Published:Updated:

"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்!" - சீனு ராமசாமி பேட்டி

Vikatan Correspondent
"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்!" - சீனு ராமசாமி பேட்டி
"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்!" - சீனு ராமசாமி பேட்டி

“என்னிடம் எந்தச் செய்தியும், யாருக்கும் கிடையாது. வாய்மொழி அறிவுரையோ, வழிகாட்டியாகவோ அல்லது இப்படித்தான் செயல்படவேண்டும் என்று யோசனை சொல்லும் அளவிற்கு என்னிடம் எதுவுமில்லை. ஏனெனில் நானே கண்டுப்பிடிப்புகளில் தீவிரமாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியத்திலேயே முடிகிறது. எந்த பந்தில் எந்த விக்கெட் விழுமென்பது முன்னரே தெரிந்தால், அதில் சுவாரஸ்யமே கிடையாது. முதல் படத்தில் இருந்த அதே பதற்றமும் படபடப்பும் இன்றும் என்னிடம் மீதமிருக்கிறது. நான் பார்க்கும் அனைத்துமே கதைகளாகத்தான் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த திரைமொழியில், ஓர் வாழ்வியல் சினிமாவை நேர்மையான படங்களாக பதிவு செய்யத்தான் காத்துக்கிடக்கிறேன். அதற்காக என்னுடைய காலத்தைத் தொலைத்திருக்கிறேன். என் நாட்கள் கரைந்துபோயிருக்கிறன. அதற்காக எனக்கு வருத்தமில்லை, மகிழ்ச்சி மட்டுமே”  என்று சிரிக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல, அவரின் வீட்டிற்குச் சென்றால் இனிப்புடன் வரவேற்கிறார் சீனுராமசாமி.  என்னாளும் எனக்கு சினிமா தான், என்று சினிமாவில் மூழ்கிக்கிடக்கும் இவரிடம் சில கேள்விகள்... 

“உங்களுக்கான கதைக்களங்கள் எங்கிருந்து பிறக்கின்றன? ”

“வேளாங்கண்ணி கோவிலுக்கு போயிருந்த சமயம், மனைவி உடல் நலமற்று இருந்த கணவரின் தலையில் கைவைத்து ஜெபிப்பதைப் பார்த்தேன். அந்த இடத்திலிருந்து தான் நீர்ப்பறவை படத்திற்கான கதைக்களம் பிறந்தது. இதுமாதிரி என்னுடைய படைப்புக்களங்கள், சினிமா மூலம் நான் பேசவிரும்புவது அனைத்துமே நான் சந்தித்தது, பார்த்தது, பழகியது என என்னுடைய விருப்பமும், ஏக்கமும் நிஜத்தோடு காட்சிப்படுத்தும்போது முழுமையான படைப்பாக உருவாகிறது. சினிமாவில் நடிப்புனு சொல்லுறது, ஆக்‌ஷன் கிடையாது, எப்போதுமே ரியாக்‌ஷன் தான்.என்னுடைய ஏக்கம் ரசிப்பவர்களின் மனத்தில் கண்ணீரை வரவழைக்கும், என்னுடைய விருப்பம் உங்களின் மனதுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதோ ஒரு சொல்லில் இருந்து, ஒரு படத்தின் கதையை பிடித்துக்கொள்வேன்” 

“யுவன்ஷங்கர்ராஜா - வைரமுத்து கூட்டணி எப்படி சாத்தியமாகிறது?” 

“யுவனுடன் வேலைசெய்யவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் விருப்பம். என்னுடைய படங்களின் பட்ஜெட் குறைவாக இருந்ததால், யுவனை சந்திக்கமுடியாமல் இருந்தது. இடம்பொருள் ஏவல் படத்தில் அதற்கான சாத்தியம் உருவானது. வைரமுத்துவிடம் கேட்கவும், உடனே சம்மதம் தெரிவித்தார். அதே கூட்டணி மீண்டும் இணைந்தால்.... அது தான் தர்மதுரை.” 

“உங்க படங்களில் நடிகர்களை விட, கதாபாத்திரங்கள் அதிகமாக பேசுதே?”

“டோல்கேட்ல போய் நில்லுங்க, வெள்ளரி பிஞ்சு வித்துக்கிட்டு இருக்குற பொண்ணு, பக்கத்துல பாருங்க ஒரு அக்கா, அங்கிருந்து ஓடிவந்து நம்ம தலையில் கைவச்சி நல்லா இருப்பான்னு வாழ்த்துவாங்க. இப்படி நான் பார்த்த, என்னைப் பாதிச்சதும் தான் என்னுடைய படங்களில் கதாபாத்திரங்களா மாறிவிடுகிறது. குறிப்பா திருநங்கைகள் தான் ரியல் கம்யூனிஸ்ட்ன்னு சொல்லுவேன். அவங்களுக்குனு பெருசா சொத்து சேர்க்கப்போறது கிடையாது. ஒருமுறை ரயிலில் போய்கொண்டிருக்கும் போது, திருநங்கை ஒருவரை சந்தித்தேன். தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பவும், கோவத்தில் என்னக்கா வேணும்? என கேட்டேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். காரணம் அக்கான்னு நான் கூப்பிட்டது தான். அவங்க கெளரவமா வாழ்றதுக்கான வாய்ப்பை நாம ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும், அவங்க நல்லா இடத்துக்கு வந்துவிடுவார்கள். என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு படத்தின் கதாபாத்திரங்கள் என்பது, நம்முடைய வழ்க்கையை எப்படி புரிந்துவைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது தான். இந்த உலகமே எனக்கான கதாபாத்திரங்கள் தான். ” 

“தென்மேற்குப் பருவகாற்று படத்திலிருந்து றெக்க படம் வரை விஜய்சேதுபதியின் வளர்ச்சி எப்படி இருக்கு?”

“விஜய்சேதுபதி சிறந்த நடிகர் என்பதை தென்மேற்குப் பருவகாற்று படத்தின்பொழுதே தெரியும். வித்தியாசமுள்ள கதாபாத்திரத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என சரியான வேகத்தில் விஜய்சேதுபதி வளர்ந்துவருகிறார். எதிர்காலத்தில் அவரின் உயரம் நம்மை நிச்சயம் ஆச்சரியப்படவைக்கும்.”

“எதிர்காலத்தில் தமிழ்சினிமா எப்படி இருக்கணும்? ”

“இப்போ இருக்குற சமரசங்களைக் கலைந்து, அர்த்தமிகுந்த தூய்மையான சினிமாவை கொண்டுவரணும். அதிலும் குறிப்பாக இந்திய சினிமாவில், தமிழிலிருந்து பலவகையான படங்கள் வெளிவரணும். அதில் என் பங்கும் இருக்கவேண்டும். அதையும் என் காலம் முடிவதற்குள் செய்துவிடவேண்டும் என்ற தவிப்பு எப்பொழுதுமே உண்டு. அந்த தவிப்பு தான் என்னை இப்பொழுதும் இயக்கிக்கொண்டிருக்கிறது. அந்த பாதையிலேயே நான் போய்க்கொண்டிருக்கிறேன். அதற்கான உற்சாகம் மக்களின் ஆதரவிலும், கைத்தட்டலிலும் தான் இருக்கிறது.” 

“நீண்ட நாளாக ரிலீஸாகாமல் இருக்கும் “இடம் பொருள் ஏவல்” எப்போ ரிலீஸ்? ”

“படம் ரொம்ப நல்லா வந்திருக்கிறது. நவம்பர் மாதம் ரிலீஸாகிவிடும். தர்மதுரை மாதிரி இந்தப் படமும் ஓர் வாழ்வியலை பேசும். அந்த வாழ்வியல் ரசிகர்களுக்கு நெருக்கமான விஷயமாக மாறும். அடுத்தப் படத்திற்கான கதையும் தயார். அதற்காக மம்முட்டியிடம் பேசியிருக்கிறேன். இன்னும் படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. சிக்கிரமே அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கிவிடுவேன்.  

இறுதியாக, வாழ்க்கையென்பது கொண்டாட்டம். அவரவர்களுக்கான பாதையில் நகர்ந்துகொண்டே இருக்கவேண்டியது தான். இதில் மகிழ்ச்சியை மட்டும் எப்பொழுதுமே சேகரித்துவைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்த ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் மற்றவர்களுக்காக, மற்றவரை உயர்த்துவதில் இருந்தால் மட்டுமே அந்த மகிழ்ச்சி திருவிழாவாக மாறும். இந்த தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்கள்.... வாழ்த்துகள்” 

- பி.எஸ்.முத்து-