Published:Updated:

’காஷ்மோரா’ கார்த்தி நெற்றியில் இருக்கும் டாட்டூ பற்றி தெரியுமா?

’காஷ்மோரா’ கார்த்தி நெற்றியில் இருக்கும் டாட்டூ பற்றி தெரியுமா?
’காஷ்மோரா’ கார்த்தி நெற்றியில் இருக்கும் டாட்டூ பற்றி தெரியுமா?

"காஷ்மோராவில் கோகுல் சாரின் கதைப்படி, ஹீரோ கழுகைச் சின்னமாகக் கொண்ட ராஜாங்கத்தைச் சேர்ந்தவர். அதுக்கு ஹீரோவின் நெத்தியில் கழுகை டாட்டூவா வரையலாம்னு முடிவெடுத்தாங்க. மும்பையிலிருந்தெல்லாம் கைதேர்ந்த கலைஞர்கள் நிறைய பேர் அதற்கான டிசைன்களைக் கொடுத்தாலும் அதிலிருந்து எதுவும் சரியா செட் ஆகவே இல்லை. சரி...நாமளும் ட்ரை பண்ணலாம்னு ஒரு டிசைன் வரைஞ்சு கொடுத்தேன். ஆச்சரியமான விஷயம், அது இயக்குனர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சு போச்சு. அந்த கழுகுதான், ட்ரெய்லரில் கார்த்தி சாரின் நெற்றியில் நீங்க பார்க்கறது..."

சிறியதாக மாடியை ஒட்டிய அறைதான் அவருடையது....உள்ளே நுழையும் வாயிலிலேயே பிரமாண்டமான யானை ஒன்றின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. அருகிலேயே மற்றொரு சுவரில் மீனாட்சியின் கைகைகளில் எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் கிளி தனியாக கிளையொன்றில் அமர்ந்து கொண்டிருக்கிறது அழகோவியமாக.

’இதுதான் என்னோட ஸ்டூடியோ...உயிர்மூச்சு எல்லாம்’ என்று நம்மை வரவேற்கிறார் ஏகாம்பரம். ஓவியர்களுக்கான லுக் கொஞ்சமும் குறையாமல் நீளத்தலைமுடி, தாடி, ஜிப்பா என்று ட்ரைபல் ட்ரெண்டியாக காட்சியளிக்கும் ஏகாம்பரம், ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கும் ‘காஷ்மோரா’ திரைப்படத்தில் கார்த்தியின் கழுகு‘டாட்டூ’வை வடிவமைத்த கலைஞர். 


 

டெக்ஸ்டைல் டிசைனிங்கில் மாஸ்டர் டிகிரி முடித்துள்ள ஏகா, சினிமா வேலைகளுக்கு நடுவே, ‘கலம்காரி வேலைப்பாடுகள்’ என்னும் தலைப்பில் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி ஆய்வுப் படிப்பிலும் பிஸியாக உள்ளார்.

‘என்னுடைய குடும்பம் நெசவுத் தொழில் சார்ந்த கலைஞர்கள் நிறைந்தது. சின்னவயசில் இருந்தே அதனாலேயே துணிகள், ஓவியங்கள் மீதான காதலும் எனக்கு ஜாஸ்தியா இருந்துச்சு. பள்ளிக்கூடம் முடிச்சதுமே பைன் ஆர்ஸ்ட் கல்லூரியில் டெக்ஸ்டைல் டிசைனிங் பிரிவுதான் எடுத்தேன். 

புடவைகள், துணிகளில் வரையக் கூடிய வடிவமைப்புகளை உருவாக்குவதுதான் அங்க முக்கிய பாடம். எக்கச்சக்கமான புதுப்புது டிசைன்களை உருவாக்கி வச்சுருக்கேன். இதுக்கு நடுவில்தான் என்னோட வடிவமைப்புகள் பார்த்துட்டு திரைப்படத்திற்கான வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பிச்சது. சினிமாவிற்கான ஆடை வடிவமைப்புகளையும் கத்துக்கணும்னு காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன் மேடம்கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தேன்’ என்று முன்கதைச் சுருக்கத்தை முடிக்கிறார் ஏகாம்பரம். 


அனு வர்தன் மூலமாக ‘காஷ்மோரா’ குழுவிலும் இணைந்திருக்கிறார் ஏகாம்பரம். ‘காஷ்மோராவில் கார்த்தி சாரோட உடைகளுக்கான வடிவமைப்புகளைச் செய்திருக்கறது பாலிவுட் பேமஸ் காஸ்ட்யூம் டிசைனரான நிஹார் தவான். அவங்களோட சேர்ந்து நானும் ஆடைகள் வடிவமைப்பில் வேலை செய்துருக்கேன். சோழ, சேர, பாண்டிய மன்னர்கள், பழங்கால கோவில் சிலை வடிவமைப்புகள் பற்றியெல்லாம் நான் நிறைய ஆய்வு செய்துட்டு இருக்கறதால ராஜா, ராணி ஆடைகளை உருவாக்கறதுக்கு என்னோட ஐடியாக்களும் உதவிச்சு. 

அந்த நேரத்தில்தான் காஷ்மோராவில் கோகுல் சாரின் கதைப்படி, ஹீரோ கழுகைச் சின்னமாகக் கொண்ட ராஜாங்கத்தைச் சேர்ந்தவர். அதுக்கு ஹீரோவின் நெத்தியில் கழுகை டாட்டூவா வரையலாம்னு முடிவெடுத்தாங்க. மும்பையிலிருந்தெல்லாம் கைதேர்ந்த கலைஞர்கள் நிறைய பேர் அதற்கான டிசைன்களைக் கொடுத்தாலும் அதிலிருந்து எதுவும் சரியா செட் ஆகவே இல்லை. சரி...நாமளும் ட்ரை பண்ணலாம்னு ஒரு டிசைன் வரைஞ்சு கொடுத்தேன். ஆச்சரியமான விஷயம், அது இயக்குனர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சு போச்சு. அந்த கழுகுதான், ட்ரெய்லரில் கார்த்தி சாரின் நெற்றியில் நீங்க பார்க்கறது’ என்று குதூகலிக்கிறார் ஏகா.

காஷ்மோராவில் கார்த்தியின் கழுகு டாட்டூ மட்டுமில்லாமல் படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் நெற்றிப் பொட்டு, தலைப்பாகை ஸ்கெட்ச்களையும் தயாரித்திருக்கிறார் ஏகாம்பரம்.

கழுகு டாட்டூவிற்காக ஸ்பெஷலான இங்க் ஒன்றினை உபயோகித்துள்ளனராம் படக்குழுவினர். ’நெற்றியில் இருக்கற தோல் சுருங்கும் தன்மை கொண்டது. அதனால ஸ்டிக்கர் ஒட்டினா அது ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்காது. ஸ்டென்சில் கட் போட்டாலோ, பழங்கால அரசர்களோட லுக் வராதுனு கோகுல் சார் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். இதுக்கு ஒரே தீர்வு வரையறது மட்டும்தான்னு முடிவு செஞ்சோம். ஸ்கின்னை பாதிக்காத ஸ்பெஷல் டாட்டூ இங்க் வரவழைச்சோம். 

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் 3 மணிநேரம் முன்னாடியே வந்துடுவார் கார்த்தி சார். கிட்டதட்ட 1 மணி நேரத்துக்கு மேல ஆகும் அந்த டாட்டூ வரைஞ்சு முடிக்க. அதுவும் முதல்நாளோட அதே லுக் மாறாம அப்படியே இருக்கணும். கண்டினியுட்டி மிஸ் ஆகவே கூடாதுங்கறதில் ரொம்பவே கவனமா இருந்தோம். ஸ்பெஷல் இங்க் அப்படிங்கறதால, அதை நீக்கறதும் ரொம்பவே கஷ்டம். அதுக்காக நான் ஷூட் முடியறவரை கூடவே இருந்தாகணும். ஷூட் முடிஞ்சதும் இன்னொரு லிக்விட் கொண்டு அதை சுத்தமா துடைச்சாகணும்’ என்று டாட்டூவின் ரகசியம் சொல்லும் ஏகாம்பரம், கிட்டதட்ட 54 நாட்கள் இந்த டாட்டூவை தினசரி கார்த்தியின் நெற்றியில் வரைந்திருக்கிறார்.

’சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல் இயற்கை வண்ணங்களில் கலம்காரி ஓவியங்களைக் கொண்டுவரதுதான் என்னுடைய ஆய்வு. மஞ்சள், வெள்ளை, சிவப்பு, அரக்கு, நீலம்னு இயற்கைச் சாயங்களில் ஐந்து வண்ணங்களை மட்டும்தான் உருவாக்க முடியும். அதை ஒன்னோட ஒன்னு மாத்தி மாத்தி குழைச்சுதான் மற்ற வண்ணங்களை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கினதுதான் இந்த சிவதாண்டவமும், மயிலும்’ என்று இரண்டு அழகான ஓவியங்களை நம் முன்னே வைத்தார். 

’அஜந்தா, எல்லோரா, தஞ்சாவூர், எகிப்துனு எல்லா ஊர் சிற்பக்கலைகளையும், ஓவிய நுணுக்கங்களையும் துணிகளில் இயற்கையோடு இழைந்த வண்ணங்களால் உருவாக்கணும். அதற்கான நெசவு வாய்ப்புக்களை நசிந்த கலைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கனும். அதுக்கான தொடக்கம்தான் காஷ்மோரா தொடங்கி கலம்காரி வரையான என்னுடைய முயற்சிகள் எல்லாமே’ என்று எல்லோரையும் நேசிக்கும் குரலில் சொல்லி முடித்தார் அந்த இளம் கலைஞர்.

-பா.விஜயலட்சுமி