனல் டீம். ரொம்ப கம்மியான அனுபவம் உள்ள டீம்ல சார் வேலை பார்க்கிறது இதுதான் முதல்முறைனு நினைக்கிறேன். நாங்கக்கூட, ‘என்னப்பா பிசி சாரை கூப்பிட்டு வந்து ‘டாவியா’னு ஒரு லவ் ஃபெயிலியர் சாங் எடுத்துட்டு இருக்கோம்’னு பேசிப்போம். ஆனா அவரோ அதுக்கு அப்படியே எதிர்மறையா... ‘முதல்முறையா இப்படி ஒரு பாட்டு பண்றேன் சிவா. இதை வேற மாதிரி காட்டணும். இப்படி பண்ணலாமா’னு அவ்வளவு எனர்ஜியா சுத்துவார். சார் ஒரு சிங்கம் மாதிரி. அவர் பேசத் தேவையில்லை. நடந்துவந்தா போதும். அவர் உழைப்பு மேல இருக்கிற மரியாதை, யாராக இருந்தாலும் எழுந்து நிற்கச் சொல்லும். அவர்கூட ரிலாக்ஸா பேச எனக்கு இரண்டு ஷெட்யூல் ஆச்சு. கடைசி ஷெட்யூல்லதான் ரொம்ப கேஷுவலா பேச முடிஞ்சது. நான், இயக்குநர் பாக்கியராஜ்...னு சார் எங்களை ஒரு குழந்தைமாதிரி பார்த்துகிட்டார்.’’

‘‘சீனியரான அவர் இளைஞர்களான உங்களுடன் வொர்க் பண்ணியிருக்கார். என்ன சொன்னார்?’’
‘‘விசாகப்பட்டினத்துல நிறைய நாட்கள் ஷூட் பண்ணினோம். அங்க இருக்கிறவங்கள்ட்டலாம், ‘இவங்கதான் எங்கப்பட ஹீரோயின். நல்லா இருக்காங்களா’னு என்னை காட்டுவார். இங்க ஒரு பாட்டு சீன். அதில் நிஃப்ட் காலேஜ்ல ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிற ஃபேஷன் ஷோ பண்ற கேர்ள்ஸ் 30 பேர்களுக்கு நடுவுல மர்லின் மன்றோ காஸ்ட்யூம்ல என்னை நடக்க விட்டுட்டாங்க. கீழ ஃபேன் வெச்சு ஸ்கர்ட் பறக்குற மாதிரி எடுத்தாங்க. ஷாட் முடிஞ்சதும் நேரா வந்த சார் கைகொடுத்து கட்டிப்பிடிச்சிட்டாங்க. ‘இந்த லுக் அவுட் ஸ்டாண்டிங்கா இருக்கு சிவா. இவ்வளவு நல்லா வரும்னு நான் எதிர்பார்க்கலை’ன்னாங்க. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. சார்தான் எங்களோட ஹோல்ட்.’’

‘‘கிராமம்னா சூரி, நகரம்னா சதீஷ். அதன்படி ‘ரெமோ’வில் சதீஷ். எப்படி பண்ணியிருக்கார்?’’
‘‘அவங்க சந்திக்கும்போதெல்லாம், ‘யப்பா, வண்டி செங்கல்பட்டுக்கு உள்ள இருக்கும்போது நீ இருந்துக்க. அதைத் தாண்டிடுச்சுன்னா நான் ஏறிக்குவேன்’னு சூரி அண்ணன் சதிஷ்ட்ட சொல்லுவார். சதிஷ் அண்ணணும் என் ‘முகப்புத்தகம்’ குறும்பட டைம்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். இதில் நான் நர்ஸ் லுக்ல இருக்கும்போது அவர் இருக்கமாட்டார். ஏன்னா அவர் இருந்தார்னா நான் காமெடி பண்ண முடியாதே. தவிர ‘இது நம்ம படங்க, நீங்க நாலு நாள் நடிக்கச் சொன்னாலும் சரி, 40 நாள் நடிக்கணும்னாலும் சரி. சொல்லுங்க நடிச்சிட்டு போறேன்’ம்பார். அவர் மட்டுமில்லாம மொட்டை ராஜேந்திரன். யோகி பாபு... நல்ல ரோல் பண்றாங்க. அடுத்து முதல்முறையா சரண்யா மேடத்துடன் நடிச்சிருக்கேன். அவங்க ஸ்பாட்ல தன்னை இம்ப்ரூவ் பண்றதை பார்க்கவே அவ்வளவு ஆசையா இருக்கும். சில காட்சிகள்ல அவங்க நடிக்கிறதை என்ஜாய் பண்ணிட்டு பேசாம கூடவே இருந்துட்டேன. ஒருமுறை சரண்யா மேடம், ‘யப்பா நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது நடிக்கவே முடியாதுப்பா’னாங்க. உடனே சதிஷ், ‘அதனாலதான் நாங்க நடிக்கிறதே இல்லை’ன்னார். ‘ரெமோ’ செம அனுபவம்.’’

‘‘அம்மா, மனைவி, ஃப்ரெண்ட்ஸுக்கு எந்தளவுக்கு நேரம் ஒதுக்க முடியுது?’’
‘‘ஒரு சமயத்தில் ஒரு படம் பண்றதால வீட்டுக்கு நிறைய நேரம் செலவழிக்க முடியுது. ஆராதனாவுக்கு மூணு வயசாகுது. இந்த வருஷம் ஸ்கூலுககு போகப்போறாங்க. நல்லா பேசி, கத்துக்குற வயசு. இப்பதான சினிமா டயலாக் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. ‘இன்னைக்கே கே.எஸ்.ரவிக்குமாரை பார்க்கிறோம். தெறிக்கவிடுறோம்’னு சொல்லிட்டு இருக்காங்க. அப்புறம், ‘ஐயய்யோ... பார்த்துட்டா... பார்த்துட்டா’னு கத்திட்டே ஓடுறாங்க. ஷூட்டிங் இல்லாத நேரம் பூரா வீட்ல அவங்கக்கூடவே இருக்கிறதால மனைவிக்கூட, ‘நீங்க கிரிக்கெட்லாம் ஆடப்போய் ரொம்ப நாள் ஆச்சே. போய் விளையாடிட்டு வாங்க. வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களே’ம்பாங்க. அவங்க ஒரு அழகான லைஃபுக்குள்ள வந்துட்டாங்க. நாமளும் எல்லா பிரச்னைகளையும் அவங்களுக்குள்ள திணிக்கிறது இல்லை. ‘ட்ரெயிலர் ரெடியாச்சுன்னா, காமிங்க’ம்பாங்க. அம்மா, எப்பவும் ‘ஜாக்கிரதையா இருப்பா. ரொம்பப் பத்திரமா இருப்பா’னு சொல்லிட்டே இருப்பாங்க. ‘ஏன் அப்படி சொல்றாங்க’னு நான் கேட்டுக்கிறது இல்லை. அவங்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் பதட்டத்திலேயேதான் இருக்காங்க. சக்சஸ் என்பதை தாண்டி, நான் பத்திரமா நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க. நான் என் பழைய நட்பு வட்டத்துல இருக்கிறதால அவங்க பாதுகாப்பா உணர்றாங்க. நான் ‘ரெமோ’ பண்ணினது, ராஜா அண்ணன் தயாரிப்பாளர் ஆனது, என் ஃபரெண்டஸ் ரெண்டு பேருக்கு தன் தயாரிப்பு கம்பெனியில அவர் வேலை கொடுத்திருக்கிறது...னு நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாருக்கும் நல்லது நடக்கும்போது நமக்குமே பாசிடிவான விஷயமா அமையுது. எங்க யாருக்குமே சினிமா பின்னணி கிடையாது. ஆனால் நாங்க அழகான ஒரு கட்டமைப்புக்குள்ள வந்திருக்கோம்னு நினைச்சு சந்தோஷமா இருக்கோம். இது தொடரணும்.’’
- ம.கா.செந்தில்குமார்

அடுத்த கட்டுரைக்கு