Published:Updated:

ரெமோ, றெக்க, தேவிக்கு அடுத்து என்ன? #WeekEndMovies

ரெமோ, றெக்க, தேவிக்கு அடுத்து என்ன? #WeekEndMovies
ரெமோ, றெக்க, தேவிக்கு அடுத்து என்ன? #WeekEndMovies

இந்த வாரம் பாலிவுட் படங்கள் தான் ரிலீஸில் லீடிங். அதிகம் எதிர்பார்ப்புக்குறிய படமான இன்ஃபர்னோவும் ரிலீஸாக இருக்கிறது. என்னென்ன படங்கள், என்னென்ன கதைகள்? வாங்க பார்க்கலாம்.

தமிழ்

அம்மணி:

ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே படங்களுக்குப் பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம். சாலம்மா, அம்மணி என்ற இரு பெண்களைச் சுற்றி நகரும் கதை. சாலம்மா கதாப்பாத்திரத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடிக்க, அம்மணி கதாப்பாத்திரத்தில் சுப்புலக்ஷ்மி நடிக்கிறார் (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் பாட்டி). படத்துக்கு கே இசையமைக்க, இம்ரான் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சிவநாகம்

மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தனை உயிர்த்தெழுப்பி இருக்கிறது நாகராஹவு பட டீம். படத்தை இயக்கியிருப்பது நம்ம அருந்ததி இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. இறந்த விஷ்ணுவர்தனின் 201-வது படம் இது. அவர் இல்லாமல் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பயன்படுத்தி அவரை ரீகிரியேட் செய்திருக்கிறார்கள். பழிவாங்கும் நாகம் தான் படத்தின் ஒன்லைன். தமிழில் சிவநாகம், தெலுங்கில் நாகபரணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டும் வெளிவருகிறது இந்த கன்னட படம்.

இந்தி:

அன்னா: கிசான் பாபுராவ் ஹசாரே:

பாலிவுட்டின் அடுத்த பயோபிக் அன்னா ஹசாரேவை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் 'அன்னா: கிசான் பாபுராவ் ஹசாரே' படம். போராட்டங்களில் அன்னா ஹசாரேவின் தன்னை இணைத்துக் கொண்டதில் ஆரம்பித்து இன்று வரை உள்ள அவரது வாழ்க்கை தான் படத்தின் கதை. படத்தை இயக்கி தானே அன்னா ஹசாரேவாக நடித்திருக்கிறார் ஷஷாங்க். கஜோலின் தங்கை தனிஷா முகெர்ஜி பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பெய்மான் லவ்: (A)

காதலால் ஏமாற்றப்படும் பெண்ணின் ரிவெஞ்ச் தான் 'பெய்மான் லவ்’ படத்தின் ஒன்லைன். பழிவாங்கும் பெண்ணாக சன்னிலியோன் நடித்திருக்கிறார். ஏன்? எதற்கு? எப்படி? என்பது தான் மீதிக் கதை. ராஜீவ் சௌத்ரி இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

ஃபுட்டு: (A)

பனாரஸ் கிராமத்திலிருந்து மும்பைக்கு வரும் இளைஞன் மோகன். நெருக்கடியான அந்த ஊர், வீடுகள் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. திருமணமான சிலநாட்களிலேயே ஒரு பொய் காரணம் சொல்லி அவனைப் பிரிகிறாள் அவன் மனைவி. அது என்ன காரணம்? அதனால் என்ன ஆகிறது? என்பதை நிறைய காமெடி + கிளுகிளுப்புடன் சொல்லுகிறது படம். படத்தை இயக்கியிருக்கிறார் சுனில் சுப்ரமணி.

மோட்லு பட்லு: கிங் ஆஃப் கிங்ஸ்:

தொலைக்காட்சித் தொடராக வந்த மோட்லு பட்லு இப்போது சினிமாவாகியிருக்கிறது. சரக்கஸில் இருந்து தப்பி வரும் சிங்கத்தை காட்டில் விட வருகிறார்கள் நண்பர்களான மோட்லுவும் பட்லுவும். அங்கு காட்டை அழிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து காட்டைப் பாதுகாக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. அவர்கள் என்ன செய்து காட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம். சுஹஸ் டி. கடவ் இயக்கியிருக்கும் இப்படம் 3டியில் வெளியாகிறது.

ஆங்கிலம்:

இன்ஃபர்னோ:

டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்டு டிமான்ஸ் நாவல்களை படமாக்கிய ரான் ஹாவர்டு அடுத்து இயக்கியிருக்கும் டான் பிரவுனுடைய நாவல் தான் இன்ஃபர்னோ. முதல் இரண்டு படங்களில் நடித்த டாம் ஹேங்க்ஸ் தான் இதிலும் ஹீரோ.  பேராசிரியரான ராஃபர்ட் லேங்டன் (டாம் ஹேங்க்ஸ்), மருத்துவமனையில் முந்தைய சில நாட்களின் ஞாபகங்கள் எதுவும் இன்றி எழுகிறார். திடீரென, நடக்கவிருக்கும் ஒரு பேரழிவு பற்றி தெரியவருகிறது. அதை செயின்னா ப்ரூக்ஸுடன் (ஃபெலிசிட்டி ஜோன்ஸ்) இணைந்து எப்படி தடுக்கிறார் என்பது தான் கதை. படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார்.

கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்: (A)

ரேச்சல் வாட்சன் விவாகரத்தாகி தனியாக வசிக்கும் பெண். தினமும் ரயிலில் செல்லும்போது மேகனைப் பார்க்கிறாள். திடீரென ஒரு நாள் மேகனைக் காணவில்லை. அவளைத் தேட ஆரம்பிக்கிறார் ரேச்சல். ஏதற்காக ரேச்சல் அவளைத் தேடுகிறார்? மேகனுக்கு என்ன ஆனது என்பது தான் 'கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்' கதை. பவுலா ஹாக்கின்ஸ் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டேட் டய்லர். சென்ற வாரமே அமெரிக்காவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது படம்.

தி அக்கௌண்டண்ட்: (A)

பேட்மேன் VS சூப்பர் மேன், சூசைடு ஸ்குவாட் படங்களுக்குப் பிறகு பென் அஃப்லெக் நடித்திருக்கும் படம் தி அக்கௌண்டண்ட். க்ரிஸ்டியன் வுல்ஃப் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் பென். க்ரிஸ்டியன் வுல்ஃப் ஒரு கணித மேதை. பெண்களைவிட எண்களை நேசிக்கும் நபர். சில ஆபத்தான குற்றங்கள் செய்யும் நிறுவனங்களுக்கு கணக்காளராக இருக்கிறார். அவரால் நடக்கும் சில தவறுகள் அதை கண்டுபிடித்து வரும் நபர்கள் என நகரும் த்ரில்லர் தான் படம். இப்படத்தை இயக்கியிருக்கிறார் கேவின்.

- பா.ஜான்ஸன்