Published:Updated:

சின்னப்பா to சிவகார்த்திகேயன்... -லவ் டைம் ட்ராவல்!

சின்னப்பா to சிவகார்த்திகேயன்... -லவ் டைம் ட்ராவல்!
சின்னப்பா to சிவகார்த்திகேயன்... -லவ் டைம் ட்ராவல்!

தமிழ் சினிமாவில்  பி.யு.சின்னப்பா காலத்தில்  இருந்து சிவகார்த்திகேயன் காலம் வரைக்கும் காதல் பூக்கும் அபூர்வ தருணங்கள் எப்படில்லாம்  சேஞ்ச் ஓவர் ஆகிருக்குனு லைட்டா ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோமா?

பி.யு.சின்னப்பா, பாகவதர் காலத்துப் படத்தில் எல்லாம் ஹீரோவும் ஹீரோயினும்  காதலைச் சொல்லிக்கிறாங்களாங்கிறதே சத்தியமா தெரியாது.  இப்போ இடைவெளியே இல்லாம நிற்கிற ஜோடி  மாதிரி எல்லாம் அப்போ இல்லை. ஹீரோ திருவான்மியூரில் நின்னா ஹீரோயின் திருச்சியில் நிற்பாங்க. அவ்வளவு கேப். (என்ன ஒரு ஜெனரேசன் கேப்பு!). அப்படியே ஒருவழியாக லவ்வைச் சொன்னாலும் நேரடியாகச் சொல்லவே மாட்டாங்க. எட்டுக் கட்டையில் இழுத்து  ஏழு பாட்டுப் பாடிதான் சொல்வாங்க. அட சந்தேகம்னா இப்போகூட போய் படத்தைப் பாருங்க. ஆனா ஒண்ணு, என்ன சொல்றாங்கனு புரிஞ்சு கண்டுபிடிக்கிறதுக்குள்ள நம்ம ஏர்போர்ட் கூரையே 800 தடவை விழுந்திடும் ஓகே வா?

அதுக்குப்பிறகு அப்படியே எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துக்கு வந்தோம்னா இவங்க ஜோடி சேர்றதுக்கு முன்னாடியே முறை வெச்சுக் கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க.. இவங்களுடைய காதல்தான் அழுத்தமா இருக்கும்னு பார்த்தா, பேசும்போதுகூட லத்த்த்தா.. னு இழுத்துதான்  நாயகனோ,  அத்த்த்த்தான்... னு இழுத்துதான் நாயகியோ கூப்பிட்டுக்குவாங்க. ஹீரோ ஏதாவது சாகசம் பண்ணிட்டார்னா அடுத்த  பத்தாவது நிமிசத்துல வேற என்ன? காதல்தான்... டூயட்தான்...

ரஜினிகாந்த், கமல்ஹாசன்னு 80 -களின் ஹீரோக்கள்  படம்லாம் வேற லெவல். பெரும்பாலும்  ஹீரோவும் ஹீரோயினும் ஆரம்பத்தில் முறைச்சிக்கிட்டேதான் திரிவாங்க, திடீர்னு ஹீரோ ஊருக்கு நல்லது பண்ணி கெத்து காட்டுவாப்ல. திடீர்னு ஹீரோயினுக்கு லவ்னு ஒண்ணு வரும் பாருங்க, அப்படி ஒரு லவ். காலாலேயே தரையில் அரைவட்டம் வரைவாங்க. ராமராஜன் நடிச்ச முக்கால்வாசிப் படங்களே இதுக்கு சாட்சி. ஆம்பளைங்கதான் லவ்வைச் சொல்லணும்கிற ட்ரெண்டை அடியோட மாற்றி வெச்ச  பெருமை இவங்களோடதுதான்.

அப்படியே விஜய், அஜித் செட் படங்களுக்கு வந்து பார்த்தோம்னா ஹீரோவைப்பற்றிப் புரிஞ்சுக்காமலேயே ஹீரோயின்  இருப்பாங்க. ஒருகட்டத்தில் இவர் இதெல்லாம் எதுக்காக பண்றார் தெரியுமா? இவங்க குடும்பத்தை என்ன பண்ணாங்கனு தெரியுமா ரேஞ்ச்ல ஹீரோவுக்கு வலது பக்கமா நிற்கிற ஒரு கேரக்டர் ஃப்ளாஷ்பேக்கை ஆரம்பிச்சு வைப்பார், ஃப்ளாஷ்பேக் முடியற நேரம்  ஹீரோயின், ஹீரோ நெஞ்சுல நாலு புள்ளி நாலு வரிசையில் கோலம் போட்டுக்கிட்டு இருப்பார்.  அட காதல் வந்துருச்சாம்ங்க. பாக்காத காதல், பேசாத காதல், தியாகக்காதல்லாம் பெத்த ஃபேமஸானது இவங்களாலதான். குடோஸ் ப்ரோ!

இந்த சிம்பு, தனுஷ் காலம்லாம் கிட்டத்தட்ட பி.யு.சின்னப்பா காலத்தோட அப்டேட்டட் வெர்சன்னு வெச்சுக்கலாம்; அட பதறாதீங்க, அதாவது திடீர்னு ஹீரோவும் ஹீரோயினும் ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்துனு டூயட் ஆடிட்டு இருப்பாங்க,  ஏன் எதுக்குனு கேட்கக் கூடாது. ரெண்டு பேருக்கும் காதல் வந்திடுச்சுனு நாமதான் ஒரு முடிவுக்கு வந்து புரிஞ்சிக்கணும். ஏன்னா அவங்களுக்கு ரொம்ப வேலை இருக்கு அவங்க ரொம்ப பிஸி. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இவங்க காலத்துலதான் வாடா போடா வாடி போடிங்கிற கான்வர்சேசனையே ஆரம்பிச்சு வெச்சாங்க.

இப்போ சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி காலம் வந்திடிச்சுனு  நான் சொல்லலை,  வெளியில சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எல்லாத்தையும் மேல இருக்கிறவங்களே பண்ணி முடிச்சிட்டாங்க, புதுசா என்ன பண்றதுனு தெரியாம 90-ஸ் ல கொஞ்சம் 2000-த்துல கொஞ்சம்னு கலந்துகட்டி பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. அதுனாலேயோ என்னவோ காதல் படங்கள் கம்மியாகி வெரைட்டி படங்கள் அதிகரிச்சுருச்சுடுச்சி.  

 ஆனாலும் தமிழ் சினிமாவில், சின்னப்பா காலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் காலம் வரைக்கும் மாறவே மாறாத ஒரு முக்கியமான  விஷயம் ஒண்னு இருக்கு. அது என்னன்னு இந்த வீடியோவைப் பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க...

- ஜெ.வி.பிரவீன்குமார்.