Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவுண்டமணி, அஜித் முதல் நயன்தாரா வரை...! - ஒரு Comeback சரித்திரம்

நமக்குப் பிடித்த ஹீரோ ரொம்பநாள் கழித்து ஸ்கிரீனில் வரும்போது, நமக்குப் பிடித்த பேட்ஸ்மேன் ஃபார்ம் அவுட் காலத்துக்குப் பிறகு செஞ்சுரி அடிக்கும்போது லேசாக சிலிர்க்குமே... அதுதான் பெர்ஃபெக்ட் கம் பேக். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு பிரேக்கிற்குப் பின் கெத்தாக நுழைந்து 'ஐ யம் பேக்' என ஸ்டைல் ஸ்டேட்மென்ட் விட்டு நம்மை அசரடித்தவர்களின் சின்ன லிஸ்ட். 

அஜித்:

 

 

2007-ல் 'பில்லா' ஹிட்டிற்குப் பின் வெளியான ஏகனும், அசலும் வசூல் ரீதியாக ஓடவில்லை. போக ரேஸ் பக்கம் கவனம் செலுத்தியதால் ஒரு பிரேக் வேறு. இதனால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களை மானாவாரியாய் உற்சாகம் ஏற்ற வந்தது 'மங்காத்தா'. ஜீப் பறந்து வர, பின்னணியில் மிரட்டல் தீம் மியூஸிக்கில் அஜித் இறங்க, வெடித்து அடங்கின தியேட்டர்கள். படமும் பட்டிதொட்டி எல்லாம் ஹிட். 

அர்விந்த் சுவாமி:

 

 

ஒரு காலத்தில் காதல் மன்னன். இளைஞர்களின் ரோல் மாடல். அப்புறம் ஆளையே காணோம். திடீரென குருநாதர் இயக்கத்தில் 'கடல்' படத்தில் வந்தார். ஆனால் 'நாம எதிர்பார்க்கிறது இது இல்லையே' என அமைதி காத்தான் ரசிகன். சித்தார்த் அபிமன்யூவாக அவதரித்தார் அர்விந்த் சுவாமி. தமிழின் சூப்பர் வில்லன் நான்தான் என 'தனி ஒருவன்' இலக்கணம் எழுதி ஒட்டினார். இதோ, பழைய மவுசு ஏறிக் கிடக்கிறது அவருக்கு. 

பிரபுதேவா:

 

 

கடைசியாக 'எங்கள் அண்ணா' படத்தில் முழு நீள ரோலில் நடித்தார். அதன்பின் ஸ்க்ரீனில் தலை காட்டுவதோடு சரி. 12 ஆண்டுகள் கழித்து 'தேவி'யில் அவர் செய்யும் சேட்டைகளுக்கு சிரித்து உருள்கிறது தியேட்டர். அதுவும் பழைய வேகம் கொஞ்சமும் குறையாமல் மின்னல் வேகத்தில் அவர் டான்ஸ் ஆடுவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டுமய்யா!

கவுண்டமணி:

 

 

பெரிய பெரிய ஹீரோக்களுக்கு இணையான செல்வாக்கு இந்த மனிதருக்கு மட்டுமே உண்டு. 'நீங்க ஸ்க்ரீனில் வந்தா மட்டும் போதும்' எனப் பலர் சொல்லியும் 'ஜக்குபாய்' படத்துக்குப் பின் நடிக்காமல் இருந்தவர் பெரிய பிரேக்கிற்கு பின் '49-ஓ' படத்தில் நடித்தார். விவசாயிகள் பற்றிய பிரச்னையை தனக்கேயுரிய ஸ்டைலில் அவர் விளாச, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

அருண் விஜய்:

 

 

தமிழ் சினிமாவில் இவர் அஜித், விஜய் செட். ஆனால் பிரேக் கிடைக்காமல் தடுமாறி வந்தவருக்கு விஸ்வரூப வெற்றியைத் தந்தது 'என்னை அறிந்தால்'. அஜித்தோடு சரிக்கு சமமாக மல்லுக்கட்டி சிக்ஸர் அடித்தார் விக்டர். இளம் ஹீரோ ஒருவர் வில்லனாக அறிமுகமாகி பெரிய வெற்றி பெற்றது அதுவே முதன்முறை.

நயன்தாரா:

 

 

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவுலகை சோலோவாக ஆட்சி செய்யும் மாயா டார்லிங். தனிப்பட்ட வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றவர் 'ராஜா ராணி'யில் ரெஜினாவாக வந்து உருக வைத்தார். ஹீரோக்களைத் தாண்டி இவரின் பெயரே படத்துக்குப் பெரிய ஓப்பனிங் ஆனது. நயன்டா!

விஜயகாந்த்:

முழுநேர அரசியல்வாதியானதற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக்கொண்டார் கேப்டன். மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் வந்ததோடு சரி. ஸ்க்ரீனில் அவரைப் பார்க்காமல் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களையும் கட்சிக்காரர்களையும் குஷியாக்க 'தமிழன் என்று சொல்' என்ற பட அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின் 'என்னாச்சு?' ரகம்தான். கேப்டன் ஃபார்முக்கு வருவார் என ஸ்டேடியத்துக்கு வெளியே காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

டி.ஆர்:

 

 

ஒரு காலத்தில் தாய்க்குலங்களின் ஏகபோக ஆதரவைப் பெற்ற பாசக்கார அண்ணன். சிம்புவின் சினிமா பிரவேசத்துக்குப் பின்னர் அடக்கி வாசித்தவர் ஐந்து வருட விரதத்தை முடித்து எடுத்த காவியம்தான் 'வீராசாமி'. படம் எப்படியிருந்தாலும் அவரின் ரசிகர்கள் அவரைக் கொண்டாடத்தான் செய்கிறார்கள்.

வடிவேலு:

 

 

இந்தப் பதிவு சூப்பராய் பொருந்துவது இவருக்குதான். தமிழர்களைப் பல வகை நோய்களில் இருந்து சிரிப்பு மருந்து கொடுத்து காப்பாற்றிய புண்ணியவான். 'மிஸ் யூ தலைவா' என பொடிசுகள் தொடங்கி ரிட்டயர்ட் ஆனவர்கள் வரை ஸ்டேட்டஸ் தட்ட, காமெடி கத்திச்சண்டை போட வந்தேவிட்டார் வைகைப் புயல்! வி ஆர் வெயிட்டிங்!

நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்