Published:Updated:

ரகுவரன் டைட்டிலில் விஜய் சேதுபதி படம் - இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேட்டி!

ரகுவரன் டைட்டிலில் விஜய் சேதுபதி படம் - இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேட்டி!
ரகுவரன் டைட்டிலில் விஜய் சேதுபதி படம் - இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேட்டி!

யக்குநர் ராம் உடன் நிழலாக பயணித்து, அவரின் உதவியாளராக இருந்த ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குநராகியிருக்கும் படம் “புரியாத புதிர்”. விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பெயர் நேற்றுவரை “மெல்லிசை”. இனிமேல் “புரியாத புதிர்”. திடீர் டைட்டில் மாற்றம், நீண்ட நாளாக ரிலீஸாகாமல் இருக்க காரணம் என்ன என்று பல கேள்விகளுடன் இயக்குநரைச் சந்தித்தோம். 

மெல்லிசை ஏன் புரியாத புதிர் ஆனது? 

த்ரில்லர் படங்குறதுனால, டைட்டில் இன்னும் பலமா இருந்தா நல்லாயிருக்கும்னு முடிவெடுத்து தான்  மாத்திருக்கோம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முதல் படம் “புரியாத புதிர்”. சூப்பர் குட் ஃபிலிம்ஸிடம் அனுமதி கேட்கவும், பணம் எதுவுமே கேட்காம, உடனே ஓகே சொல்லிட்டாங்க. 

என்ன கதை? 

சிட்டியில் ஒரு நாளில் லட்சம் நபரையாவது கடந்து போறோம். இருந்தாலும் நீங்க தனி மனிதர் தான். பக்கத்து வீட்டுல யாரு இருக்கானு கூட நமக்குத் தெரியாது. அதான் இந்தப் படத்தோட ஒன்லைன். அதுக்காக நகரம் சார்ந்த கதைனு நினைக்கவேண்டாம். இது த்ரில்லரான நகரமயமாக்கல் கதை. இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே இசைத் துறையைச் சேர்ந்தவர்கள். நமக்குப் பிடிச்ச இசையை திரும்பத் திரும்ப நாம் கேட்போம். அந்த இசையில் ஒரு படபடப்பு இருக்கும். அதுபோல இந்தப் படத்திலும் ஒருவித படபடப்பு இருக்கும். படம் பார்க்கும்போது நிச்சயம் நீங்களும் அந்த படபடப்பை ஃபீல் பண்ணுவீங்க. 

விஜய்சேதுபதி இந்தப் படத்தை எப்படி ஓகே செய்தார்?  

சூதுகவ்வும், பீட்சா படம் வெளியான டைம். சேஞ்ச் ஓவர் ஹீரோவா எனக்கு அவர் தெரிஞ்சார். உடனே விஜய்சேதுபதியிடம் போன்ல பேசுனேன். “ரஞ்சித் நான் 2016 வரைக்கும்பிஸி, நான் கதையெல்லாம் இப்போ கேக்குறது இல்ல’னு சொன்னார். “படம் பண்ணாட்டாலும் பரவாயில்ல, கதையை மட்டும் கேளுங்க”ன்னு சொன்னேன்.  சாயங்கால நேரம், காஃபி ஷாப், 45 நிமிடத்தில் மெல்லிசை மொத்தக் கதையையும் சொன்னேன். யோசிக்காம உடனே ஓகே சொல்லிட்டாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு சொன்னார். திடீர்னு ஒரு நாள் நாம படம் பண்ணலாம், நீங்க ரெடியானு கேட்டாரு, எந்தவித முன்னேற்பாடுமின்றி ஆரம்பித்து 62 நாளில் படப்பிடிப்பை முடிச்சோம். செம த்ரில்..

இயக்குநர் ராமுடன் உங்களுக்கு மறக்கமுடியாத தருணங்கள்? 

விஸ்காம் முடிச்சுட்டு வேலை இல்லாம இருந்த நேரத்துல நண்பரின் உதவியால் ராமின் அறிமுகம் கிடைத்தது. அப்போ, 

“என்ன பண்றீங்க” என்று கேட்டார். 

“உதவி இயக்குநரா வேலைத் தேடுறேன்” என்றதுமே , “வாங்க, நான் படம் பண்ணிட்டுத்தான் இருக்கேன். வந்து சேர்ந்துக்கோங்க” என்றார். சினிமா மட்டுமல்லாமல் என்னுடைய ரசனை சார்ந்த அனைத்தையுமே எனக்கு கற்றுத்தந்தவர். நான் சினிமாவில் சாதிக்கவேண்டும், நல்ல படங்களை எடுக்கவேண்டும் என்று என்னை தூண்டியதற்கு முதல் காரணம் ராம் தான்.  நானும் அவரும் நீண்ட நாள் பயணத்திலேயே கழித்திருக்கிறோம். எந்த ப்ளானும் இல்லாம ஆந்திரா வரைக்கும் பைக்லயே போய்ட்டு, டீ சாப்ட்டுட்டு சென்னை ரிட்டண் ஆய்டுவோம். அதிகமா இரவு நேரத்துல தான் சுத்துவோம். எங்கள மாதிரி இரவில் சென்னையை வேற யாரும் பார்த்திருக்கமாட்டாங்க.  ஏன் அப்படியெல்லாம் போனோம்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியவில்லை. ராம் நல்ல ஆசான்.

இயக்குநர்கள் இறக்குமதியாகிட்டே இருக்கீங்க. ஆனா தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதே? 

எந்த தொழிலும் ஈஸி கிடையாது. நமக்கான வேலை என்னவோ அதை செஞ்சிட்டே இருக்கணும். முயற்சி செய்துகொண்டே இருந்தா கண்டிப்பா சாதிக்கலாம், அதுதான் என்னோட ஃபார்முலாவும் கூட. 

மாற்று சினிமானு சொல்லுறாங்களே, அது பற்றி ? 

மிகைப்படுத்தல் இல்லாமல் யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சினிமா தான் மாற்று சினிமானு சொல்வேன். அந்த மாதிரி படங்கள் மூலமா வசூலும் கிடைத்தால் வெற்றி பெற்ற மாற்று சினிமான்னு சொல்லலாம். 

“புரியாத புதிர்” படப்பிடிப்பு முடிந்தும், ரிலீஸாகாம இருக்க என்ன காரணம்? 

நல்ல படைப்புங்குறது காலம் கடந்து பார்க்கும்போதும் புதிதா இருக்கணும்.  படம் முடிச்சி கொடுத்து ஒரு வருடம் ஆகிடுச்சி, ஆனாலும் சமகாலத்திற்கு ஏற்றமாதிரியான படம் தான் புரியாத புதிர். நிச்சயம் இந்த நவம்பர் ரிலீஸ். இந்த வருடத்தின் விஜய்சேதுபதியின் ஏழாவது படம் “புரியாத புதிர்”.

- பி.எஸ்.முத்து-