Published:Updated:

“நான் பெயர் வைத்த பிள்ளைகள் சோடை போனதில்லை” எஸ்.ஏ.சந்திரசேகர்!

“நான் பெயர் வைத்த பிள்ளைகள் சோடை போனதில்லை” எஸ்.ஏ.சந்திரசேகர்!
“நான் பெயர் வைத்த பிள்ளைகள் சோடை போனதில்லை” எஸ்.ஏ.சந்திரசேகர்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களைத் தொடர்ந்து விஜய்ஆண்டனியின் அடுத்தப் படம் “சைத்தான்”. டைட்டிலில் வெரைட்டி காட்டுவது மட்டுமில்லாமல், இவர் நடித்து, தயாரித்த அனைத்துப் படங்களுமே வசூலிலும் வெரைட்டி ரகம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய்ஆண்டனியுடன் அருந்ததி நாயர், சாருஹாசன், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் முருகதாஸ் நடித்திருக்கும் சைத்தான், ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர்.  இதன் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே, படத்தின் முதல் ஐந்து நிமிடக்காட்சியும், ஒரு பாடலும் இசைவெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது தான்.  முன் ஜென்மத்தில்,  விஜய் ஆண்டனியை ஒருவர் கொன்று விடுகிறார். முன் ஜென்மத்தில் நடந்த விஷயங்கள், இந்த ஜென்மத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு நினைவில் வந்து போகிறது. அதனால் பாதிக்கப்படும் விஜய் ஆண்டனி, அந்த கொலையாளியை பழிவாங்கினாரா, விஜய் ஆண்டனிக்கு என்னாவானது என்பதே படத்தின் ஒன்லைன். 

“விஜய்ஆண்டனி ஒரு சைத்தான்.... இந்த மாதிரியான நெகட்டிவ் டைட்டில் தேர்ந்தெடுத்தாலே, மக்கள் மத்தியில், படத்தை விற்கும் போது வேறுவிதமான ரெஸ்பான்ஸ் தான் வரும். அதையும் தாண்டி தைரியமா டைட்டிலைத் தேர்ந்தெடுப்பது தான் இவரோட வெற்றி. அதுமட்டுமின்றி கதையை தேர்ந்தெடுக்கும் விதம், அதே படத்திற்கு இசையமைத்து, நடிப்பது ரொம்ப சவாலான விஷயம். இதற்கெல்லாம் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய பலம், பாத்திமா விஜய் ஆண்டனி மேடம் தான். இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடியே, என் படத்தோட இயக்குநராக மாறிட்டார் பிரதீப்.  பிரதீப்பும் ஒரு சைத்தான் தான். அந்தளவுக்கு கடின உழைப்பு இவரிடம் உண்டு” என்று கூறினார் சிபிராஜ்.   

இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் தான். “உடல் நிலையால், மூன்று மாதமா எங்கயுமே வெளிய போகமுடியலை. இந்த நிகழ்ச்சிக்கு கூட வரமாட்டேன்னு தான் சொல்லியிருந்தேன். “நீங்க வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னு” விஜய் ஆண்டனி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக தான் வந்தேன்.  நான் தயாரித்த சுக்ரன் படத்தில் தான்  விஜய் ஆண்டனி இசையமைப்பாளரா அறிமுகமாகிறார். அப்போ உன் பெயரென்னனு கேட்டா, அக்னின்னு சொன்னார்.  உன்னோட உண்மையான பெயர் விஜய் ஆண்டனியே அழகா இருக்கே, ஏன் பெயரை மாற்றனும். விஜய் ஆண்டனினே பெயரை வச்சிக்கிறீங்களானு கேட்டேன்.  உடனே சரின்னு சொல்லிட்டார். என்னா நான் பெயர் வைத்த பிள்ளைகள் யாருமே சோட போனதில்லை. இவர் படங்களின் டைட்டில் தான் நெகட்டிவாக இருக்கும், ஆனால் விஜய் பாசிட்டிவானவர்” என்று முடித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

தொடர்ந்து, அமைதியாக பேசத்தொடங்குகிறார் விஜய்ஆண்டனி, “ இரண்டு வருஷமா, சைத்தான் படத்தின் கதையோடு அமைதியாக காத்துக்கொண்டிருந்தார் இயக்குநர் பிரதீப். அவர் நினைத்த தருணம் வந்துவிட்டது. பொதுவா ஒரு படம் ரெடியாக, ஐந்து மாதங்களே போதுமானது. ஆனா இந்தப் படம் தயாராகவே ஒன்றரை வருடம் ஆகிடுச்சி. அவ்வளவு நாளும் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி.  என்னுடைய முதுகெலும்பா இருந்து, என் படங்களின் வெற்றிக்கு என் மனைவி பாத்திமா தான் காரணம். இவர்களால் தான் நான் இருக்கிறேன்னு நினைக்கிறேன்” என்று முடித்தார் விஜய் ஆண்டனி. 

-பி.எஸ்.முத்து-
படங்கள்:பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு