Published:Updated:

விக்கி டோனருக்கு நியாயம் செய்ததா? நருடா டோனருடா படம் எப்படி

Vikatan Correspondent
விக்கி டோனருக்கு நியாயம் செய்ததா? நருடா டோனருடா படம் எப்படி
விக்கி டோனருக்கு நியாயம் செய்ததா? நருடா டோனருடா படம் எப்படி

"புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஆரோக்யத்துக்கு கேடானது மற்றும் ஸ்பர்ம் எண்ணிக்கைக் குறைய காரணமுமாகும்" என்கிற எச்சரிக்கையுடன் துவங்குகிறது 'நருடா டோனருடா' படம். 2012ல் நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரிப்பில், ஆயுஷ்மான், யாமி கௌதம் நடிப்பில், சூஜித் ஸ்ரீகர் இயக்கி வெளியான 'விக்கி டோனர்' இந்திப் படத்தின் தெலுங்கு வெர்ஷன்.

குழந்தையின்மை பிரச்சனையா "தாத்தாகிட்ட வாங்கடா சரி பண்ணிடலாம்" என்கிற லெவல் டாக்டர் ஆஞ்சநேயலு (தனிகெல்லா பரணி). தன்னிடம் வரும் பேஷன்டுகளின் தேவையை செய்து கொடுக்க ஸ்பர்ம் டோனர் இல்லாமல் அல்லாடுகிறார். அந்த சமயத்தில் தான் விக்ரமை (சுமந்த்) பார்க்கிறார். பார்ட்டி, ஜாலி என திரியும் விஐபி சுமந்த். தனிகெல்லா, சுமந்தை தன் க்ளினிக்கின் டோனராக வரும்படி கேட்கிறார். முதலில் வெறுப்பகி ஓடுபவர், பின்னால் நிறைய பணம் கிடைப்பதால் சம்மதிக்கிறார். அதே நேரத்தில் ஆஷிமா ராயைப் (பல்லவி சுபாஷ்) பார்த்ததும் காதலும் கொள்கிறார். பல்லவி சுபாஷும் காதலுக்கு ஓகே சொல்ல, தான் ஸ்பர்ம் டோனர் என்கிற விஷயத்தை மறைத்து திருமணம் செய்து கொள்கிறார். அதை மறைப்பதால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன, அதை சுமந்த் எப்படி சமாளித்தார் என்பதே மீதிக் கதை.

'விக்கி டோனர்' 2012ன் மிகவும் கவனிக்கப்பட்ட, பல பாராட்டுகளையும் பெற்ற படம். கமர்ஷியலோடு சேர்ந்து விந்து தானம் பற்றிய விழிப்புணர்வையும் சேர்த்திருந்ததால் நிறைய பாசிட்டிவ் விமர்சனங்களையும், விருதுகளையும் ஒரு சேரப் பெற்றது. இதனை தெலுங்கில் அதே ஃப்ளேவரில் கொடுத்த அறிமுக இயக்குநர் மாலிக் ராம் பாராட்டுக்குறியவர்.

ஹீரோ சுமந்த் நடிப்பு நத்தின் ஸ்பெஷல். ரொமான்ஸ் காட்சிகளில் பல்பொடி விளம்பரமாய் சிரிப்பது, சோகமான காட்சிகளில் இறுக்கமான முகம் என ப்ளாஸ்டிக் ரியாக்‌ஷன்களையே கொடுத்து சமாளித்திருக்கிறார். படத்தில் அவருக்கு இந்த ரோலைவிட அவரின் விக் மிகப் பொருத்தமாக இருக்கிறது. 'அச்சம் என்பது மடமையடா'வாக மாறிய 'சட்டென்று மாறுது வானிலை'யில் கௌதம் மேனன் இயக்கத்தில் அறிமுகமாகியிருக வேண்டிய பல்லவி சுபாஷ் ஜஸ்ட் மிஸ்ஸாகி இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். நிறையவே நடிப்பதற்கான இடம் இருந்தும் ஜஸ்ட் பாஸ் ஆதான் ஆக்யிருக்கிறார். இந்த இருவரையும் தாண்டி நம்மைக் கவர்வது தனிகெல்லா பரணி தான். ஸ்பர்ம் டொனேஷனுக்காக சுமந்திடம் கெஞ்சுவதும், இவங்க முகத்தில் இருக்கும் சிரிப்புக்க காரணமா நீ இருக்கப் போற என சுமந்தை சென்டிமெண்டாக சம்மதிக்க வைப்பதுமாக அசத்தியிருக்கிறார். "இப்போ அந்த அரசியல்வாதிக்கு நீ உதவி செஞ்சேன்னா, குழந்தை பிறக்கும். யாருக்கு தெரியும் அதுவே நாளைக்கு அரசியலுக்கு வந்து சி.எம் ஆனதுன்னா, அந்த சி.எம் அப்பா நான் தான்னு நீ பெருமையா சொல்லிக்கலாம்ல" எனப் பல இடங்களில் கிட்டு விசப்பிரகடாவின் வசனங்கள் படத்திற்கு எனர்ஜி ஏற்றுகிறது. 

விக்கி டோனரில் க்ளைமாக்ஸில் வரப்போகும் அந்த அழகான காட்சிக்காக, அதற்கு முந்தைய காட்சிகள் நம்மை தயார்ப்படுத்தி வைத்திருக்கும், அந்த எமோஷன் ரீமேக்கில் சுத்தமாக மிஸ்ஸிங். அதற்கு சமமாக ஹீரோ ஹீரோயினுக்கு இடையேயான ரொமான்ஸையும் "எங்க? இங்க தான இருக்கும்னு சொன்னாங்க" என்ற ரேன்ஜுக்குத் தேட வேண்டியிருக்கிறது. ஸ்ரீசரன் பக்லா இசை செண்டிமெண்ட் காட்சிகளில் மட்டும் ஃபீல் ஏற்றுகிறது. மற்றபடி ஒரிஜினல் 'விக்கி டோனர்' படத்தை மறந்துவிட்டு, பெர்ஃபாமென்ஸையும் பற்றி கவலை கொள்ளாமல் பார்த்தால், ஒரு ஜாலியான படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

என்ன குறைகள் இருந்தாலும் இந்தப் படம் தெலுங்கில் ஒரு தைரியமான, வரவேற்கத்தக்க முயற்சி. இதே போல் அடுத்து இந்தியிலிருந்து தெலுங்கில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கும் 'ஹண்டர்' படம் எப்படி இருக்கும் என்கிற ஆவல் அதிகரிக்கிறது.

- பா.ஜான்ஸன்