Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி, கமல், விஜய், சிம்புவுக்கு நடந்ததுதான் சிவகார்த்திகேயனுக்கு நடந்திருக்கு!

'எங்களை வேலை பார்க்க விடுங்க' - சிவகார்த்திகேயனின் இந்தப் புலம்பல்தான் இந்த வார வைரல். அது சரி, வளர்ற ஹீரோ, இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றெல்லாம் இதை ஈஸியாக டீல் செய்ய முடியாது. காரணம், தமிழ் சினிமாவுலகில் காலங்காலமாக ஐஸ்க்ரீம் தின்று ஸ்பூன் போட்ட படா படா ஹீரோக்களுக்குமே இந்தப் பிரச்னை இருக்கிறது. 'என்ன பாஸ் இந்தப் படத்துக்குப் பிரச்னை பண்ண வர்றேன்னு சொல்லிட்டு வரவே இல்லை' என இனி ஹீரோக்களே போராட்டக் குழுவுக்கு போன் பண்ணி கேட்பார்கள் போல. அப்படி ஒவ்வொரு ரிலீஸுக்கும் தட்டுத் தடுமாறி முங்கு நீச்சல் போட்டுக் கரையேறும் சில முன்னணி ஹீரோக்களின் பட்டியல் இது.

ரஜினிகாந்த்:

90-களில் அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்கி, பின் மீண்டாலும் இவரின் படங்களுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் வரவில்லை. 2002-ல் பா.ம.க-வோடு இவருக்கு முட்டிக்கொள்ள முளைத்தது வினை. படப்பெட்டியை எல்லாம் தூக்கிக்கொண்டு பறந்தார்கள். பலத்த பரபரப்பிற்குப் பின் படம் ரிலீஸாகி வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது. அதன்பின் 'குசேலன்' பட ரிலீஸின்போது காவிரிப் பிரச்னையில் கன்னடர்களைத் திட்டியதற்கு மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸாகும் எனப் பிரச்னை கிளம்ப, எதிர்ப்புகளை மீறி மன்னிப்பு கேட்டார் ரஜினி. 

அதன்பின் 'கோச்சடையான்' படத்திற்கும் பணப் பிரச்னைகள். இது 'லிங்கா' வரையில் எதிரொலித்தது. அது போக, 'லிங்கா' என் கதை என ஒருவர் வழக்குப் போட, அதுவும் பஞ்சாயத்தானது. பட ரிலீஸுக்குப் பின் வினியோகஸ்தர்கள் கோபமும் ரஜினி பக்கம் திரும்பியது. நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என அவர்கள் தொடங்கிய போராட்டம் 'கபாலி' வரை எதிரொலித்து அடங்கியது.

கமல்ஹாசன்:

பட ரிலீஸுக்கு இவர் அளவிற்குக் கஷ்டப்பட்ட ஆட்கள் உலக சினிமாவிலேயே இருக்க முடியாது. 'சண்டியர்' என்ற பெயரில் தொடங்கிய பஞ்சாயத்து 12 ஆண்டுகளாகியும் விடாமல் துரத்துகிறது. 'ரிலீஸுக்குத் திணறிய கமலின் பத்து படங்கள்' என லிஸ்டிக்கல் ஆர்டிகிளே எழுதலாம் போல. 'விருமாண்டி' வெளியான கொஞ்ச ஆண்டுகள் கழித்து 'தசாவதாரம்' என் கதை என ஒருவர் வழக்கு போட்டார். இந்து அமைப்பு ஒன்று மல்லிகா செராவத் மீது வழக்குப் போட்டது. இதை எல்லாம் தாண்டி வெளியான படம் சூப்பர் ஹிட்.

'மன்மதன் அம்பு' படத்தில் வேறுவிதமான பிரச்னை. கமல் எழுதிய பாடல் ஆபாசமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்ப, வழக்கம்போல பிரச்னைகளைக் கடந்து ரிலீஸானது படம். அடுத்து 'விஸ்வரூபம்'. சொல்லவே தேவையில்லை. இந்து அமைப்பினர், முஸ்லீம் அமைப்பினர், தியேட்டர் உரிமையாளர்கள், அரசாங்கம் என எல்லாத் தரப்பும் கமலுக்கு எதிராக திரள, ஓப்பன் பிரஸ்மீட் வைத்து கண்ணீர்விட்டார் கமல். ரசிகர்கள் ஒன்று திரள, படம் ரிலீஸாகி மெகா ஹிட் ஆனது. அதன்பின் 'உத்தமவில்லன்'. இந்த முறையும் ஒரு இந்து அமைப்பு கொடி பிடிக்க ஒருநாள் லேட்டாக ரிலீஸாகி பெட்டிக்குள் சுருண்டது படம். இதோ இப்போதே 'சபாஷ் நாயுடு' படத்திற்கும் அங்கங்கே எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

விஜய்:

பட ரிலீஸ் விவகாரத்தில் கமலுக்கு இவர் சிஷ்யப் பிள்ளை. 2010 வரை பெரிதாகப் பிரச்னைகள் எதுவுமில்லை. 'காவலன்' ரிலீஸ் சமயம் ஆளும் தரப்பு குடைச்சல் கொடுக்க, பல இடங்களில் ரிலீஸ் தடைபட்டது. மீடியாவும் ரசிகர்கள் கூட்டமும் தலையிட்ட பின்னரே படம் ரிலீஸானது. இதனால் கடுப்பாகி விஜய் அணில் அவதாரம் எல்லாம் எடுத்தார். ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. 'துப்பாக்கி' பட ரிலீஸின்போது சில முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க ரிலீஸ் சிக்கலானது. அவர்கள் படம் பார்த்து ஓகே சொன்னதும்தான் ரிலீஸ்.

Born to lead - விஜய்யை அதிகம் கடுப்பேற்றும் பன்ச் இதுவாக இருக்கலாம். ஒரு டயலாக், முழுப் படத்தையே பழிவாங்கும் எனத் தமிழகம் உணர்ந்த தருணம் அது. சொன்ன தேதிக்கு சில நாட்கள் கழித்துதான் படம் ரிலீஸே ஆனது. அதன் பின் 'கத்தி'. லைக்கா தயாரிப்பு என அம்மா ஆசிர்வாதம் பெற்ற வேல்முருகன் முழுமூச்சாய் முண்டாசு கட்டி எதிர்த்தார். பாவம் அதற்குப் பின் வேல்முருகனுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் போல. 'புலி' ரிலீஸ் சமயத்தில் ஐ.டி ரெய்டு. 'பைரவா'விற்கு என்ன டிசைனோ?

சிம்பு:

மற்ற ஹீரோக்களுக்கு எல்லாம் வெளியில் இருந்துதான் பிரச்னை. இவர் படத்துக்கு முக்கியப் பிரச்னையே இவர்தான்.  'போடா போடி' எப்போதோ தொடங்கி எப்போதோ முடிந்த படம். லேட்டாகத்தான் ரிலீஸானது. 'வாலு'வும் அனுமார் வாலு கதைதான். முதல் வருஷம் பாடல்கள், அடுத்த வருஷம் ட்ரெய்லர், அதற்கடுத்து படம் என பிட்டு பிட்டாக ரிலீஸாகி பொறுமையை சோதித்தது.

வாலு போய் வந்தது 'இது நம்ம ஆளு'. நாம ஏன் இதுல கமிட்டானோம் என இயக்குநர் ஓப்பனாய் ஃபீல் பண்ணுமளவிற்குக் கதறவிட்டார்கள். முக்கி முனகி ரிலீஸ் செய்தும் ரிசல்ட் பெரிதாக இல்லை. இதோ இளசுகள் ஆர்வமாய் எதிர்பார்க்கும் 'அச்சம் என்பது மடமையடா' படமும் சிம்புவால் தாமதவதாகக் குரல்கள் எழுகின்றன. எப்பதான் ஜி படத்தை கண்ணுல காட்டுவீங்க?

சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் கலெக்‌ஷன் கில்லி. 'காக்கி சட்டை' வரை பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட ஃபைனான்ஸ் பிரச்னையால் 'ரஜினிமுருகன்' இதோ அதோ என இழுத்தடித்து ரிலீஸானது. அதன்பின் இப்போது 'ரெமோ'. பட பூஜை போட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. பி.சி ஶ்ரீராம், முத்துராஜ், ரசூல் பூக்குட்டி என படா படா ஆசாமிகளின் உழைப்பில் உருவாகி இருந்தாலும் ரிலீஸ் ஆவதே சந்தேகம் என்ற நிலைமையில்தான் இருந்ததாக இப்போது மனம் திறந்திருக்கிறார் சிவா. முட்டுக்கட்டை போட்டவர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும், வேந்தர் மூவிஸ் மதனும் என ஒரு தகவல் உலவுகிறது. ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டதால் அடுத்தடுத்து பஞ்சாயத்துகள் நடக்கலாம்.

இந்த லிஸ்ட்ல அதிசயமா ஒரு ஹீரோயினும் இருக்காங்க! அவங்க யாருனு இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஜி!

 

 

 

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?