Published:Updated:

தொலைந்து போன பிரபாகர், ஆனந்திக்காக #9yearsofKatrathuTamizh

Vikatan Correspondent
தொலைந்து போன பிரபாகர், ஆனந்திக்காக #9yearsofKatrathuTamizh
தொலைந்து போன பிரபாகர், ஆனந்திக்காக #9yearsofKatrathuTamizh

கற்றது தமிழ் என்கிற தமிழ் M.A திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன

கற்றது தமிழ் பற்றிய பரிச்சயம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ப்ரோமோவில் தான் ஆரம்பித்தது. யுவன்,சில பாடல்கள், ராம் என அந்தப் பேட்டியே செம காம்போ .அது யுவனின் பொற்காலம். ஒரு கட்டத்தில் ராம், "I Love Yuvan. யுவனை மணமுடிக்க ஆசைப்படுகிறேன்" என்றே சொல்வார். அடுத்து பேசும் யுவன் அவரது டிரேட்மார்க் சிரிப்பை உதிர்ப்பார். ஏனோ படத்தின் பெயர் பெரிதாக ஈர்த்தது. ஒரு முதல் பட இயக்குனர், எப்படி யுவனை இப்படியெல்லாம் பேசுகிறார் என்றே தோன்றியது.படத்தின் பாடல்கள் வெளியாகும் என ஆவலோடு காத்திருந்தால், சில நாட்கள் கழித்து நாளிதழில் தமிழ் M.A படம் பற்றி வேறு ஒரு செய்தி வந்து இருந்தது. படத்தின் ஆடியோ நிறுவனத்துக்கும்,தயாரிப்பிற்கும் ஏதோ பிரச்னை என ஆரம்பித்து,ஆடியோ வெளியாவதில் தாமதம் என இருந்தது.ஆனால், போராட்டத்தில் பங்குபெற்றது நாயகன் ஜீவா அல்ல தனுஷ். மறுமுறை போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டேன். யுவனுக்கு ஆதரவாக தனுஷ் போராடியதாக செய்திக்குறிப்பு சொன்னது

படம் வெளியானது. படத்தின் போஸ்டர்களில் நாயகன் பிரபாகர் எழுதியதாக கவிதைகள் பொறிக்கப்பட்டு இருக்கும்.அப்போது இருந்த என்னுடைய மொபைலின் மெமரி 20 MB.அது பெருந்தன்மையுடன் கட் சாங்ஸ் வைத்துக்கொள்ள அனுமதிக்கும். அதில் 'உனக்காத்தானே'வும், 'பறவையே எங்கு இருக்கிறாய்'ம் இடம்பிடித்தன .படத்தைப் பார்க்க யாரை அழைத்தாலும், அடப்போடா என்கிற ரீதியில் தான் பதில் கிடைத்தது.  பெரும்பாடு பட்டு சென்று பார்க்கும் படங்கள், பெரிதும் ஏமாற்றத்தைத் தான் அளிக்கும்.ஆனால் கற்றது தமிழ் சற்றே மாறுபட்டது. பல வசனங்கள் பிடித்துப்போக ஆரம்பித்தன. பாடல்கள் காலர் ட்யூன் ஆகின. ஆனந்தியும், பிரபாகரும் வாழ்வில் சுழலும் கதாப்பாத்திரங்கள் ஆகிப்போனார்கள்.

எப்படியும் எல்லோரும் கேட்டு இருக்கும் பாடல் தான், பறவையே எங்கு இருக்கிறாய். மகன் யுவன் இசையில் ராஜா பாடிய டாப்-3 பாடல்களில் கண்டிப்பாக 'பறவையே எங்கு இருக்கிறாய்' இடம்பெறும். மெமரி கார்டுடன் மொபைல் வாங்கியவுடன் செய்த முதல் வேலை, 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடலை ஹெட்செட்டில் கேட்டது தான். காரணம், 'நீ என்ன தேடி இருப்பேன்னு எனக்குத் தெரியும். நானும் அம்மாவும் இங்க மஹாராஷ்ட்ரால தூரத்து மாமா வீட்டுல இருக்கோம்' என ஆரம்பிக்கும் பாடலில் இருவரது குரலும் வரும்.ஹெட்செட்டை ஒரு காதில் மட்டும் வைத்துக் கேட்டால், பிரபாகர் குரல் மட்டும் தான் கேட்கும்.பின் மீண்டும் prev பட்டனை அழுத்தி, மீண்டும் வலதுபுற ஹெட்செட்டை வைத்தால், அப்போது ஆனந்தியின் குரல் ஒலிக்கும்.  படத்தில் ஆனந்தி தனக்கு வைக்கத் தெரிந்தது சுடுதண்ணி மட்டும் தான் என சொல்லி ஒரு டம்ளர் சுடு தண்ணீரை பிரபாகருக்குக் கொடுப்பாள்.அது நாக்கைப் பதம் பார்த்தாலும், பிரபாகரின் பிடித்ததாக  அது மாறிவிடும்.அதே அளவிற்கான சுவையைத் தான் அந்த ஒற்றை ஹெட்செட்டுக்கள் கொடுக்கும். காதலியுடன் அமைதியான ஒரு தருணத்தில் ஆண் குரல் ஹெட்செட்டை அவளிடம் கொடுத்துவிட்டு, பெண் குரல் ஹெட்செட்டை நீங்கள் வாங்கி கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் குரலுக்கு முன்வரும் வெர்ஷனை மட்டும் பலமுறை கேட்பீர்கள். 

ஒரு படைப்பாளியின் படைப்புகள் இருக்கும் வரை அவன் உயிரோடு தான் இருப்பான்.நண்பன் ராமுக்கு , முத்துக்குமார் முதல் படத்தில் இருந்தே ஹிட்களை மட்டுமே வழங்கி இருக்கிறார். 'உனக்காகத்தானே', ' பறவையே எங்கு இருக்கிறாய், ' இன்னும் ஓர் இரவு' என ஹிட் பல இருந்தாலும் வரிகளாக்காகவும், இசைக்காகவும் பலமுறை கேட்டு ரசித்த பாடல் ' பற பற பற பட்டாம்பூச்சி ' தான். படத்தில் முழுக்க முழுக்க பாஸிட்டிவ் எனர்ஜியை தரும் பாடல் . தன் குடும்பம் முழுவதையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டு நிற்கும் பிரபாகருக்கு,  தமிழ் அய்யாவாக வரும் அழகம் பெருமாள் மூலம் புதுப்பிடிப்பு ஒன்று கிடைக்கும். 

"கண்ணீரை துடைக்கும் விரலுக்கே மனம் ஏங்கிக் கிடக்குதே

தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கே இலை படகு ஆனதே

ஏதோ ஏதோர் உணர்ச்சி எரி தழலில் மழையின் குளிர்ச்சி

கடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பமாகுதே "

என ஒவ்வொரு வரியிலும், சிக்ஸர் அடித்து இருப்பார் நா.முத்துகுமார். மிஸ் யூ சார்!

தொலைக்காட்சியில் கற்றது தமிழ் படம் பார்க்கும் போதெல்லாம், வரும் வசவு ஒன்றுதான். "இந்த மாதிரி சைக்கோ படம் எல்லாம் பார்த்தா, புத்தி இப்படித்தான் போகும்" என்பார்கள்.. நண்பன் ஒருவன் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அவனின் புரிதல்  வேற லெவலில் இருக்கும். "ஹீரோ மொதக் காட்சியில இருந்து சந்திக்கிற எல்லோரும் செத்துப் போயிடறாங்க. அஞ்சலியாவது உயிரோட இருந்து இருப்பா, ஆனா இவன் போய் சந்திச்சு அவளையும்  கடைசில சாகடிச்சுடுவான்." என்பான். அவன் சொல்லும் போதெல்லாம் இந்த பாடல் தான் ஞாபகம் வரும்.  

"வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி

வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன்

குறுக்குவெட்டு தோற்றத்தில்

வலியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன்

இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம்

எங்கு நோக்கிலும் அம்மணம்

ஏற்று கொள்ளுமா எம் மனம் " 

படத்தில் இந்தப் பாடல் வராது.இயக்குனர் ராம், அவரது யூ-ட்யூப் தளத்தில் படத்தின் காட்சிகளை வைத்து, இந்தப் பாடலுக்கு ஒளி வடிவம் கொடுத்து இருப்பார். 

படம் முழுக்க ஆனந்தி அழுதுகொண்டே தான் இருப்பார்.அவரது தந்தை பற்றிய உண்மை தெரியவரும் போதும்; அந்த இடத்தில் பிரபாகரை சந்திக்கும் போதும்; அவரின் துன்பங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். இறுதியில் போலீஸ் துரத்த, ஆனந்தியும், பிரபாகரும், சிறுவயதில் அவர்களது செல்ல நாய் டோனி இறந்த அதே ரயில் குகைக்குள் செல்வர்.ஆனந்திக்கு அனைத்துமே தெரியும். ஆனால், பிரபாகரனை பார்க்கும் போதெல்லாம், அவள் சிரித்துக்கொண்டே தான் இருப்பாள். எல்லாம் முடிந்த பின் ,இரு குழந்தைகள் சிரிக்கும் சப்தத்துடன் ராம் பேசத் தொடங்குவார். யுவன் இசை,அஞ்சலியின் சிரிப்பு, ராமின் குரல் என அது ஒரு மென்சோக மெலடி.எல்லாம் கடந்த பின், மரணம் கூட சுகம் தான்.

இப்போது பார்க்கும் போது, BPO காட்சிகள் எல்லாம் வேடிக்கையாக தோன்றும்.ஆனால், தமிழ் படித்து, மாறி வரும் சூழலில் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல், வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்ட ஒருவனின் வலி தான் கற்றது தமிழ். அந்த வாழ்க்கையை திரையில் மட்டுமே பார்ப்பவர்களுக்கு, அது புரிவது கடினமே. 

சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராம் இவ்வாறாக பேசினார்.'காத்திருத்தலே தவம்' சொல்லி என் படம் மட்டும் அல்லாது, என உதவி இயக்குனர்கள் படங்கள் கூட வெளியாகமல் இருக்கிறது என்றார்.ராமின் படங்கள் என்றாலே 'தள்ளிப்போகாதே ' மோடில் தான் ரிலீஸ் ஆகும். தரமணி படத்தின் நாயகி ஆண்ட்ரியா அந்தப் படத்திற்காக ஒரு பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார்.வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. படத்தின் டீசர் வெளியாகி  ஆறு மாதம் ஆகப்போகிறது. படம் என்று வெளியாகும் என்றே தெரியவில்லை. ராமின் தரமணி படத்திற்காகவும், பேரன்பு படத்திற்காகவும் காத்திருப்போம். 

ஆம். ராம் சொல்வது போல 'காத்திருத்தலே தவம்' 

-கார்த்தி