Published:Updated:

'விஜய் சேதுபதி உள்ளே வந்தது ஆச்சரிய ட்விஸ்ட்!' #கார்த்திக் சுப்புராஜ் ஸ்பெஷல் பேட்டி #4YearsOfPizza

'விஜய் சேதுபதி உள்ளே வந்தது ஆச்சரிய ட்விஸ்ட்!' #கார்த்திக் சுப்புராஜ் ஸ்பெஷல் பேட்டி #4YearsOfPizza
'விஜய் சேதுபதி உள்ளே வந்தது ஆச்சரிய ட்விஸ்ட்!' #கார்த்திக் சுப்புராஜ் ஸ்பெஷல் பேட்டி #4YearsOfPizza

ரு பீட்ஸா கடை, ஒரு பங்களா, ஒரு டார்ச் லைட், இரண்டு ரிங் டோன், ஒரு 'லேண்ட்லைன்’ தொலைபேசி, நிறைய இருட்டு, சில கேரக்டர்கள், நிறைய நிறையத் திகில் என பார்வையாளர்களை சீனுக்கு சீன் மிரட்டிய படம் 'பீட்சா'. அறிமுக இயக்கத்துலயே பின்னிப் பெடலெடுத்து பீக்கில் வளர்ந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படம் ரிலீஸாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. ஆமாங்க, 'பீட்சா' படத்துக்கு இன்னைக்கு நாலாவது பர்த் டே. அதை கொண்டாடாமல் விட்டால் எப்படி? படத்தின் இயக்குநரை அழைத்து #4YearsOfPizza வுக்காக வாழ்த்து சொல்லிவிட்டு, பீட்சா' பற்றி பேசியதில் இருந்து....

"பீட்சா படம் வந்து நாலு வருடம் ஆகிறது. இந்த நாலு வருஷம் பார்க்கும்போது எப்படி இருக்கு?"

"செம ஹப்பியா இருக்குங்க. இது ஒரு பேட் பிலிமா இருக்காதுனு தான் நினைச்சோம். ஆனா,  இந்த அளவுக்கு ஹிட் ஆகும்னு நினைச்சு கூட  பார்க்கலை. படம் ரிலீஸ் அன்னைக்கு ஆடியன்ஸ் ரசிக்க ஆரம்பிச்ச பின்னாடிதான் ஓ.கே. ஏதோ பண்ணி இருக்கோம்னு தோணுச்சு. இப்பதான் பீட்சா ஸ்கிரிப்ட்டை எழுதி, படத்தை எடுத்து ரிலீஸ் பண்ண மாதிரி. இருக்கு. அதுக்குள்ள நாலு வருஷம் வேகமாக ஓடிடுச்சு."

"நாலு வருஷத்துக்கு முன்னாடி இதே நாள் நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கா?"

"அய்யோ.. . எப்படிங்க மறப்பேன். என் லைப் பெஸ்ட் மொமண்ட்ஸ் அந்த தருணங்கள்தான். அன்னைக்கு செம மழை. 'இன்னமும் ஒரு வாரம் முழுக்கவே இப்படி மழையா இருக்கும். படம் ஓடுவது சிரமம்தான்' என்ற ரீதியில் சொன்னாங்க.  'முதல்லயே சம்திங் ராங்கா இருக்கே'னு பயந்தேன். படத்துக்கு பெரிய ஓபனிங் கிடையாது. புது டீம் ஆடியன்ஸ் வருவாங்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதை எல்லாம் காட்டிக்காமல், 'பீட்சா' படத்தின் ஃபர்ஸ்ட் ஷோவுக்கு போனேன். முதல் காட்சியில 'பீட்சா' படத்துல வேலை செஞ்சவங்க பேமிலி & ப்ரெண்ட்ஸ்தான் அதிகம் பார்க்க வந்திருந்தாங்க. படம் முடிஞ்சதும் 'நல்லா இருக்கு. சூப்பரா இருக்கு'னு பாராட்டினாங்க. என்னதான் இருந்தாலும் அது அவங்க படமாகதான் பார்ப்பாங்க. அடுத்து பிரஸ் ஷோ, அவங்களும் நல்லா இருக்குனு சொன்னாங்க. அதையும் மனசுல ஏத்திக்கல. அடுத்து வர்ற வழியில ஏ.வி.ஏம். ராஜேஸ்வரி தியேட்டருக்கு நானும், விஜய் சேதுபதியும், பாபியும் போனோம். வெளியே 'House Full''னு போர்டு மாட்டி இருந்தது. 'சார், உங்க படம் தான் ஓடுது. ஹவுஸ் ஃபுல்'னு அங்க வேலை செய்யறவர் சொன்னார். தியேட்டருக்கு உள்ளே போனேன். ஆடியன்ஸ் படத்தை ரசிச்சு பார்த்தாங்க. 'அப்பாடா'னு மனசுக்கு திருப்தியா இருந்தது."

"எங்க பிடிச்சீங்க இந்த 'பீட்சா' கதையை?"

"நான் 'ஜிகர்தண்டா' தான் முதல்ல எழுதினேன். ஆனா, பட்ஜெட் பெரிசு. புது இயக்குநருக்கு பெரிய பட்ஜெட்ல படம் பண்ணத் தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம்னு தெரியும். ரொம்ப சிம்பிளா ஒரு வீடு, ஒருத்தன்னு கதை பண்ணாலாமேனு தோணுச்சு. 'பீட்சா கொடுக்க ஒரு பங்களாக்குள்ள வர்ற பையன் அந்த பங்களாவுகுள்ள மாட்டிக்கறான்' இப்படிதான் முதல் லைன் மனசுக்குள்ள ஸ்பார்க் அடிச்சு பீட்சா கதை உருவாச்சு"

"கதை எழுத எவ்வளவு நாட்கள் ஆச்சு?"

"முதல்ல ரஃப்பா எழுதினேன். அப்புறம் அதை பைன் ட்யூன் பண்ண கொடைக்கானல் போனேன். மொத்தமா ஸ்கிரிட் எழுத 2 மாசம் ஆகி இருக்கும். ஆனா, நாங்க பக்கா பிளானிங் ஆக இருந்ததால் 32 நாட்களில் ஷூட்டிங் முடிச்சுட்டோம்." 

 "விஜய் சேதுபதி மனசுல வைச்சுதான் லீட் ரோல் கேரக்டரை எழுதுனீங்களா?"

"இல்ல. ஆரம்பத்துல பிரசன்னா, வைபவ்னு நிறைய பேர்கிட்ட இந்த கதையை சொன்னேன். பிரசன்னாவுக்கு கதை பிடிச்சு இருந்தது. ஆனா, ஏதோ காரணத்தால் அவர் பண்ணல. வைபவும் இதே மாதிரி ஆகிடுச்சு. விஜய் சேதுபதி குறும்படம் எடுக்கும்போதே எனக்கு நல்ல பழக்கம். அவரையே லீட் ரோலாக நடிக்க வைக்கலாமேனு தோணுச்சு. சி.வி.குமார் சார் இந்த படத்தை தயாரிக்கறேன்னு சொன்னதும், அவர்கிட்ட விஜய் சேதுபதி இந்த கதைக்கு கச்சிதமா இருப்பார்னு சொன்னேன். அவரும் இந்த ஐடியாவுக்கு ஓ.கே. சொன்னார். அப்படிதான் விஜய்சேதுபதி பீட்சாவுக்குள்ள வந்தார்."  

"ஏன் 'பீட்சா' கொடுக்க வர்ற பையன் பங்களாக்குள்ள மாட்டற மாதிரி எடுத்தீங்க. எவ்வளவோ பொருட்கள் டோர் டெலிவரி ஆகுதே... குறிப்பா பீட்சானு வைத்ததின் காரணம் என்ன?"

"இப்ப சாப்பாடுல இருந்து மொபைல் வரைக்கும் ஆர்டர் கொடுத்ததும் டோர் டெலிவரி பண்ணுறாங்க. ஆனா, இதுக்கு முன்னாடி 'பீட்சா' தான். ஆரம்பத்துல டோர் டெலிவரி செஞ்சது பீட்சா மட்டும் தான். அதுக்கு அப்புறம் தான் எல்லா பொருட்களுமே வீட்டுக்கு வந்தது. அதுவுமில்லாம பீட்சாதான் பசில ஆர்டர் பண்ணுவாங்க. அரை மணிநேரத்துல டெலிவரி வரும். படம் ஸ்பீடா இருக்கும். அதுனால தான் நான் பீட்சா பையன்னு எழுதினேன். தலைப்பையும் 'பீட்சா'னே வைச்சேன்."
 
"படத்துல பங்களாக்குள்ள விஜய்சேதுபதி மாட்டிக்கற மாதிரி கதை சொல்லிட்டு, அப்புறம் இல்லவே இல்லைனு எல்லாமே கப்சானு சொல்லுவீங்க. இந்த ட்விஸ்ட் தான் படத்தின் பலம்தான். ஆனாலும்,  பார்வையாளர்களிடம் ஒரு கதையை சொல்லி ஏமாற்றினால், அவங்க கோபப்படக்கூடிய சாத்தியம் இருக்கு என்பதை கதை எழுதும்போது உணர்ந்தீங்களா?" 

"ம்ம்ம்ம்... இந்த இடத்துல எனக்கே பல சந்தேகங்கள் இருந்தன. ஒரு கதை சொல்லிட்டு, அதை இல்லைனு சொல்லும்போது ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே என்னால யூகிக்க முடியல. மதன் சார்கிட்ட இந்த கதை சொன்னேன். முழுவதும் கேட்டவர் 'நல்லா இருக்கு. நீங்க கதை சொல்லும்போது 'இது எல்லாம் வெறும் பொய் என்ற போர்ஷனை ரொம்ப கம்மியா கதையில சொல்லுங்க. நிஜத்தில் நடக்க கூடிய கதையை பெரிசா சொல்லுங்க. நிஜத்தில் நடக்க கூடிய கதையை கம்மியா சொல்லிட்டு. நடக்காத கதையை பெரிசாக சொன்னால்தான் தப்பு ஆகிடும்'னு சொன்னார். எனக்கும் இந்த பாயிண்ட் சரினு தோணுச்சு. அது நிஜத்தில் நடக்காத கதையை ரொம்ப சின்னதா சொல்லி இருப்போம். அதுதான் வொர்க் அவுட் ஆச்சு"

"படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த சீன் எது?"

"ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த சீன் எல்லாம் ஒரே டேக்ல எடுத்துட்டோம். அந்த பங்களாவில் இருக்கும் குழந்தை கீழே உட்கார்ந்து நோட்ல கிறுக்கிட்டு இருக்கும். விஜய் சேதுபதி பயந்துட்டே அந்த குழந்தை பக்கம் போவார். அந்த குழந்தை சும்மா அங்கனு கையை காட்டும். டார்ச் அடிச்சு திரும்பி பார்ப்பார். யாருமே இருக்க மாட்டாங்க. திரும்பவும் குழந்தையை பார்ப்பார். திரும்பவும் அந்த குழந்தை அங்க கையை காட்டும். யாருமே இல்லாததை பார்த்துட்டு திரும்புவார்... பாபி அங்க நின்னு காத்துவான். விஜய்சேதுபதி செமய்யா பயந்துடுவார். இந்த சீன்ஸ் எல்லாம் சி.ஜி இல்லைங்க. கேமரா திரும்பறத்துக்குள்ள நான் அந்த குழந்தையை அங்க இருந்து தூக்கிடுவேன். பாபி அங்க போய் வேகமா நின்னுடுவான். இப்படிதான் பல சீன்ஸ் எடுத்தோம்."

"படத்துல சந்தோஷ் நாராயணன் இசையில ஒரே ஒரு பாட்டு இருந்தாலும் ரொமான்டிக்கா இருக்கும். உங்க லைப்ல நடந்ததா?"

சில நொடிகள் தொடர்ந்து சிரிக்கிறார். "சில விஷயங்கள் இருக்கத்தானே செய்யும் பிரதர். கம்மியான பட்ஜெட்ல ரொமான்டிக்காக எடுக்கணும்னு நினைச்சோம். அவ்வளவுதான்." 

"படத்துக்கு வந்த மறக்க முடியாத பாராட்டு?"

"சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கூப்பிட்டு பாராட்டியதுதான்."

"அடுத்து  என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"ப்ரதர்.. ஏற்கனவே உங்ககிட்ட சொன்னதுதானே..  தனுஷ் சார் படத்துக்கு ஸ்கிரிப்ட் வொர்க் போய்ட்டு இருக்கு. சீக்கிரம் ஷூட்டிங் போகப்போறோம்." என சிரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். 

 ‘அதற்கும் சேர்த்து வாழ்த்துகள் ப்ரோ’ என்றேன்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி

அடுத்த கட்டுரைக்கு