Published:Updated:

பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது! #25yearsofBramma

பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது! #25yearsofBramma
பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது! #25yearsofBramma

அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். குறைந்தது 10 படங்களாவது வெளிவரும். அந்தப் பத்து படங்களில் 8 படங்களிலாவது இளையராஜா இசை. இரண்டு கதாநாயகிகள் இருக்கும் படங்களும் அப்போது ட்ரெண்டிங்காக இருந்தன. மினிமம் கியாரண்டி ஹீரோ, இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட். இசைஞானியின் அட்டகாசமான பாடல்கள் என்று ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்கான அத்தனை அம்சங்கள் நிரம்பிய படங்கள் வரிசையில் ஒரு தீபாவளிக்கு வெளியான படம்தான் பிரம்மா. 

சத்யராஜ் ஹீரோவாகவும் பானுப்ரியா, குஷ்பு ஹீரோயின்களாகவும் நடித்த இந்தப் படம்  வெளியான சமயத்தில்தான் குணா, தளபதி படங்களும் வெளியாகின. ஆனால் பிரம்மா அந்தப் படங்களை விட அதிக வசூல் ஆனது. கே.சுபாஷ் இயக்கிய இந்தப் படத்தின் பாணியை பின்னாட்களில் பி. வாசு போன்ற இயக்குநர்களும் ஃபாலோ செய்தனர். இப்போதுதான் டெக்னாலஜி முன்னேற்றத்தில் கம்ப்யூட்டர் மார்ஃபிங், க்ளோனிங் எல்லாம். அப்போது தன் கையே தனக்குதவி என்பதுபோல் ஹீரோ சத்யராஜ் ஓர் அபூர்வமான ஓவியக் கலைஞர். அதாவது ஒரு குழந்தையின் போட்டோவைக் கொடுத்தால் அக்குழந்தை 10 வயதில், 20 வயதில், 50 வயதில் எப்படி இருக்கும் என்பதைத் தத்ரூபமாக வரைந்துவிடுவார். ஒரு விமான விபத்தில் தன் மனைவி பானுப்ரியாவை இழந்த சோகத்தில் வரைவதையே விடுத்து நண்பர் கவுண்டமணியுடன் குடித்துக் கூத்தடித்து வாழ்க்கையை விளையாட்டாக  ஓட்டிக்கொண்ருப்பவரிடம் போலீஸே வந்து உதவி கேட்டு தீவிரவாதியை வரைந்து தரச்சொல்லி கெஞ்சும். ( அக்காங்... இதெல்லாம் அப்பவே ஆரம்பிச்சாச்சுங்கோ)

பலகோடி சொத்துக்கு அதிபதியான குஷ்பு தன் ஐந்து வயதிலேயே காணாமல் போயிருப்பார். அவரின் கார்டியன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வில்லன் விஜயகுமார், சத்யராஜை சந்தித்து குஷ்புவின் சிறு வயது போட்டோவைத் தந்து வரைந்து கொடுக்கச் சொல்வார். வில்லனின் திட்டம்  சொத்துகளைத் தன் பெயரில் மாற்றிக்க்கொள்ள குஷ்புவின் கையெழுத்து வேண்டும், அது கிடைத்ததும் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்பதே. இந்தச் சதி தெரிந்துகொண்ட சத்யராஜும் வில்லனிடம் குஷ்புவின் படம் வரைந்து தருவார். ஆனால் அவர் தருவதோ விபத்தில் இறந்துபோன தன் மனைவியின் படம். ஆனால் பானுப்ரியா இறந்துபோகாமல் உயிரோடு இருக்க...( வெச்சான் பாரு ட்விஸ்ட்டு) சத்யராஜோ குஷ்புவைக் காப்பாற்ற தேடி அலைவார். கண்டுபிடித்துக் காதலிக்கவும் செய்வார். அப்படி இப்படி என்று க்ளைமாக்ஸில் பானுப்ரியாவை வில்லன் கண்டுபிடிக்க, அவரை மீட்க சத்யராஜ், குஷ்புவைக் காட்டிக்கொடுக்க ஒரு சண்டைக்குப் பின் சில பல துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தபிறகு குஷ்பு, சத்யராஜையும் பானுப்ரியாவையும் சேர்த்துவைத்து தியாகியாவார். ( ரெண்டு ஹீரோயின்னா அப்பிடித்தானே முடியணும்!) 

படம் வெளியாகி 25 வருடங்கள் முடிந்தாலும் இப்போதும் இனிக்கும் பாடல்கள் தந்த இளையராஜாவின் எவர்க்ரீன் ஹிட்ஸ், இவளொரு இளங்குருவி பாடல் எஸ் பி. பி-யின் வாய்ஸில் எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் என்று ரெண்டு லட்டு தந்தது. குஷ்புவுடனான வருது வருது இளங்காற்றும் சரி, பானுப்ரியாவுடனான ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் பாடலும் அப்போதும் இப்போதும் கேட்கக் கேட்க இனிமை, பார்க்கப் பார்க்க குளுமை. குஷ்பு தமிழ் இளைஞர்களின் மனதில் சிம்மாசனமிடத் தொடங்கிய காலம் அது. அவரின் அறிமுகப் பாடலுக்கு அப்போது தியேட்டரில் கிளம்பிய விசில் சத்தம் இப்போதும் கேட்பது போல் பிரமை ( இதுக்குதான் பழசெல்லாம் கிளறிவிடக் கூடாதுங்குறது). பானுப்ரியா சும்மாவே ஆடுவார். இதில் தலையில் கரகம் வைக்காத குறையாக அவருக்கும் சத்யராஜுக்கும் கெமிஸ்ட்ரி தூக்கும். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!

கவுண்டமணியின் காமெடிக்கும் குறைச்சல் இல்லாத படம்தான். '' அதுக்கு பேச வராது'' என்பவரிடம் '' அப்போ பாடுமா?'' என்பது கவுண்டர் டச்  டச்.இந்த சீன் உங்களுக்கு தெரியாட்டியும், கண்டிப்பா பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது வசனம் எல்லாம் கேட்டு இருப்பீங்க. எல்லா மசாலாவும் சரிவிகிதத்தில் கலந்து ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளி சந்தோசத்தைத் தந்ததெல்லாம் ஒரு காலம் பாஸ். இப்போது நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடலாம். அவ்வளவுதான். 

- கணேசகுமாரன்

அடுத்த கட்டுரைக்கு