Published:Updated:

சீரியல்ல நடிக்கிறது அவ்ளோ ஈசி இல்ல டூட்!

சீரியல்ல நடிக்கிறது அவ்ளோ ஈசி இல்ல டூட்!
சீரியல்ல நடிக்கிறது அவ்ளோ ஈசி இல்ல டூட்!

இப்போதெல்லாம் தமிழக மருமகள்களின் கிராமர் சீரியல் நடிகைகளை வைத்தே வரையறுக்கப்படுகின்றன. ’குடும்பம்’ காயத்ரியில் தொடங்கி மெட்டி ஒலி வழி வந்து தெய்வமகளை அடைந்திருக்கிறது தமிழ் மெகா சீரியல்கள். உண்மையில், ஒரு சீரியல்  நடிகையாக மிளிர பல ஸ்பெஷல் விஷயங்கள் தேவை. உங்களுக்காக அந்த குட்டி லிஸ்ட்...


பக்கத்து வீட்டுப் பொண்ணு:

முதலில் சீரியலில்  ஹீரோயினுக்குக் கண்டிப்பாக நம்முடைய பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, மாடியில் வசிக்கும் பெண்ணின் சாயல் அவசியம். அந்தப் பெண் மலையாளமோ, இந்தியோ, கன்னடமோ... என்ன மொழி பேசும் பெண்குட்டியாக இருந்தாலும் தமிழ் சீரியலில் நடிக்க முக்கியமான பாயிண்ட் நம்பர்-1 குவாலிபிகேஷன் ‘பக்கத்து வீட்டுப் பொண்ணு லுக்’. 

கண்ணே கலங்குதய்யா:

தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் உறவுகளும், அவர்களுக்கிடையேயான சச்சரவுகளே கதையாக இருக்கும். அதனால் கிளிசரின் போடாமலேயே அழக்கூடிய திறமை சீரியல் நடிகர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். கிளிசரின் போட்டாலோ, கண்களில் இருந்து அருவியாகக் கண்ணீர் கொட்ட வேண்டும். ரெடி ஸ்டார்ட்..ஆக்‌ஷன் என்றதும் கண்ணீர் வர வைக்கும் மேஜிக் மஸ்ட். 

நான் அவன்/அவள் இல்லை:

தமிழ் சீரியல் வில்லிகள் நிஜத்தில் ரொம்ப சாப்ட் கேரக்டர்களாக இருப்பார்கள். ஆனால், கேமரா முன்பு நின்றதும் தெறிக்க விட வேண்டும். ”நான் கெட்டவ இல்ல. கேடு கெட்டவ”ன்ற ரேஞ்சுக்கு முகம் மாற வேண்டும்.  ‘இப்படியும் ஒருத்தர் இருப்பாங்களா?’ என்று ரசிகப் பெருமக்கள் தினசரி கரித்துக் கொட்டும் வகையில் வில்லத்தன நடிப்பு இருக்க வேண்டும்.

நான் நல்லவனாயிட்டேன்...நல்லவனாயிட்டேன்:

’குடும்பத்தோட அழிச்சுடுவேன்...எரிச்சுக் கொன்னுடுவேன்’ புரொபஷனல் கில்லர்கள் ரேஞ்சுக்கு சகட்டுமேனிக்கு சவட்டிக் களையும்  வில்லி கேரக்டர்களில் நடிப்பவர்கள், ஒருநாள் டொபுக்கென்று ’அதிரிபுதிரி’ நல்லவர்களாக மாறிவிட வேண்டும். 'எம்ஜியாரும் நான் தான், நம்பியாரும் நான் தான்' மோடிலே தான் எப்போதும் இருக்க வேண்டும். டி.ஆர்.பிக்கு ஏற்றவாறு ரசிகர்களைப் ப்ரைம் டைமில் கட்டிப் போட இந்த அதிரடி சேஞ்ச் ரசிகர்களுக்காக நடந்தே ஆகணும்.

என்ன நேத்து திட்ட வறேன்னு சொன்னீங்க வரல:

சீரியல் ஹீரோ, ஹீரோயின்களாக நடிப்பவர்கள் ஆரத்தி கரைத்து ஊற்றாத குறையாக கொண்டாடப்படும் அதே வேளையில்,  ரசிகர்கள் பொதுஇடங்களில் கேட்கும் கேள்விகளுக்கும், சரியான மொக்கை, வேஸ்ட் என்றெல்லாம் திட்டுபவர்களிடமும் சிரித்துக் கொண்டே அது சும்மா லுலுலாய்க்கு...இதுதான் ஒரிஜினல் என்று பதிலளிக்க வேண்டும்.  சொந்தப் பேரை சீரியல் முடியும்வரை மறந்துவிட வேண்டும். சீரியலுக்கு ஏற்றதுபோல் சுபா, க்ருபா, அபி என்றெல்லாம் விதவிதமான பெயர்கள் கிடைக்கும். சீரியல் முடியும்வரை அதுதான் பெயர். 

வணக்கம்.... டப்பிங் பேசுவது:

தமிழ் தெரியாத மலையாளத்து மயிலாகவோ, கன்னடத்துப் பைங்கிளியாகவோ இருந்துவிட்டாலும் கூட, தமிழ் டயலாக்கிற்கு சரியாக லிப் சிங் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். தாலி பற்றிய சென்டிமெண்ட் டயலாக்கில் லிப் மொமண்ட் சரியாக இல்லையென்றால் காலிதான். டப்பிங்கில் சமாளித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் ஏனோதானோவென்று வாயசைத்து விடக் கூடாது.

இதெல்லாம் போக நிறைய ட்ரெஸ்கள் இருக்கணும். சீரியல்களுக்கு கூடியமட்டும் ஸ்பான்ஸர்கள் கம்மிதான். நெக்ஸ்ட், கண்டினியுட்டி மிஸ் பண்ணக் கூடாது. முதல்நாள் கையை ஓங்கிய ஸ்டைலில் டைரக்டர் கட் சொல்லியிருந்தால், மறுநாள் அதே போஸில் கரெக்டாக நின்று விட வேண்டும். மியூசிக்குக்கு ஏற்றது போல் வசனம் விட்டு, விட்டுப் பேசத் தெரிய வேண்டும். முக்கியமா, மேக்கப் கலையவே கூடாது. இத்தனை கஷ்டகாலத்தையும் தாண்டி, பெர்பார்மன்ஸ் பின்னியெடுக்கணும்.

இப்போ சொல்லுங்க...இனி யாராவது சீரியல்களை வேஸ்ட்னு சொல்வீங்களா?

- பா.விஜயலட்சுமி