Published:Updated:

"சொப்பன சுந்தரி" கார் இப்போது யாரிடம்???

  "சொப்பன சுந்தரி" கார் இப்போது யாரிடம்???
"சொப்பன சுந்தரி" கார் இப்போது யாரிடம்???

" இந்தியாவிலேயே... ஏன் வேர்ல்ட்டுலேயே கார் வச்சிருக்குற ஒரே கரகாட்ட கோஷ்டினா அது நாம தான்..."... வேர்ல்ட் ஃபேமஸான இந்த கரகாட்டக்காரன் வசனத்தை நினைச்சா கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்ததா நம்ம கண்ணுக்கு முன்னாடி நிக்குறது... அந்த சிகப்பு கலர் நீளமான  கார் தான். ஹாலிவுட்டின் அப்படியான சில படங்கள்... சில கார்கள்... :

ஜேம்ஸ் பாண்ட் - ஆஸ்டன் மார்ட்டின் DB 5 :

"கார்"னா... ஜேம்ஸ் பாண்ட் தான்... 1964யில் வெளியான "கோல்ட் ஃபிங்கர்" படத்தில் தான் முதன்முதலில் ஆஸ்டன் மார்டின் கார் உபயோகப்படுத்தப்பட்டது. ஆஸ்ட்டன் மார்டின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டேவிட் பிரவுனை பெருமைப்படுத்தும் வகையில் DB வரிசையிலான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் வருவது DB5 . 4000 சிசி எஞ்சின் திறன்... 282 பிஎச்பி... 1502 கிலோ... அதிகபட்ச வேகம் 230 கிமீ... என அந்தக் காலத்தின் சூப்பர் ஹீரோ DB5. 

கோல்ட் பிங்கரில் உபயோகப்படுத்தப்பட்ட வண்டியை ஆஸ்டன் மார்டின் நிறுவனம் ஏலத்தில் விற்றது. பலரின் கை மாறி... 1997யில் ஃப்ளோரிடாவில் அது திருடு போனது. அதன்பின், இன்று வரை அந்த கார் எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை. 

ஹெர்பி - ஃபோக்ஸ் வேகன் "பீட்டல்" :

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரின் உத்தரவின் பேரில்... ஃபோக்ஸ் வேகன் தயாரித்த கார் தான் "பீட்டல்". 2 கதவுகள், 4 இருக்கைகள் என சின்ன வண்டி தான். அனைத்து மக்களும் காரில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் ஹிட்லர் இதை உருவாக்கச் சொல்லியிருக்கிறார். இதை வடிவமைத்தவர் ஃபெர்டினான்ட் பார்ஷே... இவர் தான் பார்ஷே கார் நிறுவனத்தின் நிறுவனர். முதலில் ஃபோக்ஸ் வேகன் 1200, 1300, 1400 என்று எண்களையே பெயராகக் கொண்டு வந்தது. பின்பு, வண்டி பார்ப்பதற்கு "வண்டு" போல் இருக்கவே... மக்களால் "பீட்டல்" என்று செல்லமாக அழைக்கப்பட்டு... பின்பு, அந்தப் பெயரையே நிரந்தரமாகக் கொண்டது. 

1968யில் வெளியான "லவ் பக்" மற்றும் 2005யில் வெளியான "ஹெர்பி: ஃபுல்லி லோடட்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே வரும்..."பீட்டல்".

ஜுராசிக் பார்க் - ஃபோர்ட் எக்ஸ்ப்ளோரர் XLT :

மைக்கேல் க்ரீச்டன் எழுதிய "ஜுராசிக் பார்க்" நாவலில் டொயட்டோ வண்டிகள் உபயோகப்படுத்துவது போன்று தான் எழுதியிருந்தார். ஆனால், நாவல் படமாக்கப்படுவது தெரிந்ததும் ஃபோர்ட் நிறுவனம் தானாக முன்வந்து தன்னுடைய புதிய வண்டியான எக்ஸ்ப்ளோரரை கொடுத்தது. இந்தப் படத்திற்காக மொத்தம் 7 வண்டிகள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்தப் படத்தில் இடம் பெற்ற பிறகு எக்ஸ்ப்ளோரரின் விற்பனை அதிகரித்ததாக ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்தது. 

கான் இன் சிக்ஸ்டி செகன்ட்ஸ் - ஷெல்பி ஃபோர்ட் மஸ்தாங் GT - 500:

தம்பி பிணையக்கைதியாக... 72 மணிநேரங்களில்... 50 கார்களை திருட வேண்டும். இப்படி ஒரு கதையில் ஹீரோவுக்கு நிகராக படத்தில் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது மஸ்தாங் GT 500. 5.7 லிட்டர், V8 கோப்ரா ஜெட் எஞ்ஜின் என அசத்தலான இந்த வண்டியை படத்தில் செல்லமாக "எலியனர்" என்றழைப்பார்கள். 

ட்ரான்ஸ்பார்மர்ஸ் - செவர்லே கேமரோ : 

அந்த நீளமான... மஞ்சள் நிறம்... நடுவில் இரண்டு கருப்பு கோடு... அதே தான். ட்ரான்ஸ்பார்மர்ஸ் படத்தின் "பம்பிள்பீ", செவர்லே கேமரோ. 1970 களில் போர்ட் மஸ்தாங் அமெரிக்காவின் தனிக்காட்டு ராஜாவாக சுற்றிக் கொண்டிருந்தது. அதை அடக்க செவர்லேவின் அறிமுகம் தான் கேமரோ. ஆரம்ப காலகட்டத்தில் செவர்லே தன் கார்களின் பெயர் "C" யைக் கொண்டு தொடங்க வேண்டுமென்று மெனெக்கெடும். ஆனால், இந்த வண்டிக்கான சரியான பெயர் அமையவேயில்லை. அப்பொழுது, செவர்லேவின் விற்பனை அதிகாரி ஒருவருக்கு ப்ரெஞ்ச் டிக்‌ஷனரியைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது "கேமரோ" என்ற வார்த்தைக் கண்ணில் பட்டிருக்கிறது. அதற்கு சகா, நண்பன் என்ற பொருள். நன்றாக இருக்கிறதே என்று... செவர்லே தன் காருக்கு அதே பெயரை சூட்டியது. 

தி இத்தாலியன் ஜாப் - மினி கூப்பர்:

  தங்கக் கட்டிகளைக் கொள்ளையடிக்கும் கதை. 1969யில் வெளியான இத்தாலியன் ஜாப் படத்தில் பிரிட்டீஷ் மோட்டார் கார்ப்பரேஷன்(பிம்சி) தயாரித்த மினி கூப்பர் கார்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தப் படத்திற்குப் பிறகு, பலரும் விரும்பும் காராக மினி மாறியது. 1994யில் அந்த நிறுவனத்தை பி.எம்.டபிள்யூ நிறுவனம் கைப்பற்றியது. 2003யில் பயன்படுத்தப்பட்டது அந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தயரிப்பு தான். 

தி ஃபாஸ்ட் அன்ட் தி ஃப்யூரியஸ் - டாட்ஜ் சார்ஜர்:

ஃபாஸ் அன்ட் தி ஃப்யூரியஸ் வரிசைப் படங்களில் எத்தனையோ கார்கள் வந்தாலும் ஹீரோ டொரிட்டோவின் ஃபேவரைட் 1970 டாட்ஜ் சார்ஜர் தான். அமெரிக்கத் தயாரிப்பான சார்ஜர் 5.17 மீட்டர் நீளம், 1,93 மீட்டர் அகலம் என அசத்தலாய் இருக்கும். இதன் இஞ்சின் உருமும் சத்ததிற்காகவே உலகில் பல கோடி கார் ரசிகர்கள் உண்டு...

 இவ்வளவு விஷயங்களையும் சொல்லிட்டு நம்ம ஊர் வண்டிய பற்றி சொல்லாமல் இருந்தா எப்படி???...

கரகாட்டக்காரன் படத்தில் வருவது  செவர்லே தயாரிப்பான "இம்பாலா", 1960 மாடல். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு "மான்" வகை தான் "இம்பாலா". அது துள்ளி குதித்து ஓடும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ... அதை அடிப்படையாகக் கொண்டு வண்டி வடிவமைக்கப்பட்டது. இம்பாலா கார் வாங்க விரும்புபவர்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்குப் போய் வாங்கலாம்... இன்னும் "இம்பாலா" அங்கு விற்பனையில் இருக்கிறது. 

சொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்காங்கறது தெரியலைன்னாலும் பரவாயில்ல... இப்ப இந்த கார யாரு வச்சிருக்காங்க???

-இரா.கலைச்செல்வன்