Published:Updated:

மனோரமா... தமிழ் சினிமாவின் தவப்புதல்வி!

Vikatan Correspondent
மனோரமா... தமிழ் சினிமாவின் தவப்புதல்வி!
மனோரமா... தமிழ் சினிமாவின் தவப்புதல்வி!

மனோரமா... மூன்று தலைமுறைகளாக தமிழ் திரையுலகில் மகராசியாக இருந்த நடிகை. கதாநாயகி, நகைச்சுவை நடிகை, குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் என்று நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் மிளிர்ந்தவர். சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த ஆச்சி, 1,200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை புரிந்தவர். தன் திரைச் சித்திரங்களால் நம்மை ரசித்துச் சிரிக்க வைக்கும் இவர் வாழ்க்கையின் ஆரம்பப்புள்ளி, துயரமானது.

 மனோரமாவின் இயற்பெயர், கோபிசாந்தா.  தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை காசி கிளாக்குடையார், தன் தாய் ராமாமிர்தத்தின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்துகொண்டு, அவரை விட்டுப் பிரிந்தார். ராமாமிர்தம், அப்போது 10 மாதக் குழந்தையான கோபிசாந்தாவைத் தூக்கிக்கொண்டு  காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்குக் குடிபெயர்ந்தார். வீட்டுவேலை செய்து  கோபிசாந்தாவைப்  படிக்கவைத்தார் அவர் அம்மா. ஒரு கட்டத்தில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போக, கோபிசாந்தாவின் படிப்பு நின்றுபோனது.

தனது 12-வது வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் கோபிசாந்தா. நாடக இயக்குநர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு 'மனோரமா' என்று பெயர் சூட்டினர். மனோரமா நன்றாகப் பாடக்கூடியவர். செட்டிநாடு பகுதிகளில் நாடகம் போடும்போது,  ஆண்கள்தான் பெண் வேஷம் கட்டி நடிப்பார்கள். அதைப் பார்ப்பதற்கென்றே  பலர் வருவார்கள்.  மேடைக்குப் பின்னால் இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் மட்டும்தான் அப்போது பெண்களைப் பயன்படுத்தினார்கள்.

'அந்தமான் கைதி’ என்ற  நாடகத்தில்  மேடைக்குப் பின்னால்  இருந்து மனோரமா  பாடினார். 'நல்லா பாடுதே இந்தப் பொண்ணு!’ என்று  பலரும் பாராட்ட, நிறைய வாய்ப்புகள் வந்தன அவருக்கு.  அப்படியே மேடை ஏறி நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 'யார் மகன்?’ என்கிற  நாடகத்தில்  மனோரமா  கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த நாடகத்துக்குத் தலைமையேற்றவர், இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். நாடகத்தில் மனோரமாவுடன் நடித்த ஒரு நடிகைக்கு, எஸ்.பாலசந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்னார் ஒருவர். அப்போது அவர், 'நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இதில் ஹீரோயினாக நடித்த பெண்ணுக்குத்தான் கொடுப்பேன்’ என்று சொல்லி மனோரமாவை வெளிப்படையாகப் பாராட்டினார். அந்த முதல் பாராட்டுதான், ஆச்சியின் சினிமா பயணத்துக்கான ஆரம்பம்.

ஆரம்பத்தில், ஒரு நாடகத்துக்கு 10 ரூபாய்தான் சம்பளம். அது 40 ரூபாயாக உயர்ந்த நேரத்தில், புதுக்கோட்டையில் பி.ஏ.குமார் என்பவர் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க முன்வந்தார். அவர்தான்...  இயக்குநர். எஸ்.எஸ்.ராஜேந்திரன். அந்தப் படத்தில் நடிப்பதற்காக,  சில கலைஞர்கள் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து ரிகர்சல் பார்த்தனர். அப்போது,  15 வயதுப் பெண்ணான மனோரமாவுக்கு மேக்கப் போட்டு எஸ்.எஸ். ராஜேந்திரன் எடுத்த புகைப்படம்தான், இவரது முதல் புகைப்படம்.

 திடீரென எஸ்.எஸ். ஆர் வீட்டு மாடியில் இருந்த குடிசை தீப்பிடிக்க, அதை அவர் அபசகுனமாக நினைத்து, 'நான் சினிமாவே எடுக்கலை. நீங்க எல்லாம் கிளம்புங்க’ என்று அனுப்பி வைத்துவிட்டார். சில  வருடங்கள் கழித்து  மனோரமாவை சென்னைக்கு வரவழைத்து, கலைஞர் எழுதிய 'மணிமகுடம்’ நாடகத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் எஸ்.எஸ். ஆர்.

சென்னைக்கு மனோரமா நடிக்கக் கிளம்பியபோது, அவரை கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக காலம் நிறுத்தியிருந்தது. கைக்குழந்தையாக இருந்த அவர் மகன் பூபதியைத் தூக்கிக்கொண்டுதான் மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார். அப்போது, கூடப் பிறந்த அண்ணனைப்போல இருந்து உதவி பல நாடகங்களிலும் நடிக்கவைத்தவர், எஸ்.எஸ்.ஆர்தான். நாடக வாய்ப்புகள் தேடி வந்தன.

பேரறிஞர் அண்ணாவுக்கு ஜோடியாகவும், 'உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியாகவும் நடித்தார் ஆச்சி.  'மணிமகுடம்’ நாடகத்தில் இவரது  நடிப்பைப் பார்த்த கவியரசர்  கண்ணதாசன், 'மாலையிட்டமங்கை’ படத்தில் நடிக்கச் சொன்னார். ஆனால், அது ஹீரோயின் பாத்திரம் இல்லை, காமெடி ரோல். 'எனக்கு நகைச்சுவையா நடிக்கத் தெரியாது. நான் இதுவரை நாடகத்தில் ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன்’ என்று மனோரமா சொன்னதற்கு,  'நீ சினிமாவுல ஹீரோயினா நடிச்சா ரெண்டு, மூணு வருஷம்தான் ஃபீல்டில் இருக்க முடியும். ஆனா, காமெடி நடிகையா நடிச்சா, ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருக்கலாம்’ என்றார். இதைப் பல சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்த்து கண்ணதாசனின் கணிப்பை வியந்து  நெகிழ்ந்திருக்கிறார் ஆச்சி. அதேபோல, தன் அம்மா இறந்தபோது அண்ணனாக இருந்து உதவிய நடிகர் திலகத்தின் மீதும் அளவில்லாத அன்பும் மரியாதையும் கொண்டவர் ஆச்சி.

ஆண்களின் அதிகாரமான தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிக்கைக்கான தனித்த இடத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவர் மனோரமா. 'கம்முனு கெட' என்று பொரிந்த 'கண்ணம்மா'வையும், 'பாட்டி சொல்லைத் தட்டாதே' என்று பாடி ஆடிய துள்ளலையும், 'நடிகன்' திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்பூவைவிட ஸ்கோர் செய்த கலகல காமெடியையும், 'சின்னக் கவுண்டரி'ல் சிரித்துப் பயமுறுத்திய ஆத்தாவையும் மறக்க முடியுமா?! மனோரமா... தமிழ் சினிமாவின் பாக்கியம்.

 பத்ம ஸ்ரீ(2002), தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை(புதிய பாதை - 1988), தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையார் விருது(2015) உட்பட பல விருதுகள் பெற்ற மனோரமா,  வாழ்க்கையில் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்தவர். தன் வேதனைகளை தன்னுள் புதைத்து, தன் கதாபாத்திரங்களில் நகைச்சுவை தழும்பத் தந்த கலைஞர். தமிழ் திரையுலகிலும் ரசிகர் மனங்களிலும் அவருக்கான இடம்... நிரந்தரம்!

- கே.ஆர்.ராஜமாணிக்கம்