Published:Updated:

'இளையராஜா-வைரமுத்து போல இப்போது இவர்கள்!’ - மாவீரன் கிட்டு இசை விழா அப்டேட்!

'இளையராஜா-வைரமுத்து  போல இப்போது இவர்கள்!’ - மாவீரன் கிட்டு இசை விழா அப்டேட்!
'இளையராஜா-வைரமுத்து போல இப்போது இவர்கள்!’ - மாவீரன் கிட்டு இசை விழா அப்டேட்!

Icewear சந்திரசாமி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஆர். பார்த்திபன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மாவீரன் கிட்டு. 1980களின் இறுதி + 90களின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். கூடுதலாக, முதன்முறையாக வசனகர்த்தாவாகவும் இந்தப் படத்தில் அவர் பணியாற்றியுள்ளார். இமானின் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீடு சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர்கள் சீனு ராமசாமி, பாண்டிராஜ், பா.இரஞ்சித், பாலாஜி தரணிதரன், ரவிக்குமார், ராம்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நடிகர்கள் சாந்தனு, விக்ராந்த், அஷோக் செல்வன், நடிகை கேத்தரின் தெரசா, ஒளிப்பதிவாளர்கள் வேல்ராஜ், பாலசுப்ரமணியெம் என்று பலரும் வந்திருந்தனர்.    

அம்மா கிரியேஷன்ஸ் சிவா:  

“புதிதாக வந்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே சரியான குழுவைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எதையும் நேர்மையாக, தைரியமாக சொல்லக்கூடிய இயக்குநர் சுசீந்திரனுக்கு இது வெற்றிப்படமாக அமையும். விஷ்ணு விஷாலின் சின்சியாரிட்டியை நான் கவனித்திருக்கிறேன். இந்த வயதில் கதையை தேர்வு செய்வதில் உள்ள தெளிவு உங்களுக்கு திரையுலகில் இன்னும் பெரிய இடத்தைத் தரும். பார்த்திபன் ஒரு கதையில் நடிக்கிறார் என்றால், அது நிச்சயம் அர்த்தமுள்ளதாக இருக்கும். 
இமான் - யுகபாரதி பற்றி சொல்லியே ஆகவேண்டும். இளையராஜா வைரமுத்து இணை மாதிரி இப்போது இமான் யுகபாரதி இணை இருக்கிறது. அந்த அளவுக்கு வேக வேகமாக பாடல்களை பதிவு செய்து கொடுப்பார் இமான். இருவருக்கும் எந்த அளவுக்கு ஒரு புரிதல் இருந்தால், அப்படி ஒரு வேகம் ரெகார்டிங்கில் வரும் என்பதை நான் அறிவேன். ஒரு பாடலை எத்தனை வேகமாக தயாரிப்பாளருக்கு கொடுக்கிறீர்கள் என்பதையும் அறிவேன். பாடல் பதிவு செய்து வாங்குவது தயாரிப்பாளர்களுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொள்கிறீர்கள். தொடர்ந்து இதே போல பல ஆல்பங்களை தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”  


சீனு ராமசாமி:

இந்தத் தலைப்புக்காக முதலில் சுசீந்திரனை வாழ்த்திக் கொள்கிறேன். இப்படி ஒரு பெயரை தலைப்பாக வைக்கவே ஒரு துணிச்சல் வேண்டும். கண்ணியமான படமாகத்தான் இது இருக்கும் என்பது தலைப்பில் இருந்தே தெரிகிறது. தலைப்பைக் கேட்டதுமே, கதையை கேட்க ஆவல் எழுந்தது. பொறாமையாக இருந்தது. இப்படி இரு கதை எனக்குத் தோன்றவில்லை என்று ஆதங்கப்பட்டேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்.. வேண்டுமென்றால் நூறு ரூபாய் பத்திரத்தில் பார்த்திபன் சாரிடம் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்.
விஷ்ணு, யார் இடத்துக்கும் ஆசைப்படாத ஒரு நடிகன். அவர் இன்னும் பல உயரங்கள் போவார். இமான் பாடல்கள், ஒருமுறை கேட்டாலே நமக்குப் பிடித்துப் போகும். 

சுசீந்திரனிடமிருந்து எனக்கு இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஒன்று.. ஒரு படம் இயக்கி வெளிவரும்போது, அவர் அடுத்த படத்திற்கான லொக்கேஷன் தேடும் வேலையில் இருப்பார். இன்னொன்று, நாம் ஏதாவது லொக்கேஷன் பார்க்கப் போனால், அங்கே ஒரு இடத்தை சுசீந்திரன் வாங்கிப் போட்டிருப்பார். இதைப் பத்தி அவர்கிட்ட கற்றுக்கொள்ள வேண்டும். 

யுகபாரதி

இது எனக்கு வழக்கமான மேடை அல்ல. வசனகர்த்தாவாக எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்காக மிகுந்த மகிழ்வோடும், நெகிழ்வோடும் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். முதல் பாடலை எழுதும்போது பெற்ற அதே மகிழ்ச்சியை.. அதைவிட நூறு மடங்கு இந்தத் தருணத்தில் உணர்கிறேன். ‘அனுபவம் அதிகமாகும்போது அளவு தெரியும்’ என்று ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிகுமார் இங்கே பேசும்போது குறிப்பிட்டார். ரொம்ப சாதாரணமாக ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டார். அதை சுசீந்திரனின் படத்தில் பணியாற்றும்போது உணரலாம். அவ்வளவு கச்சிதமாக படத்தை இயக்கியுள்ளார் 

ஆர். பார்த்திபன் 

‘இந்த மாவீரன் கிட்டு படத்தை டேஷ் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் டேஷ். முதல் டேஷ்ல வாழ்த்த ரெண்டாவது டேஷ்ல வணக்கம்’ என்று ஆரம்பித்தார் ஆர்.பார்த்திபன். இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்பதற்காக அப்படிச் செய்தார். படத்தை ஸ்பீடாக இயக்குவதில் சுசீந்திரன் த பெஸ்ட் என்றார். ‘வழக்கமா பல படங்கள் ஏன் இவ்ளோ லேட்டா இயக்கறாங்க’ன்னு யோசிப்பேன். ஆனா இதுல சுசீந்திரன் செம ஸ்பீட் என்றார்.

‘சுசீந்திரன் ஒரு பெர்ஃபக்‌ஷனிஸ்ட். ஒரு சீனுக்காக பேட்ச் ஒர்க்னு கூப்டாங்க. விக்கெல்லாம் வெச்சுட்டு, மேக்கப்லாம் பண்ணிட்டு வரச்சொன்னாங்க. போனேன். போனா, க்ளோஸப்ல என் கை ஒரு லெட்டரைக் குடுக்கற மாதிரி ஷூட். அதுக்கு யார் கை வேணா காட்டிக்கலாம். ஆனா சுசி விடமாட்டார். அதுவுமில்லாம இப்பலாம் ரசிகர்கள் சின்ன தப்பு செஞ்சாலும் கிழி கிழின்னு கிழிச்சுடறாங்க. தொடரில அவ்ளோ வேகமா ரயில் போறப்ப ஏன் கீர்த்தி சுரேஷ் பாவாடை பறக்கலன்னு கேட்கறாங்க. அதையெல்லாம் யோசிச்சு கவனமா எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு’ என்றார். ஸ்ரீதிவ்யா, விஷ்ணு விஷால், இமான் ஆகியோரைப் பாராட்டிப் பேசி அமர்ந்தார். இந்தப் படத்துக்கப்பறம் விஷ்ணு, மகாவிஷ்ணு ஆகிவிடுவார் என்றார் அவர் பாணியில்.

விஷ்ணு விஷால், சுசீந்திரன் ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர். படப்பிடிப்பில் இருந்ததால் இயக்குநர் எழில் தவிர்த்து, விஷ்ணு விஷாலை இயக்கிய இயக்குநர்கள் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினர். 80களின் பீரியட் ஃப்லிம் என்பதால், எல்லாருக்கும் பாடல் கேசட் கொடுக்கப்பட்டது. அனைவர் முன்னிலையிலும் ‘மாவீரன் கிட்டு’ இசையை படக்குழுவினர் வெளியிட, இயக்குநர்கள் பெற்றுக் கொண்டனர். 

கலை இயக்குநர், ஒளிப்பதிவு இயக்குநர் உட்பட பலரும் வந்து விழாவை சிறப்பித்தனர்.

-பரிசல் கிருஷ்ணா

படங்கள்: தி.குமரகுருபரன்

பின் செல்ல