சினிமா
தொடர்கள்
Published:Updated:

பராசக்தி 70

சிவாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
சிவாஜி

கடிதத்தின் நோக்கம் ‘தடை’ என்றாலும், அது விவரிக்கும் காட்சிகள் ‘பராசக்தி’ திரைப்படம் பெற்ற மகத்தான மக்கள் ஆதரவிற்கு சாட்சியமாகிறது என்பதுதான் வேடிக்கை.

திரைப்பட வரலாற்றில் வெகுசில படங்களே அவை வெளிவந்து வெற்றிகரமாக ஓடியபோது உருவாக்கிய உணர்வுகள், அனுபவங்கள் வழியாகத் தொடர்ந்து நினைவில் நிற்பவை. தமிழில் அந்த வகையான சிறப்புப் பெற்ற படங்களில் முதன்மையானது ‘பராசக்தி.’

1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று வெளியானது ‘பராசக்தி.’ நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளுடன் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இணைந்து தயாரித்த படம் அது. திராவிடர் கழகச் செயற்பாட்டாளர் பாவலர் பாலசுந்தரத்தால் எழுதப்பட்டு நாடகமாக நிகழ்ந்து வந்ததைத் திரைப்படமாக்கினர். திரைப்படத்திற்குத் திரைக்கதை – வசனம் எழுதும் பொறுப்பு கலைஞர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு தனது 22-வது வயதில் கோவை ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ராஜகுமாரி’ (1947-ல் வெளிவந்தது) திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமான இளைஞர் அவர். அதைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ (கலைஞர் பெயர் விடுபட்டது), ‘மருதநாட்டு இளவரசி’, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்காக ‘மந்திரி குமாரி’ என்று எழுதி 1950-ம் ஆண்டிற்குள் தமிழின் மிகச் சிறந்த கதை வசனகர்த்தா எனத் தன்னை நிறுவிக்கொண்டவர் கலைஞர். வெளிச்சத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் எனும் நடிகரை ‘கதாநாயகனாக’ மாற்றிய பெருமையும் அவரையே சேரும். எனவே ‘பராசக்தி’ வெளியானபோது அவரது வசனம் பற்றிய பேரார்வம் திரைப்படப் பார்வையாளர்களுக்கு இருந்தது.

பராசக்தி 70

கதைக்களம் ஒரு மத்தியதர வர்க்க குடும்பத்தின் வாழ்வையும் தாழ்வையும் பேசுவது. மதுரையில் அம்மா, அப்பா, தங்கை (கல்யாணி) இருக்க, அண்ணன்கள் (சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன்) சிறுவயதிலேயே பிழைப்புக்காக பினாங்கு சென்று, உழைப்பால் உயர்ந்து செல்வாக்காக இருக்கிறார்கள். தங்கையின் திருமணத்தை நடத்த பெரும் பொருளோடு தயாராகும்போது, இரண்டாம் உலகப் போர் மூள்கிறது. ஜப்பான் குண்டுவீச்சில் பினாங்கு சிதைகிறது. அனைவரும் போக முடியாத நிலையில் இளையவன் குணசேகரனை மட்டும் கப்பலில் அனுப்புகிறார்கள். போரால் கப்பல் காலதாமதமாகி கல்யாணியின் திருமணம் முடிந்துவிடுகிறது. சென்னையில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டுத் தெருவில் அலைகிறான் குணசேகரன்.

‘பராசக்தி’ தமிழ்த் திரைப்படமாக, அரசியலாக, சமூக மாற்றத்திற்கான கருவியாகச் செயல்பட்ட விதம் அபூர்வமானது. திராவிடவியல் ஆய்வறிஞர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ‘பராசக்தி: ஒரு தி.மு.க திரைப்படத்தின் வாழ்வும் காலமும்’ ஆய்வுரையில் அதன் அத்தனை பரிமாணங்களையும் வெகு நுட்பமாக விவரித்திருப்பார். அந்த ஆய்வுரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1991-ம் ஆண்டில் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’யில் வெளியானது. ‘பராசக்தி’ வெளிவந்தபோது ஒருபுறம் பார்வையாளர்களிடையே உருவாக்கிய ஆர்வம் மற்றும் உற்சாகம்... மறுபுறம் திரைப்படத்தைக் கண்டு கடுமையான அதிர்ச்சிக்குள்ளான மேல்தட்டு சமூகத்தினரின் எதிர்வினை என்பதாக அந்த ஆய்வுரை அமைந்தது.

பராசக்தி 70

‘தமிழன்’ என்ற புனைபெயரில் ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர் எனக் கருதப்படுபவர், முதல்வர் ராஜாஜி அவர்களுக்கு, ‘பராசக்தி’ திரைப்படத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதிய கடிதத்தினை அந்த ஆய்வுரை விலாவரியாக விவரிக்கிறது. கடிதத்தின் நோக்கம் ‘தடை’ என்றாலும், அது விவரிக்கும் காட்சிகள் ‘பராசக்தி’ திரைப்படம் பெற்ற மகத்தான மக்கள் ஆதரவிற்கு சாட்சியமாகிறது என்பதுதான் வேடிக்கை. ‘தமிழன்’, இந்தப் புனைபெயரே அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசியலைச் சுட்டத்தான். அதாவது ‘தமிழன்’ ஒருவர் திராவிடத் தமிழர் அரசியல் பேசும் சுயமரியாதை/ பகுத்தறிவுவாதக் கட்சியினரின் தரமற்ற படைப்பை, ரசனையை அம்பலப்படுத்த எடுத்த முயற்சியே கடிதம்.

கடிதம் எழுதியவர், தான் முதல்நாள் சென்னை அசோக் திரையரங்கில் படம் பார்க்கச் சென்றபோது கண்ட காட்சிகளை விவரிக்கிறார். ‘மனிதர்கள் பண்படாத மிருகங்கள், குரங்குகள் போல ஒருவர்மீது ஒருவர் தொற்றி ஏறி நுழைவுச் சீட்டு வாங்கப் பெரும் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்கிறார் அவர். `தமிழனால்’ அடித்தட்டு சமூக திரைப்பட ரசிகர்களின் உற்சாகத்தை ஏற்கவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. அதன் உச்சமாக ‘திரைக்கதை- வசனம்: மு.கருணாநிதி’ என்ற பெயர் திரையில் காண்பிக்கப்பட்டவுடன் எழுந்த கரவொலியும், உற்சாகக் கூச்சலும் அவரை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தமிழன் அருகில் இருந்தவரிடம் கேட்க, ‘இவர்தான் இப்போது தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான வசனகர்த்தா’ என்கிறார் அவர்.

தமிழனின் அதிர்ச்சி அத்துடன் முடியவில்லை. பின்னொரு நாளில் மூர் மார்க்கெட் பகுதிக்குச் சென்றபோது, அங்கே நாடகக் கலைஞர்கள் ‘பராசக்தி‘ வசனங்களை அதே முறையில் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார்கள். பலரும் கூடி நின்று ரசித்துவிட்டு அவர்களுக்குக் காசு கொடுத்து ஆதரவு தெரிவித்துவிட்டுப் போகிறார்கள். இந்த வரவேற்புகள், செயல்பாடுகள், ’தமிழனை’ ஆத்திரத்தின் எல்லைக்குத் தள்ளுகிறது. அரசு, மதம், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மீதும், சமூக அவலங்களை, அரசின் செயல்பாடின்மையை, குறிப்பாகப் பெண்களின் ஆதரவற்ற நிலையைப் பேசும் படம் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிடுமென அஞ்சி ‘தடை’ கோருகிறார்.

பராசக்தி 70

‘பராசக்தி படத்தை உடனடியாகத் தடை செய்யக் கோரியவர்கள் பட்டியலில் பெரிய மனிதர்களும் ஏராளம். கொச்சி மாகாண முன்னாள் நீதிபதியும் அமைச்சரும் கோயம்புத்தூர் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவருமான பரம்பி லோனப்பன் அவர்களில் ஒருவர். பரம்பி லோனப்பன் தட்டச்சு செய்தால் தன் உதவியாளருக்குத் தெரிந்துவிடுமென அஞ்சி தன் கைப்பட எழுதுகிறார். கோவை டயமண்ட் திரையரங்கில் அவர் கண்ட காட்சி, அவரைப் பதற வைத்து விட்டது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான அங்கு பராசக்தி பேசிய ‘கம்யூனிச சித்தாந்தம்’ உறுதியாக புரட்சியை உருவாக்கிவிடும் என்கிறார். அதே போல சேலம் எண்ணெய்/ உப்புப் பெரு வியாபாரி சின்னச்சாமி, ‘இன்னும் ஒரு நாள் கூட இந்தப் படம் ஓடக்கூடாது’ என முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறார். இதேவிதமாக ‘காமதேனு’ உரக் கம்பெனி அதிபர் பி.எஸ்.சுப்பராமன், சென்னை ஆனந்த் திரையரங்க உரிமையாளர் ஜி.உமாபதி என ‘தடை’ கோரியோர் பட்டியல் நீண்டது. புகார்களால் நிரம்பி வழிந்தது அலுவலகம். பெரும்பான்மையானவர்கள் தணிக்கைக் குழுவைச் சாடினர்.

பலரது கவலையும் இந்தப் படத்தைப் பார்த்துப் பெண்கள் ‘பண்பாட்டை’ இழந்துவிடுவார்கள் என்பதே. கல்யாணியைப் பாலியல் வன்முறை செய்த தன் கணவனிடம் ‘நானும் இதுபோல நாலு ஆண்களை கையைப் பிடித்து இழுக்கட்டுமா?’ எனக் கேட்கிறாள் அவரின் மனைவி. கல்யாணி பேசுகிறாள், ‘நான் இசைந்திருந்தால் காவல்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நீதிபதிகளும், கோடீஸ்வர பக்திமான்களும் என் மடியில் கிடந்திருப்பார்கள்’ என்று. சுயமரியாதையும் பகுத்தறிவும் பேசி குணசேகரனை இடித்துரைக்கும் விமலா சொல்கிறாள், ‘உன்னிடம் பணம் பறித்த ஜாலி பாராட்டிற்குரியவள். அவள் அதைச் செய்யாமல்போயிருந்தால், நீ சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பாய். ஏழைகளின் பரிதவிப்பை உணர வைத்தவள் அவள்தான். உன் சொந்தத் தங்கையைப் பற்றியே அழுது புலம்புகிறாயே, இந்த நாட்டில் பல்லாயிரம் கல்யாணிகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கவலைப்படு’ என்கிறாள். குணசேகரன் கேட்கிறான், ‘இவ்வளவு தெளிவாக சமூக உணர்வு பேசுகிறாயே, யார் கற்றுத் தந்தது’ என. விமலா, ‘எல்லாம் அண்ணாவிடமிருந்துதான்’ என்கிறாள் (பேரறிஞர் அண்ணா எனப் பொருள்பட!). இறுதியில் அவர்கள் திருமணம் மாலையின்றி, தாலியின்றி நடக்கிறது.

பராசக்தி 70

ராஜாஜி அவர்களின் நடவடிக்கை குறித்த தகவல்கள் வேடிக்கையான முடிவை எட்டுகின்றன. உளவுத்துறை அதிகாரியிடம் பராசக்தி குறித்த அறிக்கை கேட்கிறார் முதல்வர் ராஜாஜி. அன்றைய அதிகாரி பெரும் பாராட்டுரை வழங்குகிறார், திரைப்படம் எந்தவித வன்முறையையும் தூண்டாது என்கிறார். திகைக்கும் தலைமைச் செயலர் புல்லா ரெட்டி, ‘ஓர் அறிஞர் குழுவை அமைத்துப் படத்தைப் பார்த்து அறிக்கை தரச் சொல்லலாம்’ என்கிறார். ஆனால் அவமானத்தால் முகம் சிவக்கும் ராஜாஜி அதை நிராகரித்து ‘இதுபோன்ற மோசமான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பிரபலமாக்க வேண்டாம். தணிக்கைக் குழுவின் மறு ஆய்விற்கு அனுப்பினால் போதும்’ என்று முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அதற்குள் ‘பராசக்தி’ ஐம்பது நாள்களையும் கடந்து வெற்றிகரமாகப் பயணிக்கிறது. மறு தணிக்கை அறிக்கையிலும் இரண்டு மிகச் சாதாரணமான வார்த்தைகளே வெட்டப்படுகின்றன. இந்த வழியிலும் ராஜாஜியை வெல்கிறது பராசக்தி. தணிக்கையில் தப்பியதற்கு காரணம், ஒரு குறிப்பிட்ட சனாதனத் தரப்பு நேரடியாகத் திரைப்படத்தில் அடையாளப்படுத்தப்படாததும், கொள்கைச் சமரசமுமே என்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். ஆனால் அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் திருமூலர் வாக்கினை முன் வைத்தது, நுட்பமாக திராவிடத் தமிழர் சமயம் குறித்த பார்வையை மொழியவே. எனவே அது சமசரசமன்று, பகுத்தறிவுவாதத்தின் விரிவாக்கப்பட்ட நிலைப்பாடு என்றே கருதவேண்டும்.

பராசக்தி 70

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல், பராசக்தியில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பெரும்பான்மையான நடிகர்கள் புதுமுகங்கள். ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ‘மு.கருணாநிதி – திரைக்கதை வசனம்‘ என்ற செய்தியே பெரும் ஆரவாரமான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. தி.மு.க தனது பரப்புரை உத்திகளில் ஒரு பகுதியாகவே திரைப்படங்களைக் கருதியது. இறுதியில் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காகக் கல்யாணியும், அவளைப் பாலியல் வன்முறை செய்த பூசாரியைத் தாக்கியதற்காக குணசேகரனும் குற்றவாளிகளாக்கி நிறுத்தப்படுகிறார்கள், அவர்களின் அண்ணன் நீதிபதியாக அமர்ந்திருக்கிறார். நீதிமன்றக் காட்சிகளும் வசனங்களும் தமிழில் மிகப் பிரபலமானவை. அதன் அருகில் நெருங்கக்கூட இதர படங்கள் இல்லை. அப்படியே நெருங்குபவையும் கலைஞரின் ‘மனோகரா’, ‘மலைக்கள்ளன்’, ‘ராஜாராணி’ போன்றவையே.

பராசக்தியின் முக்கியத்துவம் என்பது, அது தமிழ் சினிமாவை நவீனத்துவத்துக்கு அழைத்துவந்தது என்பதுதான்!