Published:Updated:

'செல்லாது செல்லாது..’ அறிவிப்பால் தள்ளிப் போகும் தமிழ்ப் படங்கள்!

Vikatan Correspondent
'செல்லாது செல்லாது..’ அறிவிப்பால் தள்ளிப்  போகும் தமிழ்ப் படங்கள்!
'செல்லாது செல்லாது..’ அறிவிப்பால் தள்ளிப் போகும் தமிழ்ப் படங்கள்!

1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது  என்ற  மோடியின் அறிவிப்பால் தமிழ்ப்  படங்களின் ரீலீஸ்  தள்ளிப்போயுள்ளன.

கருப்புப் பணத்தின்  தலைவன் என்று சினிமாத்துறையைத் தான் கூறுவார்கள். பெரும்பாலும்  படங்கள் தயாரிக்கப்படுவது  கறுப்புப் பணத்தை வைத்து தான் .இதனால்  தான் நடிகர்களுக்கு கோடியில் சம்பளங்கள் கொடுக்க முடிகிறது. பெரிய  நடிகர்களின் படங்கள்  அனைத்தும் 40 கோடிகளுக்கு  மேல் தான்  தயாரிப்பு  செலவு ஆகிறது.

அதற்கு அவர்கள்  காட்டும்  கணக்குகளும்  போலியானவை  தான். அதனால்  தான் பெரிய  படங்கள் வெளியாகும்  போது  எல்லாம்  அதன்  தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரி துறையினர் சோதனை  செய்கின்றனர். தற்போது ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது  என  அறிவித்ததன்  மூலம் என்ன  சிக்கல்களை   சந்திக்க  உள்ளது தமிழ்  சினிமா என்பதுதான் இப்போதைய கோடம்பாக்க ஹாட் டாக்.

ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது  என்று அறிவித்ததில் உடனடியாக பாதித்துள்ளவை இந்த மாதம் வெளியாக உள்ள  திரைப்படங்கள்  தான். இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 172 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும், இந்த நவம்பர் மாதத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவரத் தயாராக உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த வாரம் 11ம் தேதி சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’, ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ரானி மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’, காளிதாஸ், ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

18ம் தேதி விஷால், தமன்னா நடித்துள்ள ‘கத்திச் சண்டை’, விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள ‘சைத்தான்’ ஆகிய படங்கள் வர உள்ளன. 25ம் தேதி ‘சென்னை 28 இரண்டாம் பாகம், ப்ரூஸ் லீ’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவை தவிர ‘புரியாத புதிர், மோ, சவரக்கத்தி, நெஞ்சம் மறப்பதில்லை, கவலை வேண்டாம்,’ ஆகிய படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. இந்தப் படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றி இதுவரை அறிவிக்கவில்லை.

மேலும், நவம்பர் மாதப் பட்டியலில் மேலும் சில படங்கள் இணைய வாய்ப்புள்ளது. இதனால், எப்படியும் இந்த ஆண்டும் கடந்த சில ஆண்டுகளைப் போலவே வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரூபாய் 500,100 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்று உள்ள நிலையில், திரையுலகம் விழிபிதுங்கி நிற்கிறது. இந்த வாரம் வெளியாக  உள்ள 'கடவுள்  இருக்கான்  குமாரு' திரைப்படம்  17  தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதே போன்று  அச்சம்  என்பது  மடமையடா படமும் தேதி  தள்ளி  போகும் என்று கூறப்படுகிறது.இது குறித்து சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று (புதன்) அவசர ஆலோசனை கூட்டம்  நடைபெற்றுள்ளது.

அது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர்  ஒருவர், ''நாளைக்கு  ஒரு படம்  ரீலீஸ்  ஆகுதுன்னா  'பேமெண்ட்' இன்னைக்கே  வரணும்.அப்படி தான்  இதுவரை  நடந்துகிட்டு  இருக்கு. ஆனா இப்ப இந்த பிரச்னையால இந்த மாதம் ரீலீஸ் படங்களுக்கு வாய்ப்பு  குறைவு. அதுவும் இல்லாம படங்கள்  எல்லாத்துக்குமே பைனான்ஸ்  பிரச்சனைகள் நெறையா  இருக்கும். இப்ப கூட அச்சம்  என்பது  மடமையடா  படத்துக்கு 20 கோடிக்கு மேல கடன்  கொடுக்க வேண்டி இருக்கு.இது எல்லாம் இப்ப எப்படி தீர்க்க  போறாங்கன்னு  தெரியல. இனிமேல் சினிமாக்குன்னு யாரும்  பைனான்ஸ்  கொடுக்க  மாட்டாங்க. நடிகர்கள் இயக்குனர்கள் சம்பளம்  குறையும். அதே  நேரத்துல இந்த  மாதம்  வெளியாக  வேண்டிய  படங்களை, கடனுக்கு விநியோகஸ்தர்களிடம் கொடுக்க  முடியாது. ஏன் என்றால் இப்போது கொடுத்தால் அது கறுப்பு பணமாகக்  கணக்கில்  வரும்.  ஆனால் படத்தின்  வசூல் ஒயிட் மணியாக மாறும்போது அதை  விநியோகிஸ்தர்கள் திருப்பித் தருவார்கள்  என்ற  நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு  இல்லை.  அதனால்  இந்த  மாதம் வெளியாக  உள்ள  படங்கள் அனைத்துமே  தள்ளிப்  போகவே  வாய்ப்பு உள்ளது .

இது குறித்து பேசிய திரைப்பட விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ''சினிமா இனி மேல தான் நல்லா  இருக்கும். ரியல் எஸ்டேட்  காரங்களும் கறுப்பு  பணம்  வச்சு  இருக்குறவங்களும் வந்து  பதுங்குற  இடமா சினிமா  இனிமேல்  இருக்காது. இப்ப கூட படங்கள்  தள்ளி வைக்கப் பட்டு  இருப்பது வங்கிகள்  விடுமுறை  என்பதால் தான். தற்போது  சினிமாவில்  உள்ள செலவினங்கள்  எல்லாம்  50 சதவிகிதம்  இனிமேல்  குறையும். நடிகர்கள்  சம்பளம்,சினிமாவை  விநியோகம் எல்லாமே  விலை  குறையும், திரையரங்கு கட்டணம்  குறையும்  மொத்தத்துல இனிமேல்  தான்  சினிமா  நல்லா  இருக்க  போகுது" என்றார்  ஆனந்தமாக.

மோடியின் அதிரடிக்கு பெரிய விலையை தமிழ் சினிமா கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான நிலை குறித்து நம்மிடம் பேசிய திரைப்பட  தயாரிப்பாளர்  சங்க துணை தலைவர்  தேனப்பன்,"இந்த  நடவடிக்கை இந்தியாவில்  மிக  பெரிய  மாற்றங்களை  ஏற்படுத்தும். திரைப்படத் துறையைப் பொறுத்த வரை இது ஒரு சிக்கலான நிலைமை தான்.  தற்போது  படப்பிடிப்பில் பணியாற்றி  வரும் தொழிலார்களுக்கு சம்பளம்  வழங்குவதில்  இருந்து பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்த வாரம் வெளியாக உள்ள  படங்களுக்கு வர வேண்டிய பணம் விநியோகிஸ்தர்களிடம்  இருந்து வருவதில் உள்ள  சிக்கல் உள்ளது. அதே போல் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சிரமம்  இல்லாத  வகையில் இந்த  பிரச்சனையை  எப்படி தீர்ப்பது  என்று நாங்கள் முடிவெடுக்கவுள்ளோம் " என்றார்.

- பிரம்மா