30 நாட்களில் சினிமா விமர்சகர் ஆவது எப்படி ?

முப்பது நாட்களில் சமூக வலைதளங்களில் வித்தியாசமான சினிமா விமர்சகனாவது எப்படி? இப்போ ஒரு சினிமாவைப் பற்றிப் பாராட்டிப் பேச, எழுதக் குறைந்தபட்ச தகுதி என்ன? எப்போ ஒரு படத்தைப் பாராட்டலாம், எப்போ திட்டலாம், எப்போ சைலன்ட்டா இருக்கணும், எப்போ வயலன்ட்டா எகிறணும். வாங்க கத்துக்கலாம்...

1. படம் ரிலீஸ் ஆன சமயத்தில் யாரும் அதை சீண்டக் கூடாது. ஏன்னா நாம அந்தப் படத்தைப் பற்றி முழுசாத் தெரியாமல் பாராட்டியோ திட்டியோ சொல்லிடுவோம். படம் ஓடித் தொலைஞ்சிட்டாலும் பரவாயில்லை. ஃபிளாப் ஆகிருச்சுனா?

 

2. தியேட்டர்ல நல்லா ஓடுற படம் நல்ல படமா இருக்க சான்ஸே இல்ல. இதில் தெளிவா இருக்கீங்களா...? ஏன்னா, இதுதான் முதல் படி. இங்கிருந்துதான் நீங்க படிப்படியா மேலே போகணும்.

 

3. படம் வந்து பாடாய்ப்பட்டு ஏதாவது ஒரு சேனல்ல வெற்றிகரமான நாற்பதாவது முறையாகப் போடுவான் பாருங்க, அப்போ தொடுக்கணும் நம்ம விமர்சனக் கணையை. அதுல அவனவன் கண்ணாமுழி பிதுங்கித் தெறிக்கணும்.

 

4. நம்ம விமர்சனத்தைத் தமிழில் படிச்சுப் புரிஞ்சுக்கவே ஒரு கோனார் தமிழ் உரை வேணும். புரியற மாதிரிப் படம் எடுத்து விடுறது அவிய்ங்க வேலை. யாருக்கும் புரியாத மாதிரி விமர்சனம் பண்றது நம்ம வேலை, அவனவன் வேலைய ஒழுங்கா செய்யணும். அது ரொம்ப முக்கியம்.

 

5. இது சோஷலிச சோகப் பிண்ணனியில் சோற்றுக்கே அல்லாடிய ஒரு சகாப்தத்தின் எச்சம் பற்றிய கதை.. கதை மாந்தர்கள் நடிக்கவில்லை, உலாவியிருக்கிறார்கள்.. உயிருடன் அளாவியிருக்கிரார்கள்.. முன் நவீனத்துவத்திற்கு மூஞ்சியில் விடப்பட்ட அறை. பின் நவீனத்துவத்திற்குப் பின்னால் விடப்பட்ட உதை, அப்படிங்கற ரேஞ்சுல இருக்கணும். நம்ம தமிழைப் படம் வரைஞ்சு பாகம் குறிச்சாலும் யாருக்கும் புரியக் கூடாது. லைக்கைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருவாய்ங்க.

6. விமர்சகனா இருக்கிறது முக்கியம் இல்லை, விமர்சகனா வாழணும், ஏதாச்சும் வித்தியாசமாப் பண்ணிகிட்டே இருக்கணும்.. இல்லைனா இப்படி ஒரு ஆள் இருக்கிறதையே மறந்துருவாய்ங்க. அதனால பொழுதுபோகலைன்னா ஏதாச்சும் பழைய ஹிட் படத்தைத் தெருவுக்கு இழுத்துக்கிட்டு வந்து தாளிக்கணும். இல்லைனா, பழைய ஃபிளாப் படத்தைப் பற்றி 200 வரிக்கு மிகாமல் புகழணும்.

 

7. இந்த விதி எல்லாம் ஆப்ப சோப்பைக படத்துக்கு மட்டும்தான். அவிங்கதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாய்ங்க. ஓவர் மமதையில் இடம் தெரியாமலும் காலை வெச்சிடக் கூடாது. அப்புறம் சிக்கிச் சின்னாபின்னமாகிருவோம். பரந்த மனப்பான்மை இல்லாம பரம்பரையவே தோண்டித் திட்டுவாய்ங்க. நம்ம ஃபிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிற ஒண்ணு ரெண்டு பொண்ணுகளுக்கும் ரெக்வெஸ்ட் அனுப்பிக் கொல்வாய்ங்க விவகாரம் பிடிச்ச பயபுள்ளைக. வேணும்னா ஹாலிவுட் படத்து நடிகர்களை எவ்ளோ வேணும்னாலும் திட்டிக்கலாம். கண்டுக்க மாட்டாய்ங்க.

 

8. ரொம்ப முக்கியமான ரூல் என்னன்னா, எந்த விமர்சனம் கொடுத்தாலும் நடுவுல கொஞ்சம் மானே தேனே மாதிரி, டாம் ஹேங்க்ஸ், மார்லன் பிராண்டோ, அப்புறம் ரெண்டு மூணு கொரிய டைரக்டர்கள் பேரை நுழைச்சு விட்ருங்க. அப்போதான் விமர்சனம் இன்டர்நேஷனல் டச்ல இருக்கும். 

 

- சிவகுமார் கனகராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!