Published:Updated:

தடைகளைத் தகர்த்து எறிந்த சதுரங்கராணி. #QueenOfKatwe படம் எப்படி?

Vikatan Correspondent
தடைகளைத் தகர்த்து எறிந்த சதுரங்கராணி. #QueenOfKatwe படம் எப்படி?
தடைகளைத் தகர்த்து எறிந்த சதுரங்கராணி. #QueenOfKatwe படம் எப்படி?

ஃபீல் குட்' படங்கள் எல்லாம் எப்போதாவது தான் ஹாலிவுட்டில் வெளியாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி வெளியாகியிருக்கும் ஒரு படம் Queen of Katwe . திரையரங்கில் இருந்த அனைவரும் படம் முடிந்ததும், எழுந்து நின்று கை தட்டியது, இதற்கு ஒரு சான்று. உகண்டாவின் கம்பாலாவில் இருக்கும் கட்வே என்னும்  சேரியில் வசிக்கிறாள் பியோனா முடேசி. பியோனா எப்படி, அவருக்கு இருக்கும் தடைகளை வென்று சதுரங்கத்தில் வென்றாள் என்பதே 'Queen of Katwe' திரைப்படம். 

பியோனா முடேசியையும், பிற குழந்தைகளையும் சேரியில் உணவு விற்று காப்பாற்றி வருகிறார் அவர்களது தாய் நக்கு ஹாரியட். பியோனாவின் தம்பிக்கு ஒரு விபத்தில் அடிபட, அங்கு இருந்து மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மறுநாள் காலை, காயம் குணமாகாத சூழலிலும் அங்கு இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறார்கள். 

சுத்தமாகவே பணம் இல்லை என்னும் நிலை.பியோனாவின் தாய் நக்கு ஹரியட், அவளிடம் இருக்கும் விலை உயர்ந்த ஆடை ஒன்றை கடைவீதிக்கு விற்க செல்கிறாள். இவளது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கொண்ட கடைக்காரன், இவளை இரவு உணவுக்கு அழைக்கிறான். ஆடையின் விலை 12,000 ஷில்லிங் என்கிறான். 15,000 ஷில்லிங் என எனக்கு கேட்டது என செயற்கையாக சிரித்துக்கொண்டே விலையை ஏற்றப் பார்க்கிறாள். இரவு உணவுக்கு வந்தால், 1,00,000 தருகிறேன் என்கிறான். ஆசையோடு, அவனருகே நெருங்கி வந்து , 12,000 ஷில்லிங் போதும் என்கிறாள்.

பெரும்பாலும்,பயோகிராஃபி படங்கள் அந்த கதாப்பாத்திரத்தை சுற்றியே நிகழும். முதன்மை கதாப்பாத்திரத்தின் பிளஸ் பாயின்ட்ஸ்களை மட்டுமே வைத்து  எடுத்து இருப்பார்கள். இயக்குனர் மீரா நாயர் இந்த இடத்தில்தான் வேறுபட்டு நிற்கிறார். தனது வீடு மிகவும் சிறியதாக இருக்கிறது என எண்ணும் பியோனா வீட்டில் தங்க மறுக்கிறாள். ஒரு சாம்பியன் பாத்திரம் விளக்க மாட்டாள் என்கிறாள். ஓவர் கான்ஃபிடன்ஸில் ரஷ்யாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டுக்கு செல்லும் பியோனாவுக்கு தோல்வியே மிஞ்சுகிறது. அங்கு வெடித்து அழுகிறாள். பியோனாவாக அட்டகாசமாக நடித்து இருக்கிறார் புதுமுக நடிகை மடினா நல்வங்கா. 'சுடக்கு' போட்டுக்கொண்டே போட்டிகளில் வெல்வதாகட்டும், அந்த கருப்பு முகத்தில் வெற்றியின் போது அவர் சிரிப்பதாகட்டும், கிளாஸ்.  பியோனாவின் தாய் நக்கு ஹரியட் கதாப்பாத்திரத்தில் ஆஸ்கர் நாயகி லூபிடா நியோங்கோ Lupita Nyong'o அசத்தி இருக்கிறார்.

பியோனாவின் கோச்சாக வரும் ராபர்ட் கடேண்டேவின் பாத்திரத்தில் டேவிட் ஓய்லோவோ.பியோனாவுக்காக ஹரியட்டிடம் வாதாடும் போதும், அவருக்கு கிடைக்கும் நல்ல வேலையை உதறிவிட்டு, சேரி மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லிக்கொடுப்பதாகட்டும், வாவ் பெர்ஃபார்மென்ஸ்

கிரிக்கெட், ஃபுட்பால் பற்றிய படங்களில் ரசிகர்களின் அட்ரீனலினை ஏற்ற வைக்கப்படும் காட்சிகள் போல், செஸ் போட்டிகளில் வைக்க முடியாது.அது சிசிலியன் டிஃபென்ஸா, இல்லை ஃபிரென்ச் டிஃபென்சா போன்றவற்றையெல்லாம் உற்றுப்பார்த்துத் தான் கணிக்க முடியும். அவ்வளவு உற்று நோக்கும் ரசிகர்களும் குறைவு.செஸ் சம்பந்தமான காட்சிகளில் எல்லாம், ஓப்பனிங், மிடில் கேம், எண்ட் கேம் என எடிட்டிங்கில் சாமர்த்தியமாக கடத்துகிறார் பேரி பிரவுன்.

டிம் க்ராதர்ஸின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும், பல காட்சிகளை உணர்வுப்பூர்வமாக நிகழ்த்தி இருக்கிறார். உகண்டாவில் வாழ்ந்தது மீரா நாயருக்கு பல இடங்களில் உதவி இருக்கிறது. முழுக்க முழுக்க அங்கு இருக்கும் மக்களைப்பயன்படுத்தி எடுத்து இருக்கிறார்.கடந்த சில ஆண்டுகளில் வெளியான மீரா நாயரின் படைப்புகளில் இது தான் பெஸ்ட்.

படத்தின் டிரெய்லரைக் காண

 ஒரு அட்டகாசமான ஃபீல் குட் படம்.டோன்ட் மிஸ்!