Published:Updated:

மோகன்லாலின் கமர்ஷியல் உறுமல்! #புலி முருகன் - படம் எப்படி?

மோகன்லாலின் கமர்ஷியல் உறுமல்! #புலி முருகன் - படம் எப்படி?
மோகன்லாலின் கமர்ஷியல் உறுமல்! #புலி முருகன் - படம் எப்படி?

’வாவ்... வாட்ட மேன்’ சொல்ல வைப்பதில் மோகன் லால் ஒரு கில்லி. இதற்கு முன் நடித்த ஜனதா கேரேஜ் (தெலுங்கு) போன்ற கமர்ஷியல் படமோ, ஒப்பம் போன்ற பரிசோதனை முயற்சியோ கதாப்பாத்திரத்துக்கு தன்னாலான உச்சபட்ச நேர்மை செய்பவர். அப்படிப்பட்ட மாஸ் பெர்ஃபாமரும், மசாலா இயக்குநரும் இணைந்திருக்கும் படம் புலிமுருகன்.  

காட்டை ஒட்டிய கிராமம் புலியூர். அங்கு அடிக்கடி புலி, பொதுமக்களை வேட்டையாடும் அபாயம் இருக்கிறது. ஒரு நாள் முருகனின் (மோகன் லால்) தந்தையை புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே தாயை இழந்த முருகன் தந்தையையும் இழந்ததால் தன் தம்பியை ஊர் மக்களிடம் கொடுத்துவிட்டு மாமாவுடன் (லால்) தந்தையைக் கொன்ற புலியை வேட்டையாடப் போகிறான். புலியைக் கொன்றதால் முருகன் அன்றிலிருந்து புலிமுருகன் ஆகிறான்.  பின் எப்போதெல்லாம் புலி வந்து வாலாட்டுகிறதோ அதை வேட்டையாடி ஊரைப் பாதுகாக்கிறார் மோகன்லால். ஒரு நாள் மோகன்லாலுடைய தம்பியின் நண்பர்கள் பாலா, நோபி ஒரு உதவி கேட்டு வருகிறார்கள். அந்த உதவியை செய்யும் மோகன் லால் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். குடும்பத்தோடு கிளம்பி வாருங்கள் உங்களை டாடி கிரிஜா (ஜெகபதி பாபு) காப்பாற்றுவார் என அழைத்துச் செல்கிறார்கள் பாலாவும், நோபியும். குடும்பத்துடன் ஜெகபதிபாபுவிடம் அடைக்களம் புகும் மோகன் லால் ஒருகட்டத்தில் ஜெகபதிபாபுவையே எதிர்ர்க்க நேர்கிறது. அது எதனால்? பின் என்ன ஆனது? எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார்? இது தான் ஆக்‌ஷன் த்ரில்லராக மோகன் லால் மாஸ் காட்டும் புலிமுருகன் கதை.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் மோகன் லால். 56 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் அசத்துகிறார். கமலினியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்து அவர் மார்கெட்டிங் மேனேஜர் சீட்டில் அமரப் போகும் போது கண் கலங்கியவாரு வெளியேறுவது, புலி வேட்டையில் கண்ணிலேயே காட்டும் ஆக்ரோஷம் என லால் ஏட்டா அடிபொலியானு. 

அடுத்து குறிப்பிட வேண்டியது சண்டைபயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். லெஃப்ட் கையில் புலி வாலைப் பிடித்து தலையை சுற்றித் தூக்கி எறிவது போல் எந்த புரளி வித்தையும் காட்டாமல் நியாயமாக ஒரு புலி வேட்டை எப்படி இருக்கும் என்பதற்கு ஏற்றபடி அமைத்திருக்கும் சண்டையும் அதேற்கேற்ற கிராஃபிக்ஸும் கச்சிதம். க்ளைமாக்ஸ் ஃபைட்டும் அதிரடி. பூங்காய் சசியாய் சுராஜ் செய்யும் காமெடிகள் பட்டாசு தீபாவளிக்கு நடுவே கிடைக்கும் குலோப் ஜாமூன்கள். லால், கமலினி, வில்லன்கள் ஜெகபதி பாபு, மகரந்த், கிஷோர் கெஸ்ட் ரோலில் வந்து போகும் நமீதா, அந்த கிராஃபிக்ஸ் புலி என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். 

முருகன்... முருகன்... புலி முருகன் என மாஸ் காட்சிகளில் கோபி சுந்தரின் பின்னணி இசை இன்னும் கெத்து கூட்டுகிறது. காடும் காடு சார்ந்த அருவியும், புலிவேட்டையும், லாரி சேசிங்கும் என பல காட்சிகளில் தனித்துத் தெரிகிறது ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு. 

உதய்கிருஷ்ணா திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் இயக்குநர் விசாக்கின் உழைப்புக்கு எக்ஸ்ட்ரா பலன் கிடைத்திருக்கும். அத்தாம் பெரிய புலிய இவரு தனியா வேட்டையாடுவாறா? இவர் என்ன சூப்பர் ஹீரோவா? நேர்மையான ஆளு ஜெகபதி பாபுவுக்காக கஞ்சா, சந்தனக் கட்டை எல்லாத்தையும் எதுக்குக் கடத்தித் தர்றாரு? என சில கேள்விகள் கேட்கும் ஏழாம் அறிவைக் எடுத்து ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு நல்ல மாஸ் படம் பார்த்த திருப்தி கிடைக்கும். 

பின் செல்ல