த்ரிஷா திருமணம் ஏன் நின்றது ? | Trisha reveals Why they cancelled their wedding

வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (07/11/2016)

கடைசி தொடர்பு:19:08 (07/11/2016)

த்ரிஷா திருமணம் ஏன் நின்றது ?

த்ரிஷா

இன்னும் 6 மாதங்களில் 34வது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார் த்ரிஷா கிருஷ்ணன். 17 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒரே நடிகை இவராகத் தான் இருப்பார். த்ரிஷாவின் மார்க்கெட் அவ்வளவுதான் என கோடம்பாக்கம் ஆரூடம் சொன்ன வேளையில் 'என்னை அறிந்தால்', 'அரண்மனை 2', 'பூலோகம்', 'கொடி' என மீண்டும் பரபரப்பானார்.

அதிக வதந்திகளில் சிக்கிய நடிகைகளிலும் த்ரிஷாவுக்கே முதலிடம். நடிகர் விஜயுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டவர்...
அதன் பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசு... சினிமா தொடர்பான மற்றும் சினிமா தொடர்பில்லாத எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் சேர்ந்தே வலம் வருகிற அளவுக்கு அந்த ஜோடி பிரபலமானது. இருக்கு... ஆனா இல்லை என்கிற ரேஞ்சிலேயே தொடர்ந்தது அந்த நெருக்கம். அந்தக் கிசுகிசு அடங்குவதற்குள்ளாகவே தொழிலதிபரும் படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் திடீர் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டார் த்ரிஷா. அந்த வருட இறுதியில் திருமணம் நடக்கும் என்றும் அறிக்கை விட்டார்.

2015 ஜனவரி 23ம் தேதி, வருண் மணியன் வீட்டில்,  இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.  இருவருக்கும் நெருக்கமானவர்களுடன், அதிக ஆடம்பரம் இல்லாமல் நடந்தது. நிச்சயம் முடிந்த அடுத்தடுத்த மாதங்களிலேயே இவர்களது திருமணம் நடக்காது என்பது பற்றிய செய்திகள் கிளம்பின. இருவரும் பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்றும் செய்திகள் கசியத் தொடங்கின. வருண் மணியன் தயாரிப்பில் தான் நடிக்க ஒப்புக் கொண்ட படத்திலிருந்தும் காரணமே சொல்லாமல் திடீரென விலகினார் த்ரிஷா.
நிச்சயம் முடிந்த மூன்றே மாதங்களில், 'எங்கள் திருமணம் நடக்காது' என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக அறிவித்தார் த்ரிஷா.
இந்த முடிவின் பின்னணியில் பல காரணங்கள் அடுக்கப்பட்டன.

வருண் மணியனின் பெற்றோருக்கு த்ரிஷாவைப் பிடிக்கவில்லை.... திருமணத்துக்குப் பிறகும் த்ரிஷா சினிமாவில் தொடர்வதில் வருண் உட்பட அவரது வீட்டார் யாருக்கும் சம்மதமில்லை...என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன.  த்ரிஷா- வருண் நிச்சயதார்த்தத்துக்கு திடீர் வருகை தந்த தனுஷ் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றுகூட பேசப்பட்டது. தனுஷுக்கும் வருணுக்கும் இடையில் பிரச்னை ஓடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் த்ரிஷாவுக்காக வந்த தனுஷின் மேல் மொத்த பழியும் போடப்பட்டது.

ஆளாளுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும், த்ரிஷா தரப்பிலிருந்து நிஜமான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. 'இது எங்க வீட்டுப் பெரியவங்களோட முடிவு... அவங்க முடிவெடுத்தா சரியாதான் இருக்கும்...' என்கிற சிம்பிளான பதிலோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் த்ரிஷா.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்து விட்ட நிலையில் இப்போது திருமணம் நடக்காமல் போனதற்கான காரணத்தைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் த்ரிஷா. 'கொடி' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'தர்மயோகி' சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தபோதுதான் த்ரிஷா அதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

''கல்யாணத்துக்குப் பிறகும் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதை அவர் விரும்பலை. அதனாலதான் எங்க கல்யாணம் நடக்கலை...'' என உண்மையை உடைத்திருக்கிறார். அது மட்டுமின்றி, தனக்கு எவ்வளவு வயதானாலும், வயதுக்கேற்ற கேரக்டர்களில் கடைசி வரை நடித்துக்கொண்டே இருக்க விரும்புவதையும் தெரிவித்திருக்கிறார்.

த்ரிஷாவின் திருமணம் கிட்டத்தட்ட எல்லோராலும் மறக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது திருமணம் நின்றுபோனதற்கான காரணத்தைப் பற்றி அவரே பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகியிருக்கிறது.


-ஆர்.வைதேகி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்