Published:Updated:

அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! #HBDAnirudh

அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! #HBDAnirudh
அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! #HBDAnirudh

அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! #HBDAnirudh

2007:
அப்போது அந்தப் பையனுக்கு வயது 17. அவன் சொந்தக்காரர் பிரபல நடிகர். (மாமா அதை விட பிரபலம்). பொடியன் கீ போர்டு வாசிப்பதை பார்த்த நடிகர் புதிதாக ஒரு கீ போர்டு வாங்கி பரிசளித்திருக்கிறார். அப்போது அந்த நடிகரை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் “இவ்ளோ காஸ்ட்லியான கீ போர்டு எதுக்கு” என கேட்க, “பாத்துட்டே இருங்க சார். இவன் ஒரு ப்ராடிஜி. இன்னும் சில வருஷத்துல தமிழ் சினிமாவையே கலக்குவான்” என்றார். இயக்குநரையும் அந்த நடிகர் அப்படி கண்டுபிடித்து ஆதரித்தவர் என்பதால் அவருக்கு புரிந்தது. 
அந்தப் பையன் அனிருத். அந்த நடிகர் தனுஷ். அந்த இயக்குநர் வெற்றி மாறன் 

2011:
தனுஷ் நடிக்கும் 3 படத்துக்கு அனிருத் இசையமைத்துக் கொண்டிருந்தார். எப்படியோ, ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து ஒரு பாடல் திருடு போகிறது. அந்த கொலைவெறி பாடலை தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பிரவுசிங் செண்டரில் இருந்து யாரோ ஒருவர் நெட்டில் ஏற்றிவிடுகிறார். அனிருத்துக்கு அந்த லிங்க் கிடைக்க, சோர்ந்துவிடுகிறார். காரணம், அது ரஃப் கட். இசை துல்லியமாக இல்லை. ஃபைனல் வெர்ஷன் அது இல்லை என்பதால் துடித்துப் போகிறார். மற்றவர்களுக்கு அது ஒரு பாட்டு. அனிருத்துக்கு அது முதல் பாடல். தனுஷிடம் சொன்னதும், அவசர அவசரமாக ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது பின்னாளில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை.

படத்தின் ஹீரோ, ஹீரோயினுடன் அனிருத்தும் கேமராமேனும் ரெடி. பாடல் ரெக்கார்டிங் நடப்பது போல ஒரு வீடியோவை ஷூட் செய்து யூட்யூபில் முழுமையான பாடலை வெளியிடுகிறார்கள். சத்யம் தியேட்டரில் தனது மாமா ரஜினி வெளியிட, படத்தின் நாயகி ஷ்ருதிஹாசனின் அப்பா கமல் பெற்றுக்கொள்ள, தனது முதல் ஆல்பம் வெளியாகும் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு யுட்யூபில் ரிலீஸ் என்பது எப்படிப்பட்ட சோகம்? ஆனால் அதன் பின் நடந்தது.... வரலாறு.

பாட்டை ரிலீஸ் செய்தவனை பார்த்து உலகமே கேட்பது போல,கன்யாகுமரியின் தமிழ் ரசிகனில் தொடங்கி, மும்பை அமிதாப், அமெரிக்க பிரிட்னி ஸ்பியர்ஸ் வரை எல்லா உதடுகளும் முணுமுணுத்தது “வொய் திஸ் கொலைவெறி”. 

அன்னக்கிளி வந்த போது தமிழ் சினிமா ஒரு புது இசையை ரசித்தது. ரோஜா வந்த போது புதிய சப்தங்களை கேட்டு ரசித்தது. 3 வந்தபோது புதுவித கொண்டாட்டத்தை கண்டது. 

முழு ஆல்பமும் வெளியான நாளில் கொலைவெறி மட்டுமே ஹிட்டுப்பா என்றார்கள் ரசிகர்கள். அடுத்த நாள் “கண்னழகா” கொல்லுது என பல ஸ்டேட்டஸ்கள். அடுத்த நாள் “போ நீ போ” என் ப்ளே லிஸ்ட்டை விட்டு போக மாட்டேன் என்கிறது என ட்வீட்டுகள். கடைசியில் கொலைவெறிதான் ஆல்பத்தின் மோசமான பாடல் என தீர்ப்பே எழுதினார்கள். 

2014:
தனுஷ் மற்றும் தனுஷ் சார்ந்த படங்களே அதிகம் இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத்துக்கு ஒரு அதிரடி ஜாக்பாட் கிடைத்தது. அது பற்றி அவரே சொன்னது:

'' 'எதிர்நீச்சல்’ வெளியாகி மூணாவது நாள் முருகதாஸ் சார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பாடல்கள் ஹிட் ஆனதுக்கு வாழ்த்து சொல்லக் கூப்பிடுறார்னு நினைச்சுப் போனேன். 'இப்பத்தான் 'எதிர்நீச்சல்’ பார்த்தேன். மியூசிக் பிரமாதம். அடுத்து விஜய் சார்கூட 'கத்தி’ பண்றேன். நீங்கதான் மியூசிக்’னு எனக்கு ஷாக் கொடுத்தார் முருகதாஸ் சார். நம்பவே முடியலை.

ஒருநாள் கம்போஸிங்ல, 'என்னை ஏன் சார் இந்தப் படத்துக்கு செலெக்ட் பண்ணீங்க?’னு வாய்விட்டே கேட்டுட்டேன். 'என் ஃப்ளாட்ல சின்ன பசங்கள்லாம் 'எதிர்நீச்சலடி...’ பாட்டை கோரஸா பாடிட்டு இருந்தாங்க. அது ஏதோ ராப் மாதிரி இருந்துச்சு. எனக்குப் புரியலை. ஆனா, குழந்தைகளுக்குப் பிடிக்குதுனா, அதுல ஏதோ இருக்குனு தோணிச்சு. அப்புறம் 'எதிர்நீச்சல்’ பட டைட்டில்ல உங்க பேர் வந்தததும் தியேட்டர்ல பயங்கரமா கை தட்டினாங்க. ஃபுல்பார்ம்ல இருக்கீங்கனு புரிஞ்சுபோச்சு. அதான் உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சிரிச்சார்.''

அவ்வளவுதான். அனிருத்தின் கிராஃப் தாறுமாறாக ஏறியது. அதுவரை விஜய் படங்களில் இல்லாத ஸ்டைலில் பக்கம் வந்து ஓப்பனிங் சாங் மாஸ் ஹிட் அடித்தது. செல்ஃபி புள்ள சாங் ஆஃப் த இயர். ஹீரோ, வில்லனுக்கு என தனித்தனி தீம் இசை. ஒவ்வொன்றும் காதில் ஒற்றிக்கொள்ளும் ரகம். விஷால் தால்தானியுடன் அனிருத்தும் சேர்ந்து பாடிய ஆத்தி என நீ அனிருத்தின் ஆல் டைம் ஃபேவரைட்.
அதே வருடம் வந்த வி.ஐ.பி தனுஷ்-அனிருத் காம்போவின் மாஸ்டர் பீஸ். 2015ல் இன்னொரு மாஸ் ஹீரோ அஜித்தின் வேதாளம் ரிலீஸ். ஆலுமா டோலுமா பீட்டுக்கு ஆந்திரா வரை அதிர்ந்தது.  இதுவரை 14 முழு ஆல்பங்கள் இசையமைத்திருக்கிறார். அது தவிர சிங்கிள் பாடல்கள் பல படங்களில் வந்திருக்கின்றன. 

அனிருத்தின் குரல் இளசுகளின் வாய்ஸ் ஆகிப்போனது. ஏ.ஆர்.ரகுமானில் தொடங்கி புதிய இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா வரை எல்லோரும் தங்கள் இசையில் பாட அனிருத்ததை அழைத்தனர். இசையமைத்தது ஹிட் ஆனால் ஒகே; இவர் பாடிய பாடல்களும் ஹிட் ஆனால்? கிட்டாரில் இருக்கும் ஏழு கம்பிகளிலும் சுக்ரன் குடிக்கொண்ட ஒருவனுக்கே இது நடக்கும்.

சர்ச்சைகள்:
அனிருத்தின் கரியரே பாடல் லீக் ஆன பிரச்னையில் தான் தொடங்கியது. அதன் பின் நடிகை ஆண்ட்ரியாவும் அவரும் முத்தமிடும் புகைப்படங்கள் லீக் ஆகி பிரச்னை ஆனது. மொபைலை அணைத்துவிட்டு மும்பைக்கு பறந்தார் அனி. ஒரு வாரம் கழித்து அவர் திரும்பிய போது எல்லாம் ஓய்ந்திருந்தது. அப்போது விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் பிரேக் அப் ஆகாமல் என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டபோது:

“'நிறையப் பொய் சொல்லாம இருந்தாலே போதும். 'அதான் நெருங்கிட்டோமே’னு அதிகமா அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. பார்ட்னரை இறுக்கிப் பிடிக்காம ஃப்ரீயா விட்டுடணும். ஆனா, மூணு இல்லை... மூவாயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் அதை சின்சியராக் கடைப்பிடிச்சாலும், காதல் பிரேக்-அப் ஆறதைத் தடுக்க முடியாது ப்ரோ!' என்றார்

பின், சிம்புவின் பீப் பாடல் வெளியான போது அதற்கும் அனிருத்துதான் இசை என சர்ச்சை ஆனது. எந்த பதிலும் பேசாமல் வெளிநாட்டில் தனது இசை நிகழ்ச்சிக்காக பறந்துக் கொண்டிருந்தார். 

இப்போதும் தனுஷுடன் பிரச்னை, சிம்புவுடன் நெருக்கம் என அனிருத்துக்கு பிரச்னைகள் பல உண்டு. ஆனால், அவை எதுவும் அனிருத்தின் இசையை பாதிக்காது. அப்படி ஒரு வேலைக்காரர் அனிருத். இந்த வெற்றிகள் அனிருத்தின் கடின உழைப்புக்காக கிடைத்தவை மட்டுமே. இதை அனிருத்தை அறிமுகப்படுத்திய தனுஷும் ஏற்றுக்கொள்வார். ஒரே ஒரு சம்பவமே அதற்கு போதும்.

சென்னை, தி.நகரில் இருக்கும் மீனாட்சி திருமண மண்டபம் அது. சென்னையின் மையம் என்றாலும் அது ஒரு சிறிய மண்டபமே. விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் ஆரம்ப நாள் அது. அங்கு வந்த பேசிய அனிருத் சொன்னார் “இதே மண்டபத்தில் சில கல்யாணங்களுக்கு நான் வாசிச்சிருக்கேன். அந்த பழைய ஞாபகங்கள் வருது”

மாமா ரஜினி மற்றும் சுற்றி இருக்கும் அனைவரும் சினிமாக்காரர்கள். வசதியானவர்கள். ஆனால், அனிருத் சில ஆயிரங்களுக்காக திருமணங்களில் வாசித்தார். தன் இசை தன்னை காப்பாற்றும் என நம்பினார். அந்த நம்பிக்கையைதான் தனது இசை மூலம்  அவர் தந்துக் கொண்டிருக்கிறார். அனிருத் இன்றைய இளைஞர்களுக்கு இசையமைப்பாளர் கிடையாது. இன்ஸ்பிரேஷன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அனிருத்!

-கார்க்கிபவா
 

அடுத்த கட்டுரைக்கு